ஒரு வாரத்திற்கு முன்பு, +2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அன்று மாலையே ஊடகங்களில் வந்த ஒரு செய்தி நெஞ்சைப் பிழிவதாக இருந்தது. 1200க்கு 1095 மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒரு பிள்ளை, மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுவிட்டதாக எண்ணி, அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட கொடுமையான செய்திதான் அது!  தேர்வில் வென்று,  வாழ்வில் தோற்றுப்போன பரிதாபத்தை என்னென்று சொல்வது?

தேர்வு முடிவுகள் வரும் நாளில் தற்கொலைச் செய்திகளும் சேர்ந்தே வருவது புதிதில்லைதான். ஆண்டுகள் பலவாக இந்நிலையை நாம் பார்க்கிறோம். ஆனாலும், ஒரு வேறுபாட்டை நாம் மறுக்க முடியாது. முன்பெல்லாம், தேர்வில் தோல்வியைத் தழுவிய மாணவர்கள்தாம் இப்படித் தற்கொலை செய்து கொள்வார்கள். இப்போது, வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஏன் இப்படி? தன்னம்பிக்கையற்ற இந்தப் போக்கு வளர்வதற்கு யார் காரணம்? நாம்தான் காரணம். நம் சமூக அமைப்புதான் காரணம். கடந்த ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட நம் சமூகம், கல்விக் கூடங்களுக்குள் காலடி எடுத்து வைத்தபின், இனி கல்விதான் எல்லாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது.கல்வி இல்லையேல் வாழ்வே இல்லை என்று முடிவு செய்து கொண்டது. தன் அச்சத்தை இந்த சமூகம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பரப்பியது. அதன் விளைவாகத்தான் இன்றைய நிகழ்வுகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் குருகுலம், திண்ணைப் பள்ளிக்கூடம் எல்லாம் இருக்கத்தானே செய்தன என்று வினா எழலாம். ஆனால் அவை எல்லாம் அனைத்து மக்களுக்கும் பொதுவான கல்வி நிலையங்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே குருகுலத்தில் சேர முடியும். சமூகக் கட்டுமானத்தில் அடுத்த நிலையில் இருந்தோர் திண்ணைப் பள்ளிக்கூடத்தை அமைத்துக் கொண்டனர். இந்தப் பள்ளியும் எல்லோருக்கும் உரியதில்லை. 1836இல் தான், அனைவருக்குமான பொதுக் கல்வித் திட்டம் வந்தது. அதன் பின்பும், உடனடியாக நம் பாட்டன்மார்களும், அவர்களின் தந்தைமார்களும், பள்ளிகளுக்கு வந்துவிடவில்லை. அச்சம் மறைந்து, தயக்கம் ஒழிந்து, கல்வி நிலையத்தின் கதவுகளைத் தட்டுவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆயின. அதனையும் தாண்டிப் பல ஆண்டுகளுக்குப் பின்பே, நம் வீட்டுப் பெண்கள் பள்ளிக்கூடம் நோக்கிச் சென்றனர்.

1901 ஆம் ஆண்டுக் கணக்கின்படி, இந்தியாவில் மொத்தம் 5 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருந்தன. இந்தியா என்றால் இன்றைய இந்தியா அன்று. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பர்மா, நேபாளம், ஸ்ரீலங்கா  எல்லாம் சேர்ந்தது அன்றைய இந்தியா. அனைத்துக்கும் சேர்த்து ஐந்து பல்கலைக் கழகங்கள்தான் இருந்தன. அவற்றுள் ஒன்று இன்றைய சென்னைப் பல்கலைக் கழகம் என்பது நமக்குத் பெருமை. அவ்வளவுதான்.

ஆதலால், குறைந்த மக்களே அன்று கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். அக்கல்வி ஒளி மெல்ல மெல்லப் பரவி, இன்று நம் எல்லோரது வீடுகளுக்கும் வந்து சேர்ந்துள்ளது. . கல்வி நமக்குச் செல்வத்தைத் தந்தது, செல்வாக்கைத் தந்தது, பதவிகளைப் பெற்றுத் தந்தது, வெளிநாட்டு அனுபவங்களையும் தந்தது. அதனால் கல்வியின் மீது நமக்கு ஒரு மயக்கமே ஏற்பட்டது. அடுத்த தலைமுறையை நோக்கி, ‘படி, படி’  என்று துரத்தினோம்; நாம் பெறாத செல்வத்தை  நம் பிள்ளைகளாவது பெற வேண்டுமே என்ற ஏக்கத்தில். எனினும் அதன் பக்க விளைவுகள் வேறாகிவிட்டன.

படிப்பதும், நல்ல மதிப்பெண்களை பெறுவதும் நல்லதுதான்.ஆனால், தன்னம்பிக்கையோடு இருப்பது அதனை விட நல்லது. படிக்காதவர்கள் அனைவரும் இந்த உலகில் இறந்தா  போய்விட்டார்கள்? படிப்பைத் தவிர நம்மைக் காப்பாற்ற இந்த உலகில் வேறு எதுவுமே இல்லையா? நம் உழைப்பு, இயற்கையான நம் அறிவு, இவைகளுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லையா?

படிப்பின் தேவையை வலியுறுத்திய அளவுக்கு, நாம் வாழ்வில் துணிவு தேவை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்தத் தவறிவிட்டோம். மதிப்பெண்கள் பெரும் ஓட்டப்பந்தயத்தில் நம் பிள்ளைகளைத் தொலைத்து விட்டோம்.

பொதுச் சிந்தனை, பரந்துபட்ட படிப்பு, இசை, கலை, இலக்கியம் எதுவும் வேண்டாம், படித்து முதல் மதிப்பெண் பெற்றால் போதும் என்கிற ஓர் அடிமை மனநிலையை நாமே நம் பிள்ளைகளிடம் ஏற்படுத்தி விட்டோம். இன்று பிள்ளைகளை இழந்து வலியில் துடிக்கிறோம்.

படிப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதிதான். இவ்வளவு பெரிய உலகத்தில் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன, நாம் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் என்ற நம்பிக்கையே வாழ்வின் பெரும்பகுதி!

அன்புடன்
– சுபவீ –