அது 1978 அல்லது 79 ஆம் ஆண்டாக இருக்கலாம். அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது.

நான், சென்னை, எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் பயிற்றுனனாக (TUTOR) வேலையில் சேர்ந்த நேரம். தாம்பரத்திற்கு அருகில், இராசகீழ்ப்பாக்கம் என்னும் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தோம். வயது 30க்கும் கீழே. இரண்டு குழந்தைகள்.

தமிழகத்தின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனும், ஒரு பெண்ணும் காதலித்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, அவர்களை மிரட்டவும் செய்தனர். வேறு வழியின்றி இருவரும் சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டனர். அந்த இளைஞர்,  என் நெருக்கமான நண்பரான ஒரு பேராசிரியரின் பள்ளிக்கூட வகுப்பு நண்பர். எனவே அவர் தன் நண்பருக்கு உதவி செய்ய நினைத்து, என்னை அணுகினார். நானும், அவரும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் முறைப்படி பதிவுத் திருமணம் செய்து வைத்தோம்.

எனினும், ஊரில் அவர்களின் உறவினர்கள் அவர்களைத் தேடிக்  கொண்டிருப்பதாகவும், கையில் கிடைத்தால், வெட்டிப் புதைத்து விடுவோம் என்று கூறிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. ஆகவே, சில மாதங்கள் வெளியில் நடமாட்டம் இல்லாமல் பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்தோம். நாங்கள் இருந்த வீட்டின் இன்னொரு பகுதி வாடகைக்கு வந்தது. அங்கு அவர்களைக்  குடி அமர்த்தினோம். அந்தப் பகுதியின் வாடகையை நானும், அவர்களுக்கான மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட செலவுகளை அடுத்த வீட்டின் உரிமையாளரும், பகுத்தறிவாளருமான ஒரு பெரியவரும் ஏற்றுக் கொள்வதென்று முடிவாயிற்று. மற்ற செலவுகளை என் பேராசிரிய நண்பர் பார்த்துக் கொண்டார்.

மூன்று நான்கு மாதங்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல் ஓடியது. அவர்கள் இருவரும் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் என் மனைவியின் ஒத்துழைப்பை நன்றியோடு நான் குறிப்பிட்டாக வேண்டும். திடீரென்று ஒரு நாள் காட்சிகள் மாறின. அவர்களின் உறவினர்களுக்கு எப்படியோ செய்தி தெரிந்துவிட்டது. ஒரு நாள் காலை எட்டு மணியிருக்கும். இரண்டு மகிழுந்துகள் எங்கள் வீட்டின் முன் வந்து நின்றன. ஆள்கள் மட்டும் இறங்கினர். “பொருள்கள்” உள்ளே இருந்தன. வாசலில் நின்று கொண்டிருந்த என்னைப்  பார்த்து, “நாங்க திருநெல்வேலியில் இருந்து வரோம். உங்க அப்பா இருக்காரா?’ என்று கேட்டனர். “அவர் ஊர்ல இருக்கார். உங்களுக்கு என்ன வேணும்?” என்றேன். “உங்கப்பாதானே தமிழ் வாத்தியார்?” என்றனர். இப்போது எனக்குப் புரிந்து விட்டது. யாரோ ஒரு தமிழ் ஆசிரியர் வீட்டில்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்னும்  தகவல் அவர்களுக்குக்  கிடைத்துள்ளது. ஒரு வயதான தமிழ் ஆசிரியரைக் கற்பனை செய்து கொண்டு வந்துள்ளனர்.  நான் சிரித்துக் கொண்டே, “நான்தான் தமிழ் வாத்தியார்” என்றேன்.   அவர்களுக்குச் சின்ன ஏமாற்றம். “இந்தச் சின்னப்  பையனா….?” என்று நினைத்திருக்கக்கூடும்.  ‘பொருள்கள்’ தேவைப்படாது’ என்று முடிவு செய்திருப்பார்கள்.

நிதானமாகத்தான் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கினார்கள்.  என் மனைவி பெரும் அச்சத்தில்  இருந்தார். உண்மையில், எனக்கும் பயமாகத்தான் இருந்தது. அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல், பக்கத்து வீட்டுப் பெரியவரையும் அழைத்து வந்தேன்.  அந்தப் பெண்ணின் அம்மாவிற்கு மிகவும் உடல் நலமில்லை என்றும், இருவரையும் அழைத்துச் சென்றுவிட்டு, ஒரு வாரத்தில் திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறினர். அவர்கள் பொய் சொல்கின்றனர் என்பதற்கு எந்தச் சான்றும் எங்களுக்குத் தேவைப்படவில்லை. எனவே மறுத்தோம். அவர்கள் விடுவதாயில்லை. நேரம் ஆக ஆக எங்களின்  வேறு சில நண்பர்களும் செய்தியறிந்து  வந்துவிட்டனர். இறுதியாக இரவு 7 மணிக்கு ஓர் உடன்பாடு வந்தது. அந்தப் பெண்ணை மட்டும் அழைத்துக் கொண்டுபோய் அம்மாவைக் காட்டிவிட்டு, மூன்று  நாள்களில் கொண்டு வந்து விட்டுவிட வேண்டும் என்பதாக இருதரப்பும் ஏற்க, அவர்கள் புறப்பட்டனர்.

ஆயிற்று, 37 ஆண்டுகள். இன்றுவரையில் அந்தப் பெண்ணை அவர்கள் திரும்ப அழைத்து வரவே இல்லை. கண்டுபிடிக்க நாங்கள் எடுத்த எந்த முயற்சியும் பயன் தரவில்லை. வழக்குத் தொடர்ந்தோம்.நீதிமன்றத்திற்கு அந்தப் பெண்ணை அச்சுறுத்தி அழைத்து வந்து, மணமுறிவுக்கு ஏற்பாடு செய்துவிட்டனர்.  “எனக்கு இவரைப் பிடிக்கவில்லை, என் பெற்றோரோடுதான் வாழ விரும்புகிறேன்” என்று அந்தப் பெண் நீதிமன்றத்தில் கூறியபோது, கண்ணீரை அவர் கட்டுப்படுத்திக் கொண்டார். ஒருவேளை, அன்று அந்த இளைஞரையும் அனுப்பியிருந்தால், ‘காதல்’ திரைப்படத்தின் இறுதிக்காட்சி நடந்திருக்கும். இவர்களாவது பிரிக்கப்பட்டார்கள், தருமபுரி இளவரசனும், உடுமலைப்பேட்டை சங்கரும் என்ன ஆனார்கள் என்பதை உலகமறியும்.

அந்த இளைஞர், சில ஆண்டுகளுக்கு முன்  உடல்நலமின்றி  இறந்தும் போய்விட்டார். அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த அன்பினை, காதலை யாரைக் காட்டிலும் கூடுதலாக நானும் என் மனைவியும் அறிவோம்.  அது ஒன்றும் ‘நாடகக் காதல்’ இல்லை. பிறகு ஏன் பிரிந்தனர்? அல்லது பிரிக்கப்பட்டனர்? அவர்களின் உண்மையான காதலைப் பிரித்தது எது?

இந்தியாவில் பிறந்த எல்லோருக்கும் விடை தெரியும். சாதிதான் காரணம். சாதியின் குறுக்கீட்டால்  அழிந்த, அழிக்கப்பட்ட காதல்தான் இங்கு மிகுதி. காதல் தோல்வி என்னும் வலியைத் தாங்கி நிற்போர் அனைவரும் சாதியால்தான் தாக்குண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், சாதிதான் இங்கு காதலுக்கு முதல் எதிரி. காதல் இனிது தான், ஆனால் சாதி கொடியது! இன்றைக்கு ஆண் பெண் பலர் தன்முனைப்பு (ஈகோ) காரணமாகப் பிரிந்து விடுகின்றனர். காதலில் வென்று,  வாழ்க்கையில் தோற்றவர்களும் உண்டு.

 

காதலில் பல வகை இருக்கிறது. கைக்கிளை, பெருந்திணை என்று நம் இலக்கியங்கள் பேசும். கைக்கிளை என்பது ஒருதலைக் காதல். பெருந்திணை என்றால் பொருந்தாக் காதல். இருவருக்குமிடையே பெரிய வயது வித்தியாசம் இருக்குமானால், அதனைப் பெருந்திணை என்பர். இவைகளைத் தாண்டி, கள்ளக்காதல் என்ற வழக்கும் இங்குள்ளது. எவ்வாறாயினும் எல்லாம் காதல்தான். எந்தக் காதலில் தோல்வி ஏற்பட்டாலும் அது வலிதான்.

காதலும், காதல் தோல்வியும் இல்லையென்றால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் முக்கால்வாசி இலக்கியங்களும், கலைகளும் ஒழிந்து போகும். தமிழில் அக இலக்கியங்களே மிகுதி. எனினும் இலக்கியக் காதலுக்கும், நடைமுறைக் காதலுக்கும் சில வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. ‘காதல், காதல், காதல் – காதல் இன்றேல் சாதல், சாதல், சாதல்’ என்றுதான் பாரதி தொடங்கி, இலக்கியவாணர்கள் பலர் இயம்பியுள்ளனர். நடைமுறையில், காலப்போக்கில், காதல் தோல்வியைத் தாங்கி வாழ்வோரும், வேறு மணம்  முடிப்போரும்தாம் எண்ணிக்கையில் கூடுதல். இப்படிச் சொல்வது, காதலின் மதிப்பைக் குறைப்பதாகவோ, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாட்டை மறுப்பதாகவோ ஆகாது.

காதல் தோல்வி ஏற்படுத்தும் வலிக்கு முதன்மையான காரணம் ஒன்று உண்டு. பெற்றோர்களை, உறவினர்களைப்  பிரியும்போதோ, நண்பர்களைப் பிரியும்போதோ  ஏற்படாத வலி, காதாலரைப் பிரியும்போது மட்டும் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விடை எளியதுதான். காதல் மட்டுமே, உடல் சார்ந்த வேட்கையையும் உள்ளடக்கியது. எனவே காதலுக்கு அன்பு மட்டும் போதுமானதன்று. அருகாமையும் மிகப் பெரிய தேவையாகின்றது. காமத்தைக் கழித்துவிட்டுக் காதலைப் பார்க்க முடியாது. பார்க்க வேண்டிய தேவையும் இல்லை. எனவே, உடல், உள்ளம் ஆகிய இரு பிரிவுகள் காதலில் மட்டுமே உண்டு. அதனால்தான், “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள” என்றார் வள்ளுவர்.

மேலே உள்ள குறள் ஆழ்ந்த பொருளுடையது. பார்ப்பதில், குரல் கேட்பதில், உச்சி நுகர்வத்தில், சுவைப்பதில், தொட்டுத் தழுவலில் என ஐம்புலனுக்கும் காதல் மட்டுமே இன்பம் தரும் என்பது மறுக்க முடியாத உண்மைதானே! அதனால்தான் அந்தக் காதலை இழந்து வாடும் அனுபவம் தாங்க முடியாத துயரம் ஆகிறது.

உலகில் எத்தனையோ துன்பங்கள் இருக்கின்றன. வறுமை, அறியாமை, நோய்  என்று உலகம் பல்வேறு இன்னல்களைக் கொண்டதாக உள்ளது. இவை எவற்றோடும் ஒப்பிட முடியாத “வெறும்” காதல் தோல்வியைப் பெரிதாக நினைத்த்துக் கொண்டு புலம்புகின்றவர்கள் முட்டாள்கள் என்று சில புத்திசாலிகள் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.  எந்த ஒன்றையும் இன்னொன்றுடன் ஒப்பிட முடியாது.  வாழ்க்கை என்பது மிகப் பெரும்பான்மையாக மனம் சார்ந்தது.  அதில் ஏற்படும் அனுபவம், வலி எல்லாம் அவரவரின் எண்ணத்தைப் பொறுத்ததே.

காதலுக்காகத்  தன் அரண்மனை வாழ்வையே துறந்த எட்டாம் எட்வர்ட் மன்னனைப் பற்றி நாம் படித்திருக்கிறோம். தமிழிலும், “முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும், வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே” என்கிறது பட்டினப்பாலை. இத்தனை சிறப்புடைய இந்தப் பட்டினமே எனக்கு கிடைக்கும் என்றாலும்,  அழகிய கூந்தலைக் கொண்ட இந்தப் பெண்ணை விட்டுவிட்டு வரமாட்டேன் என்று கூறும் இந்த வரிகளே அந்த நூலின் சிறப்பான வரிகளாக இன்றும் பேசப்படுகின்றன.

காதலிக்காதவர்கள் உலகில் இருக்க முடியாது. அதனைப் பிறருக்கும், தன் காதலருக்குமே கூட  வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம். காதல் என்னும் உணர்வே ஏற்படாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.

“காதலது உயிரியற்கை.” அதனால் அதனைப் பெற இயலாதபோது ஏற்படும் வலியும்  இயற்கையானதே!

அன்புடன்
– சுபவீ –