வலி – சமரசம் உலாவும் இடமே!

வழக்கமாய்ப் படிக்கும் செய்தித்தாள்களைத் தாண்டி வேறு சிலவற்றையும் வாங்குவதற்காக நான் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தபோது அந்த மனிதர் வந்தார். அறுபதைக்  கடந்த வயது. மெலிவான  உடல். முகத்தில் கருப்பும் வெள்ளையும் கலந்த தாடி.  வறுமையைப் பறை சாற்றும் தோற்றம்.

மெல்லிய குரலில் கடைக்காரரைப் பார்த்து, ஹான்ஸ் இருக்கா என்று கேட்டார். ‘இல்ல, அதெல்லாம் விக்கிறதில்ல’ என்றார் கடைக்காரர். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அந்தப் பெரியவர் மீண்டும்  ‘குடுப்பா’ என்றார். ‘இருந்தா குடுக்க மாட்டேனா, உண்மையாவே இல்ல’ என்றார் கடைக்காரர். பெரியவர் போவதாக இல்லை. வேறு சில பெயர்களைச் சொல்லிக் கேட்டார். மாவோ என்றோ வேறு ஏதோ சொன்னார். எனக்குச் சரியாகப் புரியவில்லை.

கடைக்காரர் இப்போது சற்றுக் கோபமாக, “சொன்னா புரிஞ்சுக்கிட மாட்டீங்களா? அதெல்லாம் பெரிய பிரச்சினை ஆகுது. நிஜமா விக்கிறதில்ல” என்றார் அழுத்தம் திருத்தமாக! ஒரு நிமிட அமைதிக்குப் பின், “சரி, ஒரு பீடி குடுப்பா” என்று கேட்டு அவர் வாங்கிச் செல்லும் வரையில், செய்தித்தாள் படிப்பதுபோல் நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

அந்த மனிதர் ஏமாற்றத்தோடு திரும்பியபோது, எனக்குள் ஒரு பொருளற்ற அனுதாபம் பிறந்தது. அவருக்கு நல்லதுதான் நடந்துள்ளது என்றாலும், அந்த முகம் காட்டிய வெறுமை ஒரு பரிவை உண்டாக்கியது.  பல்லாயிரக்கணக்கானவர்கள் இப்படிப் போதைக்கும், மதுவுக்கும் அடிமையாகிக்  கிடக்கின்றனர்.

கள் அருந்துதல் தமிழர்களுக்குப் புதியதன்று. கள் பற்றிய பல செய்திகள் நம் பழந்தமிழ் இலக்கியங்களான சங்க நூல்களில் காணப்படுகின்றன. ‘கள் நிறைந்த முசிறி’ என்பார் பரணர் (புறம்). பனைமரத்துக்குக் கீழே நின்ற ஆமை, மேலே இருந்து சொட்டிய கள்ளைக் குடித்துவிட்டு, பக்கத்து வயலை எப்படிக் கலக்கியது என்று கற்பனை நயத்துடன் எடுத்துரைப்பார், மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்.

அவ்வையும், அதியமானும் சேர்ந்து  கள் அருந்திய புறநானூற்றுப் பாடல் புகழ் மிக்கது.

“சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

பெரியகட் பெறினே யாம்பாடத்

தாம்மகிழ்ந்து உண்ணும் மன்னே”

என்று தொடங்கும் அப்பாடல். இன்னும் பல பாடல்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. ஆனால் எங்கும் குடித்துவிட்டுக் கலவரம் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. எனினும், கள் அருந்துவது தமிழர் மரபில் ஒரு பகுதியாகத்தான் அன்று இருந்துள்ளது.

ஆரியர்களும் கள்ளை விரும்பி அருந்தியுள்ளனர். வேதங்களில் காணப்படும் சுரா பானம் , சோம பானம் எல்லாம் மது வகைகள்தான். ராமாயணத்திலும் மது உண்டு. கி.மு. 4 ஆம் நூறாண்டைச் சேர்ந்த சாணக்கியர், திராட்சை ரசம் (ஒயின்) பற்றிப் பேசுகின்றார்.

திருக்குறள், நாலடியார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்தான் கள்ளையும், குடியையும் மறுக்கின்றன. “உண்ணற்க கள்ளை” என்று தெளிவாக அறிவுறுத்தியவர் திருவள்ளுவர்தான். என்றாலும், போதையின் மீது மக்களுக்குப் போதை குறையவே இல்லை. கூடிக்கொண்டேதான் வந்துள்ளது. இன்றைக்குக்  குடியால் நாடு அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது என்னும் விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. சாராயக் கடைகளை அடித்து நொறுக்கும் பெண்கள் ஒரு புறமும், சாராயம் குடித்துவிட்டு மனைவியரை அடித்து நொறுக்கும் ஆண்கள் மறுபுறமுமாக நம் சமூகப் பயணம் இன்று நடக்கிறது.

போதைப் பழக்கம் எப்படி வருகிறது? உழைக்கின்ற மக்கள் தங்கள் உடலின் களைப்பு தீர மது அருந்துகின்றனர். துப்புரவுத் தொழிலாளிகள் தங்கள் உடலின் நாற்றம் கலைய மது அருந்துகின்றனர். நகரத்து இளைஞர்களோ இளம் வயதில் நாகரிகம் என்னும் பெயரில், புகைக்கவும், குடிக்கவும் தொடங்கி, காலப்போக்கில் சிலர் அதற்கு அடிமையாகவே ஆகி விடுகின்றனர். பணக்காரர்கள் மத்தியில் அது சிலருக்குக் கௌரவத்தின் அடையாளமாக உள்ளது. எப்படியிருந்தாலும், எல்லாம் உடல்நலக் கேட்டிற்கே வழி வகுக்கின்றன.

வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு வகை வகையான மேலை நாட்டு மதுவகைகள் இங்கு வந்திறங்கின. அதன்பிறகு, ஏழைகளுக்கு, கள்ளும், சாராயமும், பணக்காரர்களுக்கு விஸ்கியும் ஒயினும் என்றாகி விட்டது.

முதலில் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகிறவர்கள், ‘பீர்’ என்னும்  மதுவில்தான் பெரிதும் தொடங்குவார்கள். அதில் மிகுதியான போதை கிடையாது என்பதும், ஏறத்தாழ அது பார்லி தண்ணீர்தான் என்பதும் பலரிடம் உள்ள கருத்து. ஆனால் அது உண்மையன்று. பீர் என்னும் மதுவகையிலும் போதைப்  பொருள் (ஆல்கஹால்) உள்ளது. என்ன வேறுபாடு என்றால், மேலை நாடுகளில் அது 3.5% மட்டுமே கலக்கப்படுகிறது.  ஆனால் நம்நாட்டில், போதை வணிகத்திற்காக 8 முதல் 12% வரை கலக்கப்படுகிறது. அதனால் இங்கு தொடர்ந்து  பீர் குடித்தாலும் பின் விளைவுகள் கேடாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் பீர் தவிர பிராண்டி, ரம், விஸ்கி, ஒயின், வோட்கா என்று பல்வேறு மது வகைகளும், பட்டைச்  சாராயம் போன்ற உள்ளூர் சரக்குகளுமாக ஏராளம் உள்ளன. எல்லாம் நம்முடைய கல்லீரலைக் கெடுப்பதில் போட்டி போட்டு வேலை செய்கின்றன. கூடுதல் மதுப்பழக்கத்தால், கை நடுக்கம், கட்டுப்பாட்டை இழத்தல், சுய நினைவு இழத்தல், வயிற்று வலி, ரத்த வாந்தி எடுத்தல் போன்ற பல்வேறு உடல்நலக் கேடுகளுக்கு உள்ளாகும் வாய்ப்புண்டு.

எல்லாவற்றையும் தாண்டி, ஒரு கட்டத்தில் மூளையைப் பாதிக்கின்றது என்பதும் உண்மை. உடல்நலம் தாண்டி, சமூகச் சிக்கல்கள் பலவற்றிற்கும் இந்தக் குடிப் பழக்கமே காரணமாக உள்ளது. வரவை மிஞ்சிய செலவு, கணவன் மனைவிடையே தேவையற்ற சண்டைகள், மன உளைச்சல் போன்ற குடும்பச் சிக்கல்களும், தெருச்சண்டை, கலவரம் போன்ற சமூகச் சிக்கல்களும் இதனால் ஏற்படுகின்றன.

உலக நாடுகளும் மதுவின் தீமையை உணர்ந்து, அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கின.முதன்முதலில், சீன நாட்டில் உள்ள ஷாங்காயில், 1909 ஆம் ஆண்டு இதற்காகவே ஒரு மாநாடு நடந்துள்ளது. மதுவின் கொடுமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறியுள்ளது.

அனைத்துலக போதைக் கட்டுப்பாட்டு  வாரியம் (INCB – International Narcotics Control Board) 1961 இல் 161 போதை மருந்துகளைத் தடை செய்துள்ளது. 1997 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அவை, போதைக் கட்டுப்பாடு மற்றும் குற்றத் தடுப்பு மாநாட்டைக் கூட்டி விவாதித்துள்ளது.

என்ன செய்து என்ன? மக்களைப் போதையிலிருந்து இன்னும் மீட்க முடியவில்லை. தமிழ்நாட்டில் சாராயம் அருந்தும் பழக்கம் மாணவர்களிடையே கூட பரவி வருகின்றது.கல்லூரி மாணவியரின் விடுதிகளிலும் இப்பழக்கம் இப்போது மிகுதியாகி வருவதை ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது. இன்று ‘டாஸ்மாக்’ கடைகள்தாம், சமரசம் உலாவும் இடங்களாக இருக்கின்றன. அரசும், சாராய விற்பனையில்தான் காலம் தள்ளுகிறது. ஒரு திரைப்படத்தில் சொல்வது போல, “நாங்க தடுமாறினாத்தான் அரசு ஸ்டெடியா நிக்க முடியும்” என்பது உண்மை போல் ஆகி விட்டது.

குடிப்பவர்கள் எல்லோரும் தீயவர்கள், மற்றவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று பொருளில்லை. குணம் வேறு, பழக்கம் வேறு. இந்தப் பழக்கம் உடலுக்குக் கேடு என்பதை உணர்த்துவதே நம் நோக்கம்.  இப்பழக்கம் உடையவர்கள் ஒருவித நோயாளிகளே. அவர்களை அன்புடன் நடத்துவதன் மூலமே அவர்கள் மன நிலையை  மாற்றிக் கொண்டு வர முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சரிந்து கொண்டுள்ள சமூகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், போதைப் பொருள்களையும் மதுவையும் ஒழித்தே தீரவேண்டும்.

அன்புடன்
– சுபவீ –


English Summary
Subavee's article series about pain and agony faced by people who are addicted to drugs and liquor, and the toll it takes on our society.