டில்லி

டாடா குழுமம் நிர்வாகத்தில் உள்ள பிரக்ரசிவ் எலக்டரோல் டிரஸ்ட் நிறுவனத்திடம் இருந்து பாஜக நன்கொடை பெற்றதற்கு மூத்த பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்ற வருடம் பாஜகவுக்கு நன்கொடையாக ரூ. 743 கோடி கிடைத்துள்ளது.   இது மற்ற கட்சிகளை விட மும்மடங்கு அதிகமாகும்.  இதில் அதிகபட்சமாக டாடா குழுமம் நிர்வகிக்கும் பிராக்ரசிவ் எலெக்டரொல் டிரஸ்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.357 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.   இது மொத்த நன்கொடையில் கிட்டத்தட்ட பாதி அளவு ஆகும்.   இது கடந்த 16 வருடங்களில் மிகவும் அதிகமாகும்.

கட்சிகளின் மொத்த வருமானம் என்பது இந்த நன்கொடைகளை விட மிகவும் குறைவாகும்.   உதாரணமாக 2017-18 ஆம் வருடம் பாஜகவுக்கு ரூ 437 கோடியும் காங்கிரசுக்கு ரு.27 கோடியும் நன்கொடை கிடைத்தன.    அதே வேளையில் அந்த ஆண்டு பாஜகவின் வருமானம் ரூ.1027 கோடியாகவும், காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் ரூ.199 கோடியாகவும் இருந்துள்ளன.

டாடா நிறுவனத்திடம் இருந்து அதிக அளவில் பாஜகவுக்கு நன்கொடை அளிக்கப்பட்டது கடும்  சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.    தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை முழுவதுமாக தனியாருக்கு மாற்ற அரசு முன் வந்துள்ளது.  இந்த நிறுவனத்தை வாங்க விரும்பும் நிறுவனங்களில் டாடா குழுமம் முக்கிய இடத்தில் உள்ளது.   எனவே இந்த நன்கொடை அளிப்புக்குப் பல எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமியும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.  சுப்ரமணியன் சாமி தனது டிவிட்டர் பதிவில், “டாடா நிறுவனம் ஒரு மாபெரும் தொகையை பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது.   இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தை தாங்கள் பெற இது உதவலாம் என்னும் சர்ச்சையை உருவாக்கக் கூடும்” என பதிந்துள்ளார்.