வலி – சக்கரங்கள் சிரிக்கின்றன

Must read

முன்பெல்லாம் நடுத்தட்டுக் குடும்பங்களில் எப்போதாவதுதான் தொடர் வண்டிகளில் வெளியூர்ப் பயணம் இருக்கும். ஆண்டுக்கு  ஒன்று அல்லது  இரண்டு  முறை! ஒரு வாரத்திற்கு முன்பே அதற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கும். பெரும்பாலும்   உணவு, தண்ணீர் (அதற்கென்று ஒரு கூஜா) எல்லாவற்றையும் உடன்  எடுத்துக்கொண்டு போகும் பழக்கம் இருந்தது. ஆக மொத்தம், பயணம் செய்கின்றவர்கள் எண்ணிக்கையை விட, அவர்கள் கொண்டுபோகும் பொருள்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்.

சென்னைக்கோ, திருச்சிக்கோ வந்து இறங்கியவுடன், தொடர்வண்டி நிலைய நடைமேடையில், சிவப்புச் சட்டையுடன் நிறையப் பேர் ஓடி வருவார்கள். சுமை தூக்கும் அந்தத் தொழிலாளர்களுக்குப் “போர்ட்டர்கள்’  என்று பெயர். எனக்கு நினைவு இருக்கிறது. நான் சிறுவனாக இருக்கும்போது, என் அப்பா அவர்களோடு பேரம் பேசி முடிக்க, அவர்களில் ஒருவர் தன் தலையிலும், தோளிலும் பொருள்களை எடுத்துக்  கொண்டு ஓடும்போது, வெறும் கை வீசிக்கொண்டு நடக்கும் எங்களால் அவர்களுக்கு இணையாக ஓட முடியாது. அவ்வளவு விரைந்து மாடிப்படிகளில் நடப்பார்கள்., நடைமேடைகளில் ஓடுவார்கள்.  தோளில் ஏறும் சுமைகளின் அளவைப் பொறுத்து,  அவர்களின் பொருளாதாரச் சுமைகள் குறையும்.

இப்போதெல்லாம், அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. சில ஊர்களில் அவர்களைக் காணவே இல்லை. எங்கே போனார்கள், என்ன ஆயிற்று அவர்களுக்கு?

அவர்களின் தொழிலையும், வாழ்வையும், சக்கரம் வைத்த,  கைகளால் இழுத்துக் கொண்டு செல்லக்கூடிய  பயணப் பெட்டிகள் பறித்துக்கொண்டு விட்டன.  தொடர்வண்டியை விட்டு இறங்கி, பையின் ஓர் ஓரத்தில் இருக்கும் கம்பியை ஒருவர் மேலே உயர்த்தும்போது, சுமை தூக்கும் தொழிலாளியின் அன்றைய வருமானத்தில் ஐம்பதோ, நூறோ குறைந்து விடுகிறது. சைமன் என்னும் ஓர் இளைய வயதுத் தொழிலாளி சொன்னார், “அந்தச் சக்கரம் எங்களப் பாத்து சிரிக்குது சார், நாங்க வந்திட்டோம், இனி ஒங்களுக்கு வேல இல்லைங்குது”. பக்கத்தில் இருந்தவர், “சின்ன வாண்டுங்க கூட, ஒரு பெட்டிய இழுத்துகிட்டு போகுதுங்க” என்றார்.  உண்மைதான். ஒவ்வொரு வளர்ச்சிக்குள்ளும் இன்னொரு தேய்மானம் இருக்கிறது. மீண்டும் பழமைக்குத் திரும்ப முடியாது.

 

அந்த சிவப்புச் சட்டைத் தோழர்களின் துயரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவர்களை நேரில் சந்தித்து உரையாடவும், உயர் அதிகாரிகளோடு பேசி உண்மைகள் பலவற்றை அறிந்துகொள்ளவும், தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான ஜே.கே. புதியவன் உதவினார். நானும், தோழர்கள் மாறன், குமரன் ஆகியோரும் சென்னை எழும்பூர், சென்ட்ரல் தொடர்வண்டி நிலையங்களுக்குச் சென்று இரு தரப்பினரையும் சந்தித்தோம்.

இரண்டு நிலையங்களிலுமாகச் சேர்த்து 1000 பேருக்கு மேல் இருந்துள்ளனர். இன்று, எழும்பூரில் 120 பேரும் , சென்ட்ரலில் 297 பேரும் மட்டும்தான் உள்ளனர். இப்போது இருப்பவர்களின்  எண்ணிக்கையும் மெல்ல மெல்லக் குறைந்துகொண்டேதான் இருக்கிறது. மாநகரங்களைத் தாண்டிச் சின்ன சின்ன ஊர்களுக்குப் போகும்போது, நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.

இப்படித் தொழிலை விட்டே அவர்கள் போவதற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன. முதல் காரணம் அந்தச் சக்கரங்கள்தான். இரண்டாவது காரணம், அவர்களில் பலர் ‘கேங் மென்’ பணிக்கு அனுப்பப்பட்டனர். அது நல்ல வேலைதான். அதற்காக அவர்களில் பலர், ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவிற்கு நன்றி சொல்கின்றனர்.  “அவர்தான் சார் எங்களை பத்திக் கொஞ்சமாவது நெனைச்சுப் பாத்தார். கேங் மென் வேல போட்டுக் கொடுத்து நிரந்தரமா ஆக்குனாரு” என்கின்றனர்.

ஆனால் மேல் அதிகாரிகள் அந்த வேலையில், சுமை தூக்கும் இந்தத் தொழிலாளர்கள் நிலைக்கவில்லை என்று கூறுகின்றனர். பலர் அந்த வேலையை விட்டுப் போய்விட்டனர் என்றும் கூறினர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சற்று நம்பும்படியாகத்தான் இருந்தது. “இவுங்க எல்லாம் அன்றாடம் பணம் பாத்துப் பழகினவுங்க. கேங் மென் வேலையில மாசச் சம்பளந்தான். அது அவுங்களுக்கு ஒத்து  வரலே” எனக் குறிப்பிடுகின்றார்கள். கேங் மென் என்பது ஏழெட்டு கிலோ மீட்டருக்கு நடந்தே சென்று தண்டவாளங்களை மற்றும் தொடர்வண்டிப் பாதையைச் சரிபார்ப்பது. இங்கே மக்களோடும், நண்பர்களோடும் வாழ்ந்து பழகியபின், தனிமையில், வெய்யிலில் நடப்பது என்பதும் அவர்களுக்கு ஏற்றதாக இல்லாமல் போயிருக்கலாம்.

மக்கள் சுமைகளைக் கொடுப்பது குறைந்தபின், வண்டிகளில் சரக்குகளை (பார்சல்) ஏற்றும் பணிக்குப் பலரும் செல்கின்றனர். ஆனால் அதற்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கப்படுகின்றது. எங்களைச் சந்திக்கக் கூடிய பலரும் ஒரே குரலில் அந்தக் குறையைத்தான் எடுத்துக் கூறினார்கள். அதில் நியாயமும் இருந்தது. ஒரு டன் (1000 கிலோ) சரக்கு ஏற்றுவதற்கு 40 ரூபாய்தான் கூலியாம். என்ன நியாயம் இது? அதுவும் ஆயிரம் கிலோவை ஒருவராக ஏற்றிவிட முடியாது. நான்கு பேராவது வேண்டும். அப்படியானால் ஆளுக்கு 10 ரூபாய்தான் கிடைக்கும். தனியார் வசம் அந்த வேலை இருக்கும்போது, அரசாங்கம் அவர்களுக்கு மிகப் பெரிய தொகை கொடுத்தனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அறுபது வயதைக் கடந்த துரைராஜ், அண்ணாமலை என்னும் இருவரைப் பார்த்தோம். ஒருவர் கடந்த 39 ஆண்டுகளாக இதே வேலையில் இருப்பதாகக் கூறினார். வாழ்வில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்? இன்னொருவருக்கு முதல்நாள், சுமை தூக்கும் போது காலில் அடிபட்டு விட்டதாம். மருத்துவம் செய்யக்கூட வழியில்லை என்றார். நிர்வாகம் பார்க்காதா என்று கேட்டபோது, அதுக்கெல்லாம் சான்ஸே இல்லே சார், நாங்க இங்கே அனாதைப் பிள்ளைங்க என்றார். கேட்கும்போது நெஞ்சு கனக்கத்தான் செய்தது.

இளைஞர்களைப் பார்த்து ‘நீங்க ஏன் இந்த வேலைக்கு வந்தீங்க?’ என்று கேட்டோம். “நானு பத்தாவது பெயில்.இங்க வேல பாத்தா எங்க அப்பா இறந்துட்டாரு. நீ இந்த வேலைக்கு வா. ரெண்டு வருஷத்துல வேற வேல வாங்கிடலாம்ன்னு சொன்னாங்க. அத நம்பி வந்தேன். ஒம்பது வருஷம் ஆச்சு. ஒரு வேலையும் கிடைக்கலே” என்று விடை வந்தது.

உங்களுக்கு ரயில்வே நிர்வாகம் எந்தச் சலுகையும் தருவதில்லையா என்று கேட்டதற்கு, “வருசத்துக்கு ஒருவாட்டி, குடும்பத்தோட ஏதாவது ஒரு ரூட்டுல ரயில்ல பயணம் செய்யலாம்.காசு கெடையாது, அவ்வளவுதான்” என்றனர்.

“அய்யா, மேலே இருக்கிறவுங்ககிட்டே சொல்லி, எங்கள நிரந்தரத் தொழிலாளி ஆக்குங்க” என்று எல்லோரும் சேர்ந்து கேட்டுக் கொண்டனர்.

துயரத்தோடு புறப்படும் வேளையில், “எங்களோட ஒரு டீ சாப்பிட்டு போ சார்” என அழைத்தார்கள். அந்த அன்பில் நெகிழ்ந்தோம். அவர்கள் தோழமையோடு வாங்கிக் கொடுத்த அந்தத் தேநீர், அவர்கள் வாழ்க்கையைப் போல் இல்லாமல், இனித்தது.

அன்புடன்
– சுபவீ –

More articles

Latest article