பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளான 5 இலவச திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவச பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஆயிரம் ஊக்கத்தொகை, வேலையில்லாத பட்டதாரிகள் (தலா ரூ.3,000) மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு (தலா ரூ.1,500) உதவித் தொகை, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

அரசின் இந்த இலவச திட்டங்களால் கஜானாவை காங்கிரஸ் அரசு காலி செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நிதிச்சுமையால் கர்நாடக அரசு 5 உத்தரவாத திட்டங்களையும் நிறுத்தி விடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கர்நாடகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை நேற்று அதிரடியாக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கர்நாடகத்தில் பெட்ரோல் மீதான 25.92 சதவீதமாக இருந்த விற்பனை வரியை நேற்று 29.84 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் மீதான விற்பனை வரியை 3.92 சதவீதம் உயர்த்தி உள்ளது.

மேலும் டீசல் மீதான விற்பனை வரி 14.34 சதவீதமாக இருந்தது. அந்த விற்பனை வரியை 18.44 சதவீதமாக அரசு அதிகரித்துள்ளது. அதன்படி டீசல் மீதான விற்பனை வரி 4.1 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி உயர்வு நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை திடீரென்று கர்நாடக அரசு அதிகரித்துள்ளதால், , பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.84 ஆக இருந்தது. விற்பனை வரி 3.92 சதவீதம் அதிகரித்துள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3 உயர்ந்து ரூ.102.84 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.85.93 ஆக இருந்தது. டீசல் மீதான விற்பனை வரியை 4.1 சதவீதத்திற்கு மாநில அரசு உயர்த்திருப்பதால், ஒரு லிட்டர் டீசல் ரூ.89.43 ஆக உயர்ந்துள்ளது.