டெல்லி: டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி வீட்டில் இருந்து வெடிகுண்டுகள், தற்கொலைப்படை ஜாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தகீம் கான் என்பவர் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகையால் கடந்த ஓராண்டாக அவரது நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். இந் நிலையில் டெல்லியில் வாகனத்தில் சென்ற அவரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது முஸ்தகீம் கான், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் து சுட ஆரம்பித்தார். போலீசாரும் தாக்குதல் நடத்த, இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை மூண்டது. இறுதியில் முஸ்தகீம் கானை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். முஸ்தகீம் கானிடம் இருந்த வெடிகுண்டுகள் வெடிக்கும் நிலையில் தயாராக இருந்தது.
ஆகவே அவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில், முஸ்தகீம் கைது செய்யப்பட்டவுடன் அவரது கிராமத்தில் அதிகாரிகள் முழு விசாரணையில் இறங்கினர்.
அவர் பூமிக்கடியில் பல சிறிய ரக வெடிகுண்டுகளை வெடித்து சோதனை மேற்கொண்டது கண்டறியப்பட்டு உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் கொடியும், அது தொடர்பான ஆவணங்களும் சிக்கி உள்ளன. 4 தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி, 15 கிலோ வெடி பொருட்கள் உள்ளிட்டவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
[youtube-feed feed=1]