காண்ட்வா, மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் நடந்த சுவாமி விவேகானந்த வியக்கியான்மாலா என்னும் நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி உரையாற்றி உள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காண்ட்வா மாவட்டத்தில் சுவாமி விவேகானந்த வியக்யான் மாலா என்னும் சொற்பொழிவுத் தொடர் ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த சொற்பொழிவுத் தொடரில் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆன சுப்ரமணியன் சுவாமி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் ஆட்சேபத்துக்கு உரியதாக எதுவும் இல்லை. இதை மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கோரி உள்ளனர். கடந்த 2003 ஆம் வருடம் நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் இதை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி உள்ளார். தற்போது ஆளும் பாஜக அதைச் செய்துள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அதன் தாக்கத்தால் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இந்த நிலையை மாற்றி இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்த வேண்டும்.
இந்தோனேசிய நாட்டு கரன்சி நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர். அதனால் அந்நாட்டின் பண மதிப்பு அதிகரித்து வருகிறது. இதைப் போல் இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமியின் படம் அச்சிட்டால் இந்திய ரூபாய் மதிப்பு உயரும். இதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். இது குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.