சென்னை:

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்க பணி நடக்கும் இடத்துக்கு அருகில் திடீரென பள்ளம் ஏற்பட்டு பேருந்தும், காரும் சிக்கின. சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார், மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.  அப்போது அவர், “மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடங்களில் எல்லாம் இது போல திடீரென பள்ளம் ஏற்படுவது சகஜம்தான்.

டில்லியில் மெட்ரோ ரயில் பணி நடக்கும்போது பலமுறை நடந்திருக்கிறது.

ஆனால் சென்னையில் இதுதான் முதன் முறை. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரழப்போ காயமோ ஏற்படவில்லை. பள்ளத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டுவிட்டது.

பேருந்தும் விரைவில் மீட்கப்படும். மெட்ரோ ரயில் பணி நடக்கும் பகுதியில் மண் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பது தவறு. முறையாக மண் பரிசோதனை நடந்தது. இப்படி பள்ளம் ஏற்பட்டது எதிர்பாராமல் நடந்தது” என்று ஜெயக்குமார் தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார், “இதுபோனற பள்ளம் ஏற்படுவது இதுவே முதல் முறை” என்று சொன்னபோது, செய்தியாளர்கள், “ஏற்கெனவே சில முறை இப்படி நடந்திருக்கிறதே. அதுவும் அண்ணா சாலையிலேயே கடந்த மார்ச் 30ம் தேதி நடந்திருக்கிறதே” என்று கேட்டபோது, அக் கேள்வியை கவனிக்காதது போல சென்றுவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார்.  மேலும், நாளை மாலைக்குள் இப்பகுதி சீர் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

( அருகிலுள்ள படம் கடந்த மார்ச் 30ம் தேதி அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளம்)