சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கறிஞர்களாக இருக்கும் நண்பர்கள் சிலரைப் பார்க்கச் சென்றிருந்தேன். நீதிமன்றத்திற்குள் பேசிக்கொண்டே வந்தபோது, ஒரு நீதிமன்ற அறையில் மட்டும் மக்கள் பெரும் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஆண்களும், பெண்களுமாய்ப் பெரும்பாலும் இளைஞர்கள். ஏன் இந்த அறையில் மட்டும் இவ்வளவு பேர் என்று கேட்டேன். இது ‘குடும்ப நீதிமன்றம்’ என்றனர் நண்பர்கள்.
குடும்ப நீதிமன்றம் என்றால், குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் நீதிமன்றம். பெரும்பான்மையான வழக்குகள் மணமுறிவு விவாகரத்து) கோரி நடைபெறும் வழக்குகள். ஆம், இன்று நாட்டில் மணமுறிவு செய்துகொள்ளும் மனநிலை கூடிக்கொண்டே இருக்கிறது என்பது உண்மை. என்ன காரணம்?
இதனை நாம் இருவிதமாகப் பார்க்கலாம். ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று போற்றப்பட்ட புனிதமான திருமணங்கள் இப்படிச் சட்டென்று முறிகின்றனவே என வருத்தத்தோடும் பார்க்கலாம். பெண்கள் அடிமைகளாக இருந்த காலம் மாறி, துணிந்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர் என்ற சிந்தனையோடும் பார்க்கலாம். இந்த இரண்டிற்குள்ளும் ஊடுருவிப் பார்க்க வேண்டிய பார்வையும் உள்ளது.
திருமணம் மட்டுமன்று, உலகில் எதுவுமே புனிதம் இல்லை என்பது நம்முடைய புரிதலாக இருக்குமானால், இந்த நிகழ்வுகளை விலகி நின்று பார்க்க வாய்ப்பு ஏற்படும். திருமணம் என்பது, வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம்தான். எந்த ஒரு ஒப்பந்தமும் முறிந்து போகக்கூடும் என்பது இயற்கை. ஆனாலும், அவசரத்திலும், கோபத்திலும் முடிவெடுத்து முறித்துக் கொள்ளும் அளவுக்கு இது அத்தனை சாதாரணமான ஒப்பந்தம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் என்றிருந்த அடிமைக்காலம் ‘போயே போய்விட்டது.’. (அந்தப் பழமொழிக்கு வேறு பொருள் உண்டு என்னும் செய்தி ஒருபுறமிருக்கட்டும்). அன்று பெண்கள் அப்படி அடங்கி ஒடுங்கி இருந்தமைக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பெண்கல்வி அன்று போதுமான அளவு வளரவில்லை. இரண்டு, பெண்கள் பொருளாதாரத் தற்சார்பு உடையவர்களாக இல்லை. இன்று இரண்டு நிலைகளுமே பேரளவு மாறிவிட்டன. இருப்பினும், உறவுகள் என்பன அறிவாலும், பணத்தாலும் கட்டப்பட்டவை அல்ல. அன்பாலும், பாசத்தாலும் பிணைக்கப்பட்டவை. எனவே, இறுதியிலும் இறுதியாகத்தான், மணமுறிவை நோக்கிச் செல்ல வேண்டும்.
நம் பிள்ளைகள் ஏன் இப்படி மணமுறிவு என்பதை நோக்கி விரைகின்றனர் என்று கேட்டபோது, உளவியல் வல்லுநர்கள் இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர். அண்மையில் மறைந்த, உளவியல் துறை சார்ந்த மருத்துவர் அசாரியா செல்வராஜ், தன்முனைப்பு, உடைமைச் சிந்தனை (Ego and Possessiveness) ஆகிய இரண்டும்தான் முதன்மைக் காரணங்களாக உள்ளன என்றார்.
ஆணுக்குப் பெண் அடிமை என்றிருந்த சிந்தனை இன்று தகர்ந்துவிட்டது. இதனை ஆண்களும் உணரத் தொடங்கி விட்டனர். இருந்தாலும், ஒரு பறவை தன் மேல் உள்ள நீர்த்துளிகளை ஒரு சிலிர்ப்பில் உதறி விடுவதை போல,எந்த ஒரு ஆணாலும் தன் ஆதிக்க குணத்தை உடனே உதறிவிட முடிவதில்லை. அதன் மிச்சம் மீதிகளை இன்றைய இளைய பெண்கள் ஏற்கத் தயாராக இல்லை. சில இடங்களில், ஆண்களை அடிமை கொள்ள நினைக்கும் பெண்களும் காணப்படவே செய்கின்றனர். இப்படிப்பட்ட இரண்டு இடங்களிலும் மோதல் வருவது இயல்பாகி விடுகிறது. மோதல் சமாதானத்தை நோக்கி நகராமல், முறிவை நோக்கிப் பல இடங்களில் நகர்ந்து விடுகிறது.
சண்டை போடும்போது, தான் என்கின்ற எண்ணம் மட்டுமே இருவரிடமும் மேலோங்கி நிற்கிறது. பின்னர் பிரிவு வந்துவிட்ட நிலையில்தான், ஒருவரின் தேவை மற்றவருக்குப் புரிகிறது. சேர்ந்து வாழும் போது ஏற்பட்ட பிணக்குகளை விட, பிரிந்து வாழ நேரும்போது உண்டாகும் வலி கூடுதலாக உள்ளது.
இரவும் பகலும் போல, ஆணும் பெண்ணும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்று இல்லாமல் இன்னொன்று இல்லை.ஒன்றே இன்னொன்றுக்கு ஆதாரமாகவும் உள்ளது. சாய்ந்து கொள்ள ஒரு தோளும், சரிந்து கொள்ள ஒரு மடியும் எல்லோருக்கும் தேவைப்படுகின்றன. அந்தத் தோளும், மடியும் எதிர்பாலினதாக இருப்பதை இயற்கை விரும்புகின்றது.
ஆகவே, வாழ்வில் வெற்றிபெற வேண்டுமானால், தன் துணைவரிடம் தோற்றுப் போகக் கற்றுக் கொள்ள வேண்டும். எங்கெங்கோ, யார்யாரிடமோ நாம் தோற்றுப்போகிறோம். நம்மிடம் அன்பும், பாசமும் கொண்ட ஒருவரிடம் தோற்றால் என்ன? பிரிவினால் ஏற்படும் வலியை விட, தோல்வியால் ஏற்படும் வலி பெரிதில்லை என்பதை உணர்ந்து கொண்டால், தன்முனைப்பு மறையும், இணையரிடையே இடைவெளி குறையும்.
இதற்கு எதிர்மாறான நிலையும் ஒன்று உள்ளது. அளவு கடந்த அன்பே பிரிவுக்கும் காரணமாய் விடுகின்றது. தனக்கு வேண்டும் என்பதைத் தாண்டி, தனக்கு மட்டுமே வேண்டும் என்று மனம் விரும்பத் தொடங்கிவிடும் நிலையில் வேறு விதமான சிக்கல்கள் உருவாகின்றன. வள்ளுவர் ஓரிடத்தில், அன்பு நல்லதுதான் செய்யும் என்று கருதி விடாதீர்கள், அறத்துக்கு மட்டுமின்றி,’மறத்துக்கும் அஃதே துணை’ என்பார். மறம் என்னும் சொல்லுக்கு வீரம் என்பதுதான் பொதுவான பொருள். ஆனால் இங்கே, அறம் என்னும் சொல்லுக்கு எதிர்ச் சொல்லாக அதனை வள்ளுவர் பயன்படுத்துகிறார். எனவே, அன்பு சில வேளைகளில் தீமைக்கும் துணை போய்விடும் என்று அவர் சொல்ல வருகிறார். இது ஒரு மிகப்பெரிய உளவியல் உண்மை.
அளவு கடந்த அன்பு, தன்னையும் வருத்தி, தான் விரும்பும் இன்னொருவரையும் வருத்தி எடுத்துவிடும். தனக்குரியவர் வேறு யாரோடும் பேசுவதை, சிரிப்பதை,உறவாடுவதை ஏற்க முடியாத மனம், மன உளைச்சலுக்கு ஆளாகும். வேறு எந்த வேலையிலும் ஈடுபடாது.எந்நேரமும் அதே சிந்தனையில் இருக்கும். காரணமில்லாமல் கோபப்படும். ஒன்றுமே நடக்காத போது , ஏதேதோ நடந்து விட்டதைப் போலக் கற்பனை செய்யும். இதனால் இருவருக்குமிடையே தேவையற்ற மோதல்கள் நிகழும். தான் இன்னொருவரின் கைதியாக ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். திருமண உறவை முறித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
இந்தத் தன்னுடைமை மனநிலையால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் பேசியபோது, இது எதனைக் காட்டிலும் கொடுமையான வலி என்று கூறினார். நாம் ஒருவாரம் வெளியூர் சென்று வருவதற்குள் பிரிவு வந்து விடுமோ என்று மனம் அஞ்சும். தூக்கம் தொலைந்து போகும். தன் நிலை மறந்து சாலையில் நடந்தும், ஓடியும் விபத்துக்கு உள்ளாக நேரும் என்று பல்வேறு நிலைகளை அவர் விளக்கினார். இந்த வலி பொதுவானதன்று. சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடியது. இதன் வேதனையை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிவார்கள் என்றார்.
உணவு, மருந்து, படிப்பு, தூக்கம் மட்டுமில்லை, அன்பு கூட அளவு சார்ந்ததுதான். ஒருவேளை தன் இணையர் தன்னை விட்டுப் போவதென்று முடிவெடுத்தால், அது முழுக்க முழுக்க அவருடைய உரிமை என்பதை, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதுதான் தனிமனித ஜனநாயகம்.
இவை எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, ஒருவர் மீது ஒருவர் அளவான அன்பும், தேவையான நம்பிக்கையும் கொண்டு வாழ்வதே வாழ்வாகும்.
வாழ நினைத்தால் வாழலாம், வாழத் தெரிந்தால் வாழலாம்!
அன்புடன்
– சுபவீ –