டெல்லி: மத்தியஅரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை (என்இபி 2019) குறித்து பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் இன்றுமுதல் கருத்து தெரிவிக்கலாம் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 36 ஆண்டுகளாக அமலில் உள்ள கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி கடந்த ஆண்டு  மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்து வரை அறிக்கையை கடந்த ஆண்டு (2019) வெளியிட்டது.  இதில் பல்வேறு சர்ச்சைக்குரிய பகுதிகள் உள்ளதாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, அது மாற்றப்பட்டது.

இதையடுத்து, சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை மத்தியஅரசு மீண்டும் வெளியிட்டது. இதிலும் பல குளறுபடிகள் இருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில,  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, என்இபி 2019 குறித்து,  நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்களின் கருத்தை அகேட்டறிய முடிவு செய்துள்ளது.

இதை கேட்டறிய மத்திய கல்வி அமைச்சகம் https://Innovateindia.mygov.in/nep2020 என்ற புதிய இணைய தளத்தை தொடங்கி உள்ளது. இந்த இணையதளத்தில்,  ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் இன்று (ஆகஸ்டு 24ந்தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து டிவிட் பதிவிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ‘தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. எனவே, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களின் கருத்தை கேட்டறிய முடிவு செய்துள்ளோம்,’ என தெரிவித்து உள்ளார்.