பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது நான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்று சற்றுக் காலந்தாழ்ந்து புறப்பட நேர்ந்தது. முதல் மணி வகுப்பு எனக்கு. விரைந்து போய்விட வேண்டுமே என்ற கவலையுடன், பேருந்து ஏறினேன். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, போக்குவரத்து நெரிசல். ஓர் ஊர்வலம் போய்க் கொண்டிருந்ததால், வண்டிகள் எல்லாம் நின்றுவிட்டன. கட்டிடத் தொழிலாளர்கள், பணியில் இருக்கும்போது விபத்து நேர்ந்தால், உரிய இழப்பீடு வேண்டும் என்று கேட்டு ஊர்வலம் போவதாகச் சொன்னார்கள்.

பேருந்தில் இருந்தவர்கள் பலருக்கும் எரிச்சல். தாமதமாகிறதே என்று எனக்கு கூட ஒரு கோபம்தான். “இதுக்கெல்லாம் போலீஸ் அனுமதியே கொடுக்கக் கூடாது” என்றார் ஒருவர். “எல்லாரும் சங்கம் வச்சிட்டாங்க. ஒரு இடத்திலேயும் ஒழுங்கா வேல நடக்கிறதில்ல” என்று சலித்துக் கொண்டார் இன்னொருவர். நான் உள்பட, அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாரும் ஒரு சொல் கூடச் சொல்லவில்லை.

அடுத்த மாதம், ஊதிய உயர்வு கேட்டு, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நாங்கள் நூற்றுக்கணக்கில் அதே பாதையில் ஊர்வலம் போனோம். அப்போது எங்கள் சங்கத்தில் இருந்த, சென்னை, ராணி மேரி கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய தோழர் கீதா உடன் வந்தார். அவர் கட்டிடத் தொழிலாளர் சங்கத்திலும் அவர்களோடு சேர்ந்து முனைப்பாகப் பணியாற்றக்  கூடியவர். அவர்தான் ஒரு குற்றவுணர்வை எனக்குள் ஏற்படுத்தினார்.

இவ்வளவு ஊதியம் வாங்கும் நாமே மேலும் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தும்போது, அவர்கள் ஊர்வலம் போவதில் என்ன தவறு? அதனை நாம் ஆதரிக்க  வேண்டாமா? அவர்களின் வேலை எவ்வளவு கடினமானது, அவர்களுக்கு என்ன பாதுகாப்பு  இருக்கிறது? – என்றெல்லாம் கேட்டு என்னைச் சிந்திக்க வைத்தவர் அவர்தான்.

நேரடியாகவே அவர்கள் வேலை செய்யும் இடத்தில் நின்று பார்க்கும் எவர் ஒருவருக்கும் அது எவ்வளவு கடினமானது என்று புரியும். கட்டிடத் தொழிலாளர்களின் வேலை குறித்து இப்படிச் சொல்லலாம். 1. அது நிரந்தரமற்றது  2. கடினமானது  3. ஆபத்தானது  4. நோய்களைக் கொண்டுவரக் கூடியது.

காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை பார்த்தால் ஒரு நாள் கூலியைப் பெறலாம். கட்டிட உரிமையாளர்களிடம் கேட்கும்போது, “எங்க சார், 9 மணிக்குத்தான் வருவாங்க, 5.15 மணிக்கெல்லாம் கை  கழுவிடுவாங்க” என்கின்றனர். தொழிலாளர்களும் அது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்கின்றனர். ஒரு அரை மணி நேரம் வேலை நேரத்தில் குறைந்தாலும், அதன் கடுமையை நோக்கும்போது அது இயல்பானதே என்று புரியும்.

ஒரு நாள் கூலி சித்தாளுக்கு 300 முதல் 450 வரை கிடைக்கிறது. சற்று பயிற்சி உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 600 ரூபாய் வரை வாங்குகின்றனர். ஆனால் 365 நாள்களும் வேலை இருக்காது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. மழைக்காலத்தில் பூமி குளிரலாம்.  இவர்கள் வயிறு காய்ந்து விடும். அதே போல எந்த மேஸ்திரியைச் சார்ந்து இருக்கின்றார்களோ, அவர்களுக்கு வேலை வந்தால்தான் இவர்களுக்கும் கிடைக்கும்.

இன்று பொதுவாகவே, மணல், சிமெண்ட், செங்கல் விலை  எல்லாம் கூடியிருப்பதால், கட்டிட வேலை குறைந்து போயுள்ளது. மணலைக் கள்ளச் சந்தையில்தான் வாங்க வேண்டியுள்ளது. அரசு சொல்லும் விலைக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. 2.80 ரூ செங்கல் இன்று 6 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. எனவே கட்டிடங்கள் கட்டுவது குறைந்துள்ளது என்கின்றனர்.

இது ஒரு ஆபத்தான தொழில். பல மாடிக் கட்டிடங்கள் கட்டப்படும்போது, தொழிலாளர்கள் தவறி விழுந்து இறந்து போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. கை, கால் முறிவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன.

சிமெண்ட், பெயிண்ட் ஆகியவற்றுடன் தொடர்ந்து வேலை செய்வதால், நுரையீரல் பாதிப்பு தொழிலாளர்கள் பலருக்கும் ஏற்படும். பட்டி பார்ப்பது என்பது கடினமான வேலை. நுண்தூசுகள் மூக்கு வழியாகச் செல்வதைத்  தடுக்கவே முடியாது.

உடல் உழைப்பு கூடுதலாக  இருப்பதால், பலர் வீட்டுக்குப் போகும் வழியிலேயே உடல்வலி தீர, டாஸ்மாக் கடைகளை நோக்கிச் சென்று விடுகின்றனர். வாங்கும் கூலியில் பாதிதான் வீடு போய்ச் சேர்க்கிறது.

நீண்ட பல போராட்டங்களுக்குப் பிறகு, கட்டிடத்  தொழிலாளர்களுக்கு உரிமை நல்கும் சில சட்டங்கள் வந்துள்ளன. அச்சங்கத்தின் தலைவர் திரு பொன். குமார் அவர்களைப்  பார்த்த பொழுது,  அது தொடர்பான பல தகவல்களைத் தந்தார். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக, உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான ஒரு சட்டம் வந்தது. அதன் அடிப்படையில்தான் பிறகு வாரியங்கள் உருவாகியுள்ளன.

(திரு பொன். குமார் அவர்களைப்  பார்த்த பொழுது)

1995 டிசம்பரில் ஜெயலலிதா ஆட்சியில், சென்னை, மதுரை, கோவையில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமென ஒரு வாரியம் தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் செயல்படவில்லை. கலைஞர் ஆட்சியில்தான், 2000 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் 14 வாரியங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. கட்டிடத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சவரத்  தொழிலாளர், மூட்டை தூக்குவோர், நடைபாதை வணிகர்கள் என்று அமைப்பு சாராத தொழிலாளர்கள் அனைவருக்குமான வாரியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் இன்றுவரை, கட்டிடத் தொழிலாளர்களுக்கும், பிறருக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.பணியில் இருக்கும்போது விபத்தில் இறந்தால் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், பிற  இடங்களில் விபத்தில் இறந்தால் 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகின்றது. இயற்கை மரணத்திற்கு 17000 ரூபாய் அளிக்கின்றனர். திருமணம், பிரசவம், கல்வி ஆகியனவற்றிற்கும் நிதி உதவி செய்யப்படுகின்றது. தொழிலாளர்களுக்கான ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகின்றது.

ஆனால் இன்று, நம் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய சிக்கலும் எழுந்துள்ளது. பீஹார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலிருந்து கூலித் தொழிலாளர்கள் வரவழைக்கப் படுகின்றனர். அவர்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை செய்வோம் என்கின்றனர். ஒரு நாள் ஊதியமாக 300 ரூபாய் போதும் என்று  கூறுகின்றனர். அங்கே வறுமையில் வாடும் அவர்களை முகவர்கள் சிலர் இங்கு அனுப்பி இடையில் அவர்கள் பணம் சேர்க்கின்றனர். நம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் இங்கு வேலை இழக்கும் சிலர் கத்தார போன்ற  பிற நாடுகளுக்குச் சென்று ஒட்டகம் மேய்க்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.

கல் சுமந்து, மண் சுமந்து பிழைக்கும் மக்கள், தங்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காய் நாடு விட்டு ஓடும் நிலை வராமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

அன்புடன்
– சுபவீ –