டில்லி
மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.10000 லிருந்து ரூ.15000 ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாற்று எரி சக்தி மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி, மின் வாகனங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாற்றுச் சக்தி மேம்பாட்டு நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
“கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டில் மின்சார வாகனங்களுக்கு விரைவில் மாறவும், மின்சார வாகனங்களை தயாரிக்கும் ஃபேம் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இரண்டாவது ஃபேம் இந்தியா திட்டம் 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கு மொத்த பட்ஜெட் உதவி ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டத்தில் 7090 மின்சார பேருந்துகள், 5 லட்சம் 3 சக்கர மின்சார வாகனங்கள், 55,000 மின்சார கார்கள், 10 லட்சம் 2 சக்கர மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை மின்சார வாகனங்களைத் தயாரிக்க 38 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன இந்நிறுவனங்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை 19-ஆம் தேதி வரை, நாட்டில் 5,17,322 மின்சார வாகனங்கள் தயாரித்துள்ளன.
* ஃபேம் -2 திட்டத்தின் கீழ், இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான ஊக்கத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* பேட்டரி விலையைக் குறைக்க, நவீன பேட்டரி தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
* மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது;
* மின்சார வாகனங்களுக்கு அனுமதி, சாலை வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பதற்கான அறிவிப்பையும், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.