ஜெய்பீம் மன்றம் சார்பில், எழுத்தாளர் ஜெயராணியின் அழைப்பை ஏற்றுச் சில மாதங்களுக்கு முன், சென்னை அண்ணா நகரில் ஒரு பள்ளியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்குச் சென்றபோது, அதன் முழுப் பரிமாணத்தை நான் அறிந்திருக்கவில்லை. அங்கே தோழர்கள் புனித பாண்டியன், மருத்துவர் தாயப்பன் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும், 20, 22 வயதில் ஏறத்தாழ 50 இளைஞர்களும், சில குறைந்த வயதுப் பிள்ளைகளும் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் துப்புரவுத் தொழிலாளர்களின் பிள்ளைகள். தரமணி, கண்ணகி நகர், கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர் முதலானபகுதிகளைச் சேர்ந்தவர்கள். சாதி அமைப்பை உயிர்ப்போடு வைத்திருக்கும், சாதி சார்ந்த தொழில் முறையினால் இன்றும் சமூகத்தால் ‘தோட்டிகள்’ என்று அழைக்கப்படுவோர். மனிதர் கழிவை மனிதர் அகற்றும் இழிவை – இன்றும், அறிவியல். தொழில்நுட்பம் எல்லாம் மிக உயர்ந்து நிற்கும் இந்தக் காலத்திலும் – தொழிலாகச் செய்து கொண்டிருப்பவர்கள். செய்யும்படி, சமூகத்தால் கட்டாயப்படுத்தப் பட்டிருப்பவர்கள்.
அவர்களின் துயரத்தை, வலியை நம்மால் அவ்வளவு எளிதில் உணர்ந்துவிட முடியாது. அந்த வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்காமல், கண்டும்,கேட்டும், படித்தும் என்னைப் போன்றவர்கள் எழுதும் எழுத்துகள், அவர்களின் வலியில் ஆயிரத்தில் ஒரு பங்கையேனும் வெளிக்கொண்டு வரக்கூடியதா என்பது தெரியவில்லை. இருப்பினும், சமூகம் குறித்த ஒரு பகிர்வாகவேனும் இருக்கட்டும் என்று தோன்றுகிறது.
அன்று அந்த இளைஞர்களோடு வட்ட வடிவமாக அமர்ந்து உரையாடலைத் தொடங்கினோம். கையால் மலம் அள்ளும் அருவருப்பை ஒரு தொழிலாகவே அவர்கள் அறிந்துள்ளனர். அப்படித்தான் அவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஓரிருவரைத் தவிர, அவர்களில் பலருக்கும் அது குறித்த சரியான புரிதல் ஏதும் இல்லை. தங்களின் பெற்றோர்கள் செய்யும் தொழிலை நாமும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற மனநிலையில்தான் உள்ளனர். அவர்களில் பலரது படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
“ஏன், உங்களுக்குப் படிப்பு பிடிக்கவில்லையா?” என்று கேட்டேன். “அப்படியில்லை……” என்று இழுத்தார்கள். ஒரு பையன் இடையிடையே வெகுளித்தனமாக சிரித்துக் கொண்டே இருந்தான். அந்தத் தம்பியைப் பார்த்து, “எதற்குச் சிரிக்கிறாய்?’ என்றேன். பட்டென்று விடை சொன்னான், “சார், ஸ்கூல்லேயும் எங்களை சுத்தம் செய்யணும்னும், பெருக்கணும்னும் தான் சொல்றாங்க. எங்க நைனா சொல்ற இடத்தில போய் அத செஞ்சா, காசாவது கிடைக்கும்” என்றான். அதிர்ந்து போனேன் நான். ஐந்தாறு மாணவர்கள், “எங்க அப்பா செத்துட்டாரு, நாங்க வேற என்ன செய்யிறது?” என்றனர்.
ஜெயராணியைத் திரும்பிப் பார்த்தேன். “ஆமா, இவுங்களோட அப்பா பலபேரு சின்ன வயசுலேயே செத்துப் போயிடறாங்க. ஆனா அதுக்கு என்ன காரணம்னு இவங்களுக்குத் தெரியாது” என்றார். மலத்தைக் கையால் அள்ளுவதும், சாக்கடைக்குள் இறங்குவதும்தான், அவர்கள் பெற்றோரின் சிறுவயது மரணத்திற்குக் காரணம் என்பது அந்தப் பிள்ளைகளுக்குத் தெரியவில்லை.
“உங்கள் அப்பா செப்டிக் டாங்கில் இறங்குவாரா?’ என்று கேட்டபோது, ‘நாங்களே இறங்கியிருக்கோம்’ என்றனர் கொஞ்சம் பெரியவர்களாக இருந்த மூன்று பேர். இளமையின் கனவுகளோடு, இவர்கள் வயது இளைஞர்கள் கல்லூரி, படிப்பு, காதல், திரைப்படம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் மட்டும் ஏன் சாக்கடையில் இறக்கப்படுகின்றனர்? “வேண்டாம், முடியாதுன்னு சொல்ல முடியாதா?’. “ம்ஹும்…ஒதை விழும்”. அந்த வெகுளிப் பையன் சொன்னான், “அந்த வேலைக்குத்தான் கொஞ்சம் காசும் கூடுதலா கிடைக்கும்”. வறுமையின் கோர முகம் அங்கு கைகொட்டிச் சிரித்தது.
ஒரே ஒரு இளைஞன் மட்டும்தான் வேறுபட்டு ஒரு செய்தியைச் சொன்னான். “நீங்க எல்லாம் சொல்ற மாதிரி எனக்கு அந்த வேலை பிடிக்கலே. ஆனா எங்க வீட்ல யாரும் ஒத்துக்கலை. மீறி, சண்ட போட்டு வெளிய வந்தேன். இப்போ ஆட்டோ ஒட்டிக்கிட்டு இருக்கேன்”. நாங்கள் கைதட்டினோம். புரிந்தோ புரியாமலோ, பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கை தட்டினார்கள்.
அந்த சந்திப்பின் நோக்கமே அடுத்த தலைமுறையை அந்த இழிவிலிருந்து மீட்டெடுப்பதுதான். “இனி நாங்கள் யாரும் அதனை ஒரு தொழில் என்று கருதி, அந்த இழிவை ஏற்க மாட்டோம்” என்று அவர்களிடம் உறுதி பெறுவதுதான் ஜெய்பீம் மன்றத்தின் நோக்கம். அதற்கு முன்பு அது குறித்த பல செய்திகளைப் பல கோணங்களில் அவர்களுக்கு விளக்கிச் சொல்லவே, வழக்கறிஞர் சரவணன், எழுத்தாளர் வ.கீதா, மருத்துவர் புரூனோ, நான் உள்ளிட்ட நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தோம்.

உலகிலேயே மிகக் கடுமையானதும், கொடுமையானதும், சாக்கடைக் குழியில் (செப்டிக் டேங்க்) இறங்குவதுதான். எல்லா வகையான கழிவுகளும் அதில் இருக்கும். அசைவ உணவகங்களின் கழிவுகள் மிகவும் மோசமாக இருக்கும். மேலே தண்ணீர், கீழே திடக் கழிவுகள் என்று அந்தக் குழிகள் காணப்படும். அதில் நீந்திப் போய்த்தான் அடைப்பைக் கண்டுபிடித்துச் சுத்தம் செய்ய வேண்டும்.
முதலில் விஷ வாயு இருக்கிறதா என்று பார்ப்பார்கள். வாயுவின் வேறுபட்ட நாற்றத்தை வைத்துக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் பல வேளைகளில் அது ஏமாற்றிவிடும். சில விஷ வாயுக்களில் கெட்ட நாற்றம் இருக்காது. காலால் முதலில் அலசிப் பார்ப்பார்கள். அப்போதும் நாற்றம் வராது. பிறகு கீழே இறங்குவார்கள். அந்த வாயு தாக்கி இறந்து விடுவார்கள். புதைகுழி போல உள்ள கழிவில் சிக்கிச் சிலர் மடிந்து போவார்கள். அவர்களைக் காப்பாற்றப் போகிறவர்களும் ஒவ்வொருவராய் இறந்து போவார்கள். இப்படிக் கொத்துக் கொத்தாய்ப் பலர் மரணிக்கும் அவலங்கள் சமூகத்தின் பார்வைக்கே வருவதில்லை. அவை செய்தியாகக்கூட ஆவதில்லை. அவற்றுக்கெல்லாம் நம் நாட்டில் ‘BREAKING NEWS’ மதிப்பு கிடையாது!
விஷ வாயு தாக்கவில்லை என்றாலும், அந்தக் குழியில் உள்ள நுண்ணுயிரிகள், விஷப் பூச்சிகள் தாக்கிச் சில மாதங்களில் மரணம் நேரும். மனித நவ துவாரங்களின் வழியாக, அந்தக் கிருமிகள் உட்சென்று, உயிரைக் குடித்துவிடும்.
இன்றைய இளைஞர்களுக்கு, நீர் ஊற்றிச் சுத்தப்படுத்தப்படும் கழிப்பறைகள்தான் (flush out toilets) தெரியும். உலர் கழிப்பறைகளைப் (dry latrines) பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எல்லா ஊர்களிலும் அந்தக் கழிப்பறைகள் மட்டுமே இருந்தன. இப்போதும் அவை ஒழிந்துவிடவில்லை. தமிழ்நாட்டில் சிறிய கிராமங்கள் பலவற்றில் அவை உள்ளன. இந்தியாவில் பல மாநிலங்களில், குறிப்பாக, பீஹார், உ.பி., ஜம்மு, ஜார்கண்ட் ஆகியனவற்றில் அவை மிகுதி. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்னும் அந்த இழிவைச் சுமந்து கொண்டுதான் உள்ளனர். இந்தியா முழுவதும், ரயில் தண்டவாளங்களில் மனிதக் கழிவைக் கைகளால் அகற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளத் தோழர்களை நாம் பார்க்க முடியும். தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கன்று.
இந்தக் கொடுமையைத் தடுக்கச் சட்டத்தில் ஏதும் இடமில்லையா என்றால், இருக்கிறது. ஆனால் வெறுமனே ஏட்டில் மட்டும் இருக்கிறது. இந்த இழிவில் யாரையேனும் ஈடுபடுத்தினால் அது குற்றம் என்கிறது 1993 ஆம் ஆண்டுச் சட்டம். அப்படிச் செய்கிறவர்களுக்கு ஒரு வருடம் சிறையும், 2000 ரூபாய் தண்டமும் (அபராதம்) விதிக்கிறது சட்டம்.
மீண்டும் அந்தச் சட்டம் 2013 இல் மேலும் ஓட்டைகளுக்கு இடமில்லாமல் திருத்தப்பட்டது. Prohibition of Employment as manual scavengers and Rehabilitation Act 2013 என்று அந்தச் சட்டத்திற்குப் பெயர். ஆனாலும் என்ன பயன்? இன்றுவரை அந்தக் கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசிய நாடுகள் சிலவற்றிலும் இந்த இழிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், எங்கெல்லாம் சாதி இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்தச் சமூக இழிவும் இருக்கிறது.

அண்மையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் குறிப்பு ஒன்று, கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரை விண்ணப்பிக்கச் சொல்கிறது. இதுதான் சட்டத்தை நம் அரசு மதிக்கும் லட்சணம்! சாதியும் தொழிலும் கைகோத்துச் செல்லும் இடமும் இதுதான்!
ஏவுகணைகள், விண்கலங்கள் அனுப்புவதில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சிதான். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இவைகள் தேவைதான். ஆனால் மனித இழிவைப் போக்குவதுதானே நாகரிக சமூகத்தின் முதல் அடையாளமாக இருக்க முடியும். சுகாதாரப் பொறியியல் (Sanitation Engineering) துறையும் இங்கு வளர்ந்துகொண்டுதானே இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி, சாக்கடையைச் சுத்தம் செய்வதற்கு இயந்திரங்களை, ரோபோ போன்றவைகளைப் பயன்படுத்தக் கூடாதா? மனிதர்களைப் பயன்படுத்தலாமா? கவிஞர் இன்குலாப் கேட்டதைப் போல, உன்னைப் போல, என்னைப் போல மனுசங்க இல்லையா அவர்கள்?

இதயம் உள்ளவர்கள், அநீதியை எதிர்க்கும் குணமுடையவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆற்ற வேண்டிய இந்தப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்பதே இந்த எழுத்தின் நோக்கம்.

இது தனி மனிதர்களின் வலியன்று. சமூகத்தின் வலி. இது தனி மனிதர்களுக்கான அவமானம் அன்று, நம் தேசத்தின் அவமானம்!

அன்புடன்
– சுபவீ –