சில நாள்களுக்கு முன் நான் ஒரு கடையில் முடி திருத்திக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், முடி திருத்திய தம்பியிடம், “கட்டிங் எவ்வளவு?” என்று கேட்டார். “120 ரூபாய் சார்”. என்றதும், ” ஷேவிங்…?’ என்றார். 60 ரூபாய் என்று விடை வந்தது. “இரண்டும் சேந்துன்னா..?” என்று மறுபடியும் கேட்டார். “அதேதான், 180 ரூபாய்” என்று முடி திருத்துபவர் சொன்னார். சற்று தயங்கி, ” ரெண்டுக்கும் சேத்து 150 ரூபாய் வாங்கிக்க கூடாதா?” என்று சிரித்துக் கொண்டே ஒரு பேரம் பேசினார். “இல்ல சார், ஒரே ரேட்தான்” என்று அந்தத் தம்பி மறுத்து விடவே, அவர் முகத்தில் ஒரு சிறிய சோகம் படர்ந்தது. கண்ணாடி வழியே அவரின் முகச் சுருக்கத்தைப் பார்க்க முடிந்தது. மெதுவாக அவர் வெளியேறி விட்டார்.
முடி திருத்தி வீடு வந்த பிறகும் அந்த நிகழ்ச்சி என் எண்ணத்தை விட்டு வெளியேறவில்லை. ஏன் வெறுமனே ஒரு முப்பது ரூபாய்க்காக அந்தப் பெரியவரின் முகத்தில் அப்படி ஒரு துயரக் கீற்று படர்ந்தது என்று தோன்றியது. பிறகு அவருக்கு அந்தத் தொகை “வெறும்” முப்பது ரூபாயாக இருக்காதோ என நினைத்தேன். நடந்ததை என் மனைவியிடம் சொன்னேன். “ஒரு வேளை , 150 ரூபாய்தான் கொடுத்து விட்டார்களோ என்னவோ” என்றார். அந்த வரி என்னை மேலும் பாதித்தது.
கொடுத்து விடுபவர்கள் யாராக இருக்கும்? மகன் அல்லது மருமகளாக இருக்கலாம். இல்லையெனில், மகள், மருமகனாகக் கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் – அவர்கள் பிள்ளைகள்தான் என்றாலும் – பிறரைச் சார்ந்து இருப்பதில் நம்மை அறியாமல் ஒரு வலி இருக்கத்தான் செய்யும். குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோரிடம் பணம் வாங்கிய நேரத்தில் அது நமக்கு வலியாக இல்லை.மகிழ்வாக இருந்தது. பெரியவர்களான பிறகு பிறரைச் சார்ந்திருப்பது வலிக்கிறது.
எந்த ஒன்றும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எப்போதோ படித்த ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது. “தாயின் மடியில் தவழ்ந்தபோது அம்மாவுக்கு நான் சுமையாக இல்லை, சுவையாக இருந்தேன். மங்கை ஒருத்தியை மணந்தபின், முதலிரவில் அவளுக்கு நான் சுவையாக இருந்தேன், கொஞ்சம் சுமையாகவும் இருந்தேன். இறுதியாய், நான்கு பேர் தோள்களில் பயணித்த போது,, யாருக்கும் நான் சுவையாக இல்லை, வெறும் சுமையாக இருந்தேன்.”
இப்படித்தான், பிறருக்கு நாம் சுவையாகவும், சில வேளைகளில் சுமையாகவும் இருக்கிறோம். இந்தப் பெரியவர் யாருக்குச் சுமையோ தெரியவில்லை. மாறாக, எங்கள் கற்பனை முழுவதும் தவறாகவும் இருக்கலாம். அவர் இயல்பாகவே சிக்கனமான குணம் உடையவராகவோ, பேரம் பேசிப் பணம் கொடுப்பதில் நாட்டம் உள்ளவராகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்தச் சிந்தனை அந்த ஒரே ஒரு மனிதரைப் பற்றியதன்று. நாடு முழுவதும் உள்ள முதியவர்களை பற்றியது. அவர்களில் பலருக்கும் உள்ள வலி பற்றியது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில், நம் சமூகம் ஒரு நிலவுடைமைச் சமூகமாகத்தான் இருந்தது. ஒரு ஊரில் இருந்த நிலமும் , அதனைச் சுற்றியே வாழ்க்கையும் என்றிருந்தது. அதனால் எல்லா ஆண் பிள்ளைகளும் திருமணத்திற்குப் பிறகும், குடும்பத்தோடு ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். காலம் மாறியது. தொழிற்சாலைகள் தோன்றின. நம் பிள்ளைகளுக்கும் பள்ளிக் கதவுகள் திறந்தன. படித்து முடித்தபின், வெவ்வேறு ஊர்களில் வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினர். கூட்டுக் குடும்பங்கள் மெல்ல உடைந்தன.. தாத்தா, பாட்டி, அத்தை, மாமன் என்றிருந்த பெரிய குடும்பங்கள் சிறியனவாகச் சுருங்கின. கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள் மட்டுமே ஒருகுடும்பம் என்ற நிலை ஏற்பட்டது. இங்குதான் முதியோர் ஒரு சுமையாகச் சில குடும்பங்களில் மாறினர்.
சமூக அமைப்பு, பண்பாட்டுச் சிதைவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவைகள் முதியோரின் நிலையைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இன்று பிள்ளைகள் அனைவரும் தங்களின் பெற்றோர் மீது அன்பும், பாசமும் இல்லாதவர்கள் என்று சொல்வது உண்மைக்கு மாறான குற்றச்சாற்று. முன்னைக் காட்டிலும் இன்று தேவைகள் பெருகியுள்ளன. அந்த அளவிற்குப் பொருளாதார நிலை அனைவருக்கும் உயர்ந்து விடவில்லை. எனவே பெற்றோரைப் பேணிக் காப்பதில் சில சிக்கல்கள் உள்ளன.
இதனைத் தாண்டி இன்னொரு பெரிய காரணமும் உள்ளது. ‘தலைமுறை இடைவெளி’ என்று அதனைக் குறிப்பிடலாம். நேற்றைய மதிப்பீடுகள் இன்று மாறிப் போயுள்ளன. ஆதலால், தேவையான செலவு என்று பிள்ளைகளும், பேரன், பேத்திகளும் கருத்துகின்றவைகளை, ஆடம்பரம், தேவையில்லாத செலவு என்று தாத்தாக்களும், பாட்டிகளும் கருதுகின்றனர். அங்கும் சில மோதல்கள் உருவாகின்றன.
இவை போன்ற இடைவெளிகள் முற்றத் தொடங்கும் வேளையில், பெற்றோர்களிடம் காட்டும் அன்பைக் குறைத்துக் கொள்கின்ற, பெற்றோரைச் சுமையாக நினைக்கின்ற பிள்ளைகளும் உண்டு. என்னதான் அன்பு காட்டினாலும், முரண்டு பிடிக்கும் பெற்றோர்களும் உண்டு.
முப்பது ஆண்டுகளுக்கு முன் இல்லாத, இன்னொரு புதுச் சிக்கலும் இன்று உருவாகியுள்ளது. இன்றைய கணிப்பொறி யுகத்தில் நம் பிள்ளைகள் கணிணிப் படிப்பில் தேர்ந்து, வெளிநாடுகளுக்குப் பறக்கத் தொடங்கி விட்டனர். அறிவியலின் வளர்ச்சியால் நம் அடுத்த தலைமுறை பெற்றுள்ள பெரும் வாய்ப்பிது. ஆனால் இங்கும், பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமான இடைவெளி கூடிவிடுகிறது. பெற்றோரின் அருகாமையைப் பிள்ளைகளும், பிள்ளைகளின் அரவணைப்பைப் பெற்றோர்களும் இழந்து விடுகின்றனர்.
ஆயிரம்தான் பொருள் ஈட்டினாலும், அப்பா, அம்மாவை ஐஸ் பெட்டியில் பார்க்கும் நிலைதான் இன்று பிள்ளைகள் பலருக்கு வாய்க்கிறது. சிலருக்கு அந்த நிலை கூட இல்லை. “பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் சிதையில் எரிந்து கொண்டிருந்த அம்மாவை அவன் ஸ்கைப்பில் பார்த்தான்” என்று ஒரு கதையில் படித்தேன். வாழும்போதும், பேரப்பிள்ளைகளைக் கணிப்பொறித் திரையில் தொட்டுக் கொஞ்சுவதுதான் பலருக்கு இன்றைய நடைமுறையாக உள்ளது.
இவையெல்லாம் வலிகள்தான். என்ன செய்யலாம்? என்னதான் தீர்வு? வாழ்வின் மாற்றங்களைப் புரிந்து கொள்வதும், வலி தாங்கி வாழப் பழகிக் கொள்வதும்தான் ஒரே தீர்வு. எழுத்தாளர் பாலகுமாரன், தன் நாவல் ஒன்றில், “வாழ்க்கை என்றால் யுத்தம், யுத்தம் என்றால் வலி. வெற்றி வேண்டுமெனில் வலி தாங்கு” என்று எழுதுவார். வலி தாங்குவது என்பதை விட, வலியைப் புரிந்து கொள்வது என்பதே சரி.
இன்றைக்குத்தான் பெற்றோரை விட்டுவிட்டுப் பிள்ளைகள் வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள் என்று கருதக்கூடாது. முந்தைய தலைமுறையிலும் அது நடந்தது.பெற்றோரைச் சின்னச் சின்னக் கிராமங்களில் விட்டுவிட்டு நாங்களெல்லாம், சென்னை போன்ற மாநகரங்களுக்கு வந்தோம். இப்போது எங்கள் பிள்ளைகள் எங்களைச் சென்னை, கோவை, திருச்சியில் விட்டுவிட்டு அமெரிக்கா , ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டனர். எங்களால் சென்னை வரைக்கும்தான் அன்று வர முடிந்தது. அவர்களால் இன்று பல வெளிநாடுகளுக்கே செல்ல முடிகிறது. தலைமுறைகளின் துயரமாகப் பார்க்காமல், தலைமுறைகளின் வளர்ச்சியாகப் புரிந்து கொண்டால் வலியே மகிழ்ச்சியாய் மாறும்.
எழுத்தாளர் செய்யாறு தி.தா. நாராயணன், “புதிய ஏற்பாடு” என்னும் தன் சிறுகதை ஒன்றில் இந்தச் சிக்கல் குறித்து விரிவாகவே எழுதியுள்ளார். ஒரு முதியோர் விடுதியில் இரண்டு பெரியவர்களுக்கிடையில் நடக்கும் உரையாடலின் மூலம் ஒரு கருத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பார்.
அவர்களில் ஒருவர் ‘வெளிநாட்டில் இருக்கும் தன் மகன் தன் அம்மாவின் சாவிற்கும் கூட ஒரு வாரம் தாமதமாகத்தான் வந்தான். பணம் மட்டும் அனுப்புகிறான். பணம்தானா வாழ்க்கை? வயதான காலத்தில் அருகிருந்து அன்பு காட்ட வேண்டாமா?’ என்று சொல்லிப் புலம்புகிறார். இன்னொரு பெரியவர் அவருக்கு ஆறுதலாகச் சொல்லும் சில வரிகள், நாம் இன்று புரிந்துகொள்ள வேண்டிய சில நடைமுறை உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன.
“வேற்று நாட்டு மனுஷங்க மத்தியில வாழுற அவுங்களுக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் இருக்கு, அதப் புரிஞ்சுக்க வேண்டாமா நாம? அவுங்களுக்கும் அப்பா, அம்மாவப் பாக்க முடியலையேங்கிற மனக்கஷ்டம் இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது….தங்களோட பிள்ளைங்களைக் கொஞ்சுறதுக்கும் நேரமில்லாம, குளிர்லயும், பனியிலயும் இயந்திரமா ஓடிக்கிட்டிருக்காங்க. நம்ம நிலைய மட்டுமே பாக்கக்கூடாது. அவுங்க நிலையில நின்னும் பாக்கணும். பாசத்த பார்சல் பண்ணி அனுப்ப முடியுமா? பணத்தைத்தான் அனுப்ப முடியும். அனுப்புறாங்க. பணத்துக்குப் பதிலா பாசம். இந்தப் புதிய ஏற்பாட்டைப் புரிஞ்சுகிட்டு, இங்கே இருக்கிற நம்ம வயசு ஒத்த நண்பர்களோட மகிழ்ச்சியா இருக்க கத்துக்க வேண்டியதுதான்”
கால ஓட்டத்தில் மாற்றங்களுக்கு நாம் ஆளாகின்றோம். மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு, அவற்றிற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளப் பழகிக்கொள்பவர்களே வாழத்தெரிந்த மனிதர்கள்.
அப்படியானால் இனிமேல் முதியவர்கள் அனைவரும் முதியோர் இல்லம் நோக்கிப் போக வேண்டியதுதானா என்று கேள்வி எழலாம். அப்படியில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி. உடல்நலமும், ஓரளவு பொருளாதார வளமும் இருக்குமானால், யாரும் யாருக்கும் சுமையாக இருக்க வேண்டியதில்லை. அதுவரையில் பெற்றோர் பிள்ளைகளை நாட வேண்டியதும் இல்லை. ஆனால், உடல்நலம் சீர்கெட்டு வாழ்க்கை முடங்கிப் போகுமானால், பிள்ளைகளை நாடும் உரிமை பெற்றோருக்கு உண்டு. பெற்றோரைக் கவனித்துக் கொள்ளும் கடமை பிள்ளைகளுக்கும் உண்டு.
நேரடியாக அருகிருந்து பெற்றோரைக் கவனிக்க இயலாதெனில், உரியவர்களை உடன் அமர்த்தி அவர்களைப் பாதுகாக்கலாம். அதுவும் இயலாத தருணங்களில், முதியோர் இல்லத்தை நாடுவதில் தவறொன்றும் இல்லை. அதில் கவுரவக் குறைவும் இல்லை.
முதுமை என்பது தன் வயது ஒத்த மற்றவர்களுடன், பழைய நினைவுகளை அசை போட்டு வாழ்வதாகவே அமையும். கனவுகளில் தவழும் இளமை. நினைவுகளை அசைபோடும் முதுமை.
முதியோர் இல்லங்களை நான் பரிந்துரைக்கவில்லை. எனினும் வளர்ந்து கொண்டிருக்கும் இயந்திரமயமான வாழ்வின் எதிர்காலத்தில், அது தவிர்க்க இயலாததாக ஆகிவிடக் கூடும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே முதியோர் இல்லங்கள் மேலும் சீரமைக்கப்பட்டுச் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும். எவற்றையெல்லாம் ஒழிக்க முடியாதோ, அவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளவாவது வேண்டும்தானே!!
அன்புடன்
– சுபவீ –