கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மக்களவை தொகுதி- இன்றைக்கு இந்தியாவே உற்று நோக்கும் இடமாக மாறிவிட்டது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் அங்கே போட்டியிடுகிறார்.
எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நிற்கிறார்- நடிகை சுமலதா.அவருக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கிறது.
சுமலதா- தெலுங்கு பேற்றோர்களுக்கு மகளாக சென்னையில் பிறந்தவர்.1979 ல் ஆந்திர அழகியாக தேர்வு செய்யப்பட்டு-அனைத்து பத்திரிகைகளிலும் அட்டையில் இடம் பிடித்தார்.
தமிழில் ‘திசைமாறிய பறவைகள் ‘ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அப்போது அவருக்கு வயது 15. தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி மொழிகளில் 220 படங்களில் நடித்துள்ள சுமலதாவுக்கு 6 மொழிகளில் பேசத்தெரியும்.
கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்தவர்.
மாண்டியா தொகுதி- அம்பரீஷ் 3 முறை வென்ற தொகுதி.4 மாதங்களுக்கு முன்பு அம்பரீஷ் மரணம் அடைய- மாண்டியாவில் சுமலதா போட்டியிட வேண்டும் என அம்பரீஷ் ரசிகர்கள் வலியுறுத்த –நேற்று வேட்புமனு தாக்கல் செய்து விட்டார்- சுமா.
சுமலதாவுக்கு எதிராக நிற்கும் நிகிலும் சினிமா நடிகர்தான். ஆனால் பெரும்பாலான கன்னட நட்சத்திரங்கள் சுமலதாவுக்கு ஆதரவாக உள்ளனர். உள்ளூர் காங்கிரசாரும் சுமலதா பக்கம் தான் இருக்கிறார்கள்.
மாண்டியாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்., காங்கிரசும் ஆதரிப்பதால் பேரன் நிகில் எளிதில் வெற்றி பெறுவார்- மத்திய அமைச்சர் ஆக்கலாம் என கனவில் மிதந்தார்- கவுடா. கனவை பொசுக்கி விட்டார் -சுமலதா.
கூட்டணி கட்சிகள் வெற்றிக்காக மாநிலம் முழுதும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார் குமாரசாமி.ஆனால் மாண்டியாவுக்குள் அவரை முடக்கி போட்டு விட்டார்-சுமலதா.
–பாப்பாங்குளம் பாரதி