மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் 20 வாரிசுகள் இடம்பெற்றுள்ளனர் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடியின் அமைச்சரவையில் 71 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
2019ல் இந்த கூட்டணி வெற்றி பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவாக மொத்தம் 293 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது அதில் பாஜக மட்டும் 60 இடங்களை இழந்திருக்கிறது.
243 இடங்களை மட்டுமே பெற்றுள்ள பாஜக கூட்டணி கட்சிகளின் தயவோடு ஆட்சி அமைத்துள்ள நிலையில் இதனை திசை திருப்பும் விதமாக கூட்டணியில் எந்தவொரு நிர்பந்தமும் இல்லை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இருப்பினும், இந்த கூட்டணியில் வெற்றிபெற்றுள்ள 293 உறுப்பினர்களில் நான்கில் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்துள்ளது அதில் ராஜ்ய சபா உறுப்பினர்களும் அடக்கம்.
பதவியேறுள்ள 71 அமைச்சர்களில் சுமார் 30 சதவீதம் பேர் அதாவது 20 பேர் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா மகன் எச்.டி. குமாரசாமி, முன்னாள் பிரதமர் சரண் சிங் பேரன் ஜெயந்த் சவுத்ரி, பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் மகன் ராம் நாத் தாக்கூர், ஹரியானா முன்னாள் முதல்வர் ராவ் பிரேந்திர சிங் மகன் ராவ் இந்தர்ஜித் சிங், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் பேரன் ரவ்னீத் சிங் பிட்டு
முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியா மகன் ஜோதிராதித்ய சிந்தியா, அருணாச்சல பிரதேச முதல் தற்காலிக சபாநாயகர் ரிஞ்சின் காரு மகன் கிரண் ரிஜிஜு,
முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான், முன்னாள் மத்திய அமைச்சர் யெரன் நாயுடு மகன் ராம் மோகன் நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் மகன் பியூஷ் கோயல், முன்னாள் எம்பி ஜெய்ஸ்ரீ பானர்ஜி மருமகன் ஜேபி நட்டா, முன்னாள் எம்.பி ஜிதேந்திர பிரசாத் மகன் ஜிதின் பிரசாத்,
உ.பி. முன்னாள் அமைச்சர் மகாராஜ் ஆனந்த் சிங் மகன் கீர்த்தி வர்தன் சிங், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஏக்நாத் காட்சே மருமகள் ரக்ஷா காட்சே, முன்னாள் எம்.பி சுபாவதி தேவி மகன் கமலேஷ் பாஸ்வான், மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாக்கூர் மகன் சாந்தனு தாக்கூர், ம.பி. முன்னாள் அமைச்சர் கௌரிசங்கர் ஷெஜ்வார் மைத்துனர் வீரேந்திர குமார் காடிக்,
பீகார் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் பிரசாத் யாதவ் மனைவி அன்னபூர்ணா தேவி, முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மகன் தர்மேந்திர பிரதான்,
பகுஜன் சமாஜ் கட்சி நிறுவன தலைவர்களில் ஒருவரும் அப்னா தளம் கட்சி நிறுவனருமான சோனேலால் படேல் மகள் அனுப்ரியா படேல்
உள்ளிட்ட 20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம்கொடுக்கப்பட்டுள்ளது.
வாரிசு அரசியலுக்கு எதிராக நரேந்திர மோடி மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அவரது அமைச்சரவையிலேயே இத்தனை வாரிசுகளுக்கு இடமளித்திருப்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.