1980களின் தொடக்கம். அப்போது நான் எழுதிக்கொண்டிருந்த பகத்சிங்கும் இந்திய அரசியலும் என்னும் நூலுக்காகப் பல்வேறு ஆவணங்களையும் தேடிக்கொண்டிருந்தேன். அவரும், அவருடைய நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டது 1931 ஆம் ஆண்டு என்பதால், அந்த ஆண்டில் வெளிவந்த ஆங்கில, தமிழ் நாளேடுகளை எல்லாம், சென்னை, தில்லி ஆவணக் காப்பகங்களில் படிக்கத் தொடங்கியிருந்தேன். அப்போதுதான் அந்த அதிர்ச்சிச் செய்தி ஒரு தமிழ் ஏட்டில் இடம்பெற்றிருந்ததைப் பார்த்தேன்.
நெல்லைக்கு அருகில் ஒரு சிற்றூரில் புரத வண்ணார் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து அடித்தார்கள் என்பதே அந்தச் செய்தி. அவர் பகலில் நடமாடிய குற்றத்திற்காக அந்தத் தண்டனை வழங்கப்பட்டது என்ற குறிப்பும் அந்தச் செய்தியில் இருந்தது. எனக்கு அதில் இரண்டு செய்திகள் புரியவில்லை. வண்ணார் மக்களை பற்றி அறிவேன். ‘புரத வண்ணார்’ என்பது புதிதாக இருந்தது. பிறகு, பகலில் நடமாடுவதில் என்ன குற்றம் என்று புரியவில்லை.
அதற்குப் பின் நான் அறிந்துகொண்ட செய்திகள் என் நெஞ்சில் கனத்தபடியே இருந்தன.மாநகரங்களில் வாழும் இன்றைய தலைமுறையினர் ‘லாண்டரி’ என்று சொல்லப்படும் உலர் சலவை நிலையங்களை அறிந்திருப்பர். குடி ஊழியம் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியாது. நான் சிறுவனாக, இளைஞனாகக் காரைக்குடியில் வாழ்ந்தபோது அதனை நடைமுறையில் பார்த்திருக்கிறேன். பல்லவர் காலத்தில் தொடங்கி, பிற்காலப் பாண்டியர் காலத்திலும் தொடர்ந்து சோழர் காலத்தில் வலுப்பெற்ற மரபு அது!
மன்னர்கள், வேதம் அறிந்த பார்ப்பனர்களுக்கு, அரசுக்குச் சொந்தமான நிலத்தை ‘இறையிலி நிலமாகக்’ கொடுப்பர். அந்த நிலம் அவர்களுக்கு இலவயமாகக் கொடுக்கப்படும் என்பதுடன், அவர்கள் அதற்குரிய வரியைக் கூடக் கட்ட வேண்டியதில்லை. அரசின் சட்டமும் அங்கே செல்லுபடியாகாது. அவ்வாறு வழங்கப்படும் நிலங்களுக்கு பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம், என்ற பெயர்கள் உண்டு. அவ்வாறு பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கும்போது, ஊரின் ஓரத்தில், ஒரு சிறு பகுதியைக் கொல்லர், தச்சர், வண்ணார், நாவிதர் போன்ற உழைக்கும் மக்களுக்கும் வழங்குவார்கள். அது அவர்களின் மீது கொண்ட அன்பு காரணமாக அன்று. அந்த நிலத்தில் குடியேறவிருக்கும் பார்ப்பனர்களுக்கு ஊழியம் செய்வதற்காகவே! அதற்கு ஊதியம் எதுவும் கிடையாது. அவர்கள் கொடுக்கும் உணவு, பொருள்களைப் பெற்று வாழ வேண்டும்.
இந்தப் பழக்கம், பிரம்மதேயத்திலிருந்து, மற்ற ஊர்களுக்கும் பரவியது. உயர்சாதி என்று கற்பிக்கப்பட்ட எல்லாச் சாதியினருக்கும் இவர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும்.அப்படிச் செய்யும் வண்ணார் பெருமக்களுக்கு குடிவண்ணார் என்று பெயர். ஊரினால் ஒதுக்கப்பட்டு, ஊரின் எல்லையில் வாழும் தலித் மக்களின் துணிகளைத் துவைப்பவர்களே புரத வண்ணார்கள், சேரி வண்ணார்கள், புதிரை வண்ணார்கள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். வண்ணார்களின் வாழ்வே துயரமானது. புரத வண்ணார்களின் வாழ்வுத் துயரோ சொல்லி மாளாது. இருவரையும் குறித்து பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், தனஞ்செயன் போன்ற ஆய்வாளர்கள் நூல்களை எழுதியுள்ளனர். எழுத்தாளர்கள் ஜெயராணி, மீனாமயில் போன்றோர் நேரடியாகச் சென்று கள ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். எழுத்தாளர் இமையம், ‘கோவேறு கழுதைகள்’ என்னும் பெயரில் ஒரு நாவலை எழுதியுள்ளார். நான் அறியாத வேறு நூல்களும் இருக்கக்கூடும். இவை தவிர, விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த வண்ணார் சங்கத்தின் பொறுப்பாளர்கள் சிலர் ஒருமுறை என்னைச் சந்தித்து அவர்கள் வெளியிட்ட மலர் ஒன்றை எனனிடம் தந்தனர். இவை எல்லாவற்றிலிருந்தும் நான் அறிந்து கொண்டவைகளை, என் அடுத்த தலைமுறை அறியச் சொல்வது நம் கடமை அல்லவா!
வண்ணார் சமூகம் பல துயரங்களையும், வலிகளையும் சுமந்தே வாழ்கிறது என்றாலும், அவர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாகவில்லை. ஆனால், புரத வண்ணார்களோ, இரட்டைத் தீட்டிற்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். இரட்டைத் தீண்டாமை குறித்துப் பார்ப்பதற்கு முன், வண்ணார் சமூகம் இன்றும் கிராமங்களில் அனுபவித்துவரும் சொல்லொணாத துயரங்கள் சிலவற்றை நாம் அறிய வேண்டும். ,
வண்ணக் கலைஞர்களாக இருந்தவர்களே, காலப்போக்கில் வண்ணார்கள் ஆகி விட்டனர் என்று ஓர் ஆய்வு கூறுகின்றது. துணிகளில் வண்ண ஓவியங்களை வரைந்தவர்கள், அதற்காக முதலில் துணிகளைத் துவைத்துச் சுத்தம் செய்யத் தொடங்கி, பிறகு அதுவே அவர்களின் தொழில் ஆகி விட்டது என்கின்றனர். அவர்களுக்கென்று சில கழுதைகளும், சோறு வாங்குவதற்கான சில பாத்திரங்களும் தவிர, வேறு சொத்து என்று பெரிதாக ஏதும் இருப்பதில்லை. வைத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் எழுதப்படாத சட்டம். அவர்கள் தங்கள் உணவுக்கு ஊர் மக்களையே நம்பியிருக்க வேண்டும். அதில்தான் மிகப் பெரிய சோகம் இருக்கிறது. மாலை அல்லது இரவு வேளைகளில், எந்தெந்த வீடுகளில் துணி துவைத்தனரோ, அந்த வீடுகளுக்கெல்லாம் சென்று, ‘அம்மா வண்ணாத்தி வந்திருக்கேன்’ என்று வாசலில் நின்று குரல் கொடுக்க வேண்டும். சில வீடுகளில் உடனே உணவு தருவார்கள். சிலரோ, பொழுது சாயக் கூடாதே, வந்துருவியே’ என்று சலித்துக்கொண்டு, அப்புறமா வா என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சோறு. எல்லாவற்றையும் கலந்து வாங்கிக்கொண்டு வரும்போது உணவின் சுவையே மாறிப்போகும். சிலர், சற்றுக் கெட்டுப்போன குழம்புகளையும் ஊற்றி விடுவார்கள். அது மொத்தத்தையும் .கெடுத்து விடும். இந்தக் கொடுமையான பழக்கத்திற்கு “ஊர்ச்சோறு எடுத்தல்” என்று பெயர்.
இன்று அந்த சமூகத்துப் பிள்ளைகளும் பள்ளிக்கூடங்களுக்குப் படிக்க வந்துவிட்டனர். இது பெரிய முன்னேற்றம்தான்.ஆனால் இதனை இன்னும் செரித்துக்கொள்ள முடியாதவர்களாகவே பலர் உள்ளனர். படிக்க வந்தபின், ஊர்ச் சோறு எடுக்கச் செல்ல முடியாது என்று பிள்ளைகள் கூறுகின்றனர். அதனை ஆதிக்க சாதியினரால் கிராமங்களில் பொறுக்க முடிவதில்லை. “ஏன், உன் மக வரமாட்டாளா?'” என்ற ஏளனம் கலந்த கேள்வி வரும். “நாளைக்கு வருவா” என்று அடக்கமாகப் பதில் சொல்வார்கள். பள்ளிக்கூடப் பிள்ளைகள் சிலரும், “என்ன உங்க வீட்டுச் சோறு மட்டும் கலர் கலரா இருக்கு?’ என்று கேட்டுச் சிரிப்பார்களாம். அதற்காகத் தனியாக அமர்ந்து உணவு உண்பார்களாம். அவர்கள் வெளியிட்டுள்ள மலரில் ஒரு பெண் சொல்கிறாள், “என்னோட படிக்கிற பொண்ணு ஒருத்தி, நீங்க எல்லாம் படிக்க வந்திட்டீங்களே, இனிமே எங்க தீட்டுத் துணிய யாரு துவைப்பான்னு கேட்டபோது, என்னால அழுகைய அடக்க முடியல”. என்ன சொல்வது இந்த சமூகம் பற்றி? என்ன சொல்வது நம் படிப்புப் பற்றி?
ஏதோ 50, 100 ஆண்டுகளுக்கு முன்பு அன்று, இப்போது சில ஆண்டுகளுக்கு முன் நடந்ததை, பேரா. சிவசுப்பிரமணியன் குறிக்கின்றார். “விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள கொங்கணமூர் என்னும் கிராமத்தில் வண்ணார் சமூகப் பெண் ஒருத்தி, ஊர்ச் சோறு எடுக்க, நிலக்கிழார் ஒருவரின் வீட்டிற்குச் சென்றார். நிலக்கிழாரின் மனைவி, வெறும் சோற்றை மட்டும் கொட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். அவள் குழம்புடன் திரும்பி வருவாள் என்று சில நிமிடங்கள் காத்திருந்த அப்பெண், ‘அம்மா குழம்பு ஊத்துங்க’ என்று குரல் எழுப்பினாள். அப்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவாறு, வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த நிலக்கிழார், ‘என்ன கேட்ட?” என்று எதுவும் தெரியாதது போல் கேட்டார். ‘குழம்பு கேட்டேன்’ என்று இயல்பாக அப்பெண் கூறியதும், இங்கே வா என்று அருகில் வரச்சொல்லி வாயில் இருந்த செந்நிற வெற்றிலைச் சாறை சோற்றுப் பானையில் உமிழ்ந்துவிட்டு, இந்தா, குழம்பு ஊத்தியாச்சு போ என்று கூறிவிட்டார். அச்சமும் அவமானமும் ஒருசேர வாட்ட, தன் சட்டியில் அதுவரை வாங்கிவந்த சோறும் வீணாகிப் போன நிலையில் அப்பெண் திரும்பினாள். பின்னர் வண்ணார் விடுதலை இயக்கத்தினர், தோழர் பிரகாஷ் துணையுடன் போராடி, அந்நிலக்கிழாரை மன்னிப்பு கேட்கச் செய்தனர்.”
இன்று அவர்கள் சங்கம் கண்டுள்ள காரணத்தினாலும், ;பிள்ளைகள் கல்வி நோக்கி நகர்ந்துள்ளதாலும், சலவை இயந்திரங்கள் வருகை கூடி இருப்பதாலும் நிலைமைகள் மாறுகின்றன. மேலும் விரைந்து மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. அச்சமூகத்தைச் சேர்ந்த ஏறத்தாழ ஆயிரம் குடும்பங்கள், சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கலில் குடியேறி இருப்பதை ஜெயராணி தன் நேரடிக் கள ஆய்வின் மூலம் உறுதிப்படுத்துகிறார்.
எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பதால், இவர்களை விடவும் புரத வண்ணார்களின் நிலை மிக இழிவாக ஆக்கப்பட்டுள்ளது. தீண்டாமைக்கு உள்ளான தலித் மக்களின் துணிகளைத் துவைக்கின்ற காரணத்தால் அவர்களுக்குச் சமூகத்தில் இரட்டைத் தீட்டு இருந்துள்ளது.அதாவது, தீண்டாமையுடன் சேர்ந்து பாராமையும் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று கற்பித்து, பகலில் அவர்களின் நடமாட்டத்திற்கே தடை விதித்துள்ளனர். அதனை மீறி, பகலில் நடமாடிய ஒருவரைத்தான், 1931 ஆம் ஆண்டு நெல்லைக்கு அருகில் கட்டிவைத்து அடித்துள்ளனர். அதனைத்தான் அன்றைய நாளேட்டில் நான் படித்தேன். 1932 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியின்போது அந்தத் தடை நீக்கப்பட்டு விட்டபோதும், அவர்களின் வாழ்க்கை இன்னும் பெரிதாக முன்னேறிவிடவில்லை.
இவைபோன்ற கொடுமைகளை எல்லாம் எதிர்த்து எழுவதே இன்றையத் தேவை. சமூக மாற்றம் கடந்த ஓராண்டில் எவ்வளவோ நடந்துள்ளது என்றாலும், இன்னும் நாம் போக வேண்டிய தொலைவு மிகக் கூடுதலாகவே உள்ளது.
அன்புடன்
– சுபவீ –