டில்லி:

‘‘பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் இருக்கும் செயல்படாத சொத்துக்கள் விவகாரத்தில் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி மிகப்பெரிய சர்க்கஸ் கலைஞர்’’ என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்ரமணிய சாமி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இருக்கும் செயல்படாத சொத்துக்களின் விவகாரத்தில் கவுதம் அதானி மிகப் பெரிய சர்க்கஸ் கலைஞராக (சர்க்கஸ் பார் தாவும் விளையாட்டு) உள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அதானி நெருக்கமானவராக நம்பப்படுகிறது. எனினும் அவர் சரியாக இருக்க வேண்டும்.

இல்லை என்றால் அவரிடம் இருந்து வங்கி கடன்களை திரும்ப வசூலிக்க கோரி பொது நல வழக்கு தொடர்வேன்’’ என்று தெரிவித்துள்ளார். சுப்ரமணிய சுவாமியின் இந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டுள்ளது. பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து அதானி குழுமம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ‘‘கடன் விவகாரத்தில் நாங்கள் ஆரம்பம் முதலே விடாமுயற்சியுடன் சரியான முறையில் செயல்பட்டு வருகிறோம். நீண்ட காலமாக பொதுத் துறை வங்கிகளிடம் கடன் பெற்று வருகிறோம். இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘இதில் 50 சதவீதத்தை விட குறைவாக ரூ.34 ஆயிரம் மட்டுமே கடன் பெற்றுள்ளோம். 20 ஆண் டுகளாக உலக தரத்திலான பல திட்டங்கள் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.