1938-க்குப் பிறகு 1953இல் –
மீண்டும் ராஜாஜி, மீண்டும் பெரியார்
மீண்டும் கல்வித்திட்டம், மீண்டும் போராட்டம்!!
அந்தப் போராட்டம் குறித்து விரிவாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. 1938-1953 இரண்டு போராட்டங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகளும், சில வேறுபாடுகளும் உள்ளன. இரண்டு போராட்டங்களும் கல்வி சார்ந்தவை என்பது ஒற்றுமை என்றால், முதல் போராட்டம் மொழி தொடர்பானது, இரண்டவாது போராட்டம் சமூக நீதி தொடர்பானது.
இரண்டாவது முறையாக, 1952 ஏப்ரல் 10ஆம் நாள், ராஜாஜி தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இம்முறையும் அவர் தேர்தலில் நின்று, மக்களின் வாக்குகளைப் பெற்று, முதலமைச்சராகவில்லை. ஆளுநரின் நியமனப்படி, சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, அதன்வழி முதலமைச்சரானார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு, 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. தனிப்பெரும் கட்சியாகக் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற முடிந்ததே அல்லாமல், பெரும்பான்மை உறுப்பினர்களை அக்கட்சியால் பெறமுடியவில்லை.
வெவ்வேறு கட்சிகளில் வெற்றிபெற்றவர்களின் ஆதரவோடும், எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடும், ராஜாஜி முதலமைச்சரானார். ‘கொல்லைப்புற வழியாகக் கோட்டைக்கு வந்தவர்’ என்பார் பெரியார்.
1938இல், எப்படி யாரையும் கேட்காமல், தன் அமைச்சரவையில் கூடக் கலந்து கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் எல்லாப் பள்ளிகளிலும் இந்தி கட்டாயப்பாடம் என்று அறிவித்தாரோ, அதேபோல இப்போதும், அமைச்சரவையில் கலந்து பேசாமல், சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல், வரும் கல்வியாண்டு முதல் புதிய கல்விமுறையை நடைமுறைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அதன் பிறகு, 1952 ஜூலை மாதம், கல்வியமைச்சராக இருந்த டாக்டர் எம்.வி.கிருஷ்ணாராவ், தொடக்கப்பள்ளிக் கூடங்களில், ஒரு புதிய கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவது பற்றி அரசு சிந்தித்துக் கொண்டுள்ளது என்று கூறினார். சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட யாரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தத் திட்ட முன்வடிவம், கல்வித் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது பொதுக்கல்வி இயக்குநராக இருந்த கோவிந்தராஜ் என்னும் அதிகாரியும், அதில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை. மீண்டும் 1953ஆம் ஆண்டு, மார்ச் மாதம், கல்வியமைச்சர் சட்டமன்றத்தில் அதே செய்தியைக் கூறினார். அப்போதும், அது மக்களின் கவனத்தையோ, எதிர்க்கட்சிகளின் கவனத்தையோ ஈர்க்கவில்லை.
இறுதியாக அத்திட்டம் பற்றிய செய்திகள் முழுமையாக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவித்த மறுநாளிலிருந்தே, எதிர்ப்புகள் தொடங்கிவிட்டன. இக்கல்வித்திட்டம் என்பது, மறைமுகமாக வருணாசிரமத்தை நிலைநிறுத்தும் குலக்கல்வித் திட்டம் என்று திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தங்கள் கருத்தை வெளியிட்டன. கம்யூனிஸ்ட் கட்சியும், பிற கட்சிகளும் கூட அத்திட்டத்தை எதிர்த்தன. ஆனால், இதற்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மனப்பாடக் கல்விக்கு எதிரான, வாழ்க்கைக் கல்வியையே இத்திட்டம் முன்மொழிகிறது என்றும் அரசு கூறியது. அரசின் கூற்றுக்கு ஆதரவாக, கல்கி, ஆனந்தவிகடன் போன்ற ஏடுகளும், ஜி.ராமச்சந்திரன் போன்ற கல்வியாளர்கள் சிலரும் எழுதினர். தூத்துக்குடி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்த சீனிவாச ராகவன், பேராசிரியர் வெங்கட ரங்கையா, மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, இந்துமதக் கல்வியாளர் கே.எஸ்.ராமசாமி சாஸ்திரி முதலியோரும் இத்திட்டத்தை வரவேற்றனர்.
மேலைநாடுகளிலும், இதுபோன்ற கல்வித்திட்டத்தை வரவேற்றுச் சிந்தனையாளர்கள் பலர், கருத்து கூறியுள்ளனர் என்பதை அவர்கள் எடுத்துக்காட்டினர். கல்வி என்பது வெறும் மனப்பாடம் சார்ந்ததாக இருக்குமானால், அது தேசத்தின் முன்னேற்றத்திற்கே, எதிரானதாக இருக்கும் என்று தன் ‘சமூக ஒப்பந்தம்’ என்னும் நூலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரூசோ (Rousseu) எழுதியிருப்பதை அவர்கள் மேற்கோள் காட்டினர். கல்வி என்பது தொழில் சார்ந்ததாக இருக்க வேண்டும். என்னும் கருத்தை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஜோஹன் ஹைன்ரிக், (Johann Heinrich) ஜெர்மனியைச் சேர்ந்த பெட்ரிக் ஃப்ரோபெல் (Fredrich Froebel), இங்கிலாந்தின் ஹெர்பர்ட் ஸ்பென்சர்(Herbert Spencer), அமெரிக்காவின் ஜான் டூவே(John Dewey) ஆகியோர் அக்கருத்தைக் கொண்டிருந்தனர் என்பது உண்மைதான்.
ஆனால், மேலை நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் உள்ள ஒரு பெரும் வேறுபாட்டை நாம் மறந்துவிடக் கூடாது. அங்கெல்லாம், யார் வேண்டுமானாலும், எந்தத் தொழிலை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், இங்கோ, ‘பெற்றோர்களின் தொழிலைக் கற்றுக் கொள்வது’ என்பது, சாதி அடிப்படையில் கல்வியைத் தீர்மானிப்பது என்று ஆகிவிடுகிறது. அதனால்தான் அக்கல்வித் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது.
முதலமைச்சர் ராஜாஜி இந்த விமர்சனத்தை, முற்றிலுமாக மறுத்தார். இத்திட்டத்திற்குப் பின்னால், சாதி உணர்வு இருப்பதாக, வேண்டுமென்றே, திராவிடர் கழகம், ஒரு பொய்யான செய்தியை மக்களிடம் பரப்புவதாகக் கடிந்து கொண்டார். ஆனால், ராஜாஜியின் நூலிலேயே அப்படியொரு கருத்து பதிவாகியிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ராஜாஜியின் சொற்பொழிவுகள், தொகுக்கப்பட்டிருக்கும் ஒரு நூலில், அவர்
“நாட்டில் உணவு உற்பத்தி நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. துணிகள் நெய்யப்படுகின்றன. ஆடு, மாடுகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் மேய்க்கப்படுகின்றன. எவ்வாறு எல்லாம் ஒழுங்காக நடைபெறுகிறது எனில், அந்தந்தச் சாதியினர் அந்தந்தத் தொழில்களை முறையே செய்து வருகின்றனர். வீடு வீடாக இருக்கிறது. அதே நேரத்தில், அது ஒரு தொழிற்கூடமாகவும் இருக்கிறது” (“The food is grown, the cloth is woven, the sheep are shorn, the cows are grazed, the shoes are stitched, the scavenging is done, because, thank God, the respective castes are still there and homes are homes as well as trade schools….” – Rajaji speeches, vol II, p.13)
என்று எழுதுகின்றார். எனவே, சாதி அடிப்படையிலான தொழில் என்பதே அவருடைய உட்கருத்தாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.
பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதே, ராஜாஜியைச் சுற்றிப் பார்ப்பனர்களே மிகுதியாக இருந்தனர். இதற்கு ஒரு எடுத்துக்காட்டையும், பெரியார் தன் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்துகின்றார். டாக்டர் வரதராஜுலு நாயுடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்துபோது, அவர் மீது ராஜாஜி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். அத்தீர்மானத்திற்கு, ஆதராவாக வாக்களித்தவர்கள், டாக்டர் சாமிநாத சரஸ்வதி, டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் அய்யங்கார், கே.சந்தானம் அய்யங்கார், ஆலாஸ்யம் அய்யர், என்.எஸ்.வரதாச்சாரி, சேலம் சுப்பாராவ், ஓ.கிருஷ்ணமாச்சாரி என அனைவரும் பார்ப்பனர்களாவே இருந்ததை, பெரியார் சுட்டிக்காட்டுகின்றார்.
ஆக மொத்தம், கல்வித்திட்டம் பற்றிய விவாதம், சாதி பற்றிய, சமூகநீதி பற்றிய பெரும் விவாதமாக தமிழ்நாட்டில் மூண்டது. அப்போதுதான் 1938ஆம் ஆண்டே ராஜாஜிக்கு இப்படி ஓர் எண்ணம், இருந்திருக்கிறது என்பதும் சட்டமன்ற விவாதத்தில் வெளியானது. பாதிநேரம் படிப்பு, பாதிநேரம் குலத்தொழில் என்னும் திட்டத்தைக் கொண்டு வருவது பற்றி, அப்போதே ராஜாஜி அதிகாரிகளுடன் பேசி இருக்கிறார். அன்று, கல்வித்துறை அதிகாரியாக இருந்த ஸ்டார்த்தம் அதனை ஏற்கவில்லை. பிறகு, மதுரை மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் மட்டும் சோதனை முயற்சியாக, அது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் அது முழுதோல்வி அடைந்துவிட்டது.
மீண்டும் 1953இல், ராஜாஜியால் அதே திட்டம், கொண்டுவரப்பட்ட போதும், எதிர்ப்பையே சந்தித்தது. ராஜாஜியை ஆதரித்து, அவரை ஆட்சியில் அமர்த்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமின்றி, அவருடைய சொந்தக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தக் காலச்சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள், காமராஜருக்கு ஒரு பெரும் செல்வாக்கு இருந்தது.
1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் போராட்டத்தில், கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தவர் காமராஜர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தவரும் அவர்தான். ராஜாஜியோ, போராட்டம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 1942 ஜூலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலகிவிட்டார். போராட்டமெல்லாம் முடிந்து இந்தியா விடுதலை பெறும் நேரத்தில்தான், மீண்டும் கட்சிக்குள் வந்தார். 1952ஆம் ஆண்டு, தேர்தலில் நிற்காமலேயே முதலமைச்சராகவும் ஆகிவிட்டார்.
ஆதலால், காமராஜர் சார்பாளர்களுக்கும், ராஜாஜி ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் இருந்து கொண்டே இருந்தது. காமராஜருக்குத் தொண்டர்களின் ஆதரவும், ராஜாஜிக்கு டில்லியில் இருந்த தலைவர்களின் ஆதரவும் இருந்தது. ஒரு கட்டத்தில் தொண்டர்களின் குமுறல் மேலெழுந்தது. காமராஜரின் நெருங்கிய ஆதரவாளரான, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.டி.கோசல்ராம், ராஜாஜியை எதிர்த்து வெளிப்படையாகவும், கடுமையாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த, திக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அது மேலும் வலுவூட்டியது.
அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மட்டுமின்றி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். தங்களின் வேலைநேரம் கூடுவதாகவும், தங்களுக்கும், தங்கள் மாணவர்களுக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்படுவதாகவும், அவர்கள் கூறினர். ராஜாஜிக்கும், அரசுக்குமான ஆதரவு குறைந்து கொண்டே போயிற்று. ராஜாஜியை ஆதரித்தவர்களுள் ம.பொ.சி.யும், எழுத்தாளர் கல்கியுமே குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்து, ம.பொ.சி. தமிழ்நாடெங்கும் கூட்டங்களை நடத்தினார். ராஜாஜியை ஆதரித்தும், பெரியார், காமராஜரை எதிர்த்தும், அவருடைய பரப்புரைகள் அமைந்தன.
அதனால் கோபம் கொண்ட தொண்டர்கள், 1953 செப்டம்பர் 6ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டத்தில் ம.பொ.சி.க்கு எதிராகக் குரல் எழுப்பினர். அங்கு அவர் தாக்கப்பட்டார்.
இவ்வாறு நாடு முழுவதும், போராட்டங்களும், கலவரங்களுமாக இருந்தன. திராவிடர் கழக, திமு கழக உறுப்பினர்கள், போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றனர். அரசுக்கு நாளுக்குநாள் நெருக்கடி கூடியது. எனினும், ராஜாஜி தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தார். ஒரே ஒருமுறை சட்டமன்றத்தில் ஒன்றே ஒன்றைத் தன் தவறு என்று ஒப்புக் கொண்டார். ‘சட்டமன்றத்தையும், அமைச்சரவையையும் கலந்து பேசிய பின், இக்கல்வித் திட்டத்தை நான் அறிவித்திருக்கலாம் என்பது சரிதான். அங்கே தவறு நடந்துவிட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்” என்றார்.
எனினும், சட்டமன்றத்தில் எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாத நிலையில், இக்கல்வித்திட்டம் குறித்து ஆராய, 1952 ஆகஸ்ட் 20ஆம் நாள், கல்வியாளர் பாருலேகர் (R,V. Parulekar) தலைமையில், நால்வர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. துணைவேந்தர் முஜிப், பொதுக்கல்வித் துறை இயக்குநர் கோவிந்தராஜன், முன்னாள் பொதுக்கல்வித் துறை இயக்குநர் பி.பி.டே (B.B. Dey), ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
புதியக்கல்வித் திட்டத்தின் சாரமாக, அக்குழுவின் முன், பின் வரும் செயல்திட்டங்கள் ஆய்வுக்கு வைக்கப்பட்டன.
1. வாரத்திற்கு ஆறு நாள்கள் வேலைநாள்களாகவும், ஒருநாளைக்கு மூன்று மணிநேரம் கல்விநேரமாகவும் அமையும்.
2. ஒவ்வொரு பள்ளியிலும், காலை மூன்று மணிநேரம் ஒரு பிரிவு மாணவர்களுக்கும், மதியம் மூன்று மணிநேரம் இன்னொரு பிரிவு மாணவர்களுக்கும் பள்ளியில் பாடம் நடத்தப்படும். பள்ளி முடிந்த பின்போ அல்லது தொடங்குவதற்கு முன்போ, மூன்று மணிநேரம் வீடுகளில் பிள்ளைகள், தங்கள் பெற்றோரின் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு 13 திட்டங்கள் அடங்கிய குறிப்பு, பாருலேகர் குழுவின் ஆய்வுக்கு வைக்கப்பட்டது. ஆனால், பாருலேகர் குழுவையே இயக்கங்களும், கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. “குழுவில் உள்ள அனைவரும் அரசு அதிகாரிகளாகவும், முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களாகவும் உள்ளனர். ஆதலால், இந்தக் குழுவே ஒரு கண்துடைப்புதான்” என்று எல்லோரும் கருதினர். ஆயினும், அக்குழு தன் பணியைத் தொடங்கியது.
அதே ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள், பாருலேகர் குழு, தன் அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்தது. எல்லோரும் எதிர்பார்த்தபடியே, ராஜாஜியின் கல்வித்திட்டத்தை, பாருலேகர் குழு ஆதரித்துப் பாராட்டியது. ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, வகுப்பு நேரத்தில் சிறு மாற்றம், ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் ஒரு மாற்றம் என்று பெயருக்குச் சில திருத்தங்களை முன்மொழிந்தது. அந்த அறிக்கையை, போராட்டக்குழுவினரோ, ஆசிரியர்களோ ஏற்றுக்கொள்ளவில்லை. போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
வெளியில் நடந்த போராட்டங்களை விட காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நடைபெற்ற போராட்டங்கள் முதலமைச்சர் ராஜாஜியை மிகவும் கவலை கொள்ளச் செய்தன. அவர் நினைத்தபடி, பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை, ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகும் நடைமுறைப்படுத்த இயலவில்லை. கிருஷ்ணாராவைத் தொடர்ந்து, புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற சி.சுப்பிரமணியம், சட்டமன்றத்தில் பல்வேறு விதமான விளக்கங்களை எடுத்துச் சொல்லியும், பயன் ஏதுமில்லை. கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ப.ஜீவானந்தம், எம்.கல்யாணசுந்தரம், பி.ராமமூர்த்தி, ஆகியோரின் குரல்கள் ஓங்கி ஒலித்தன.
வேறு வழியின்றி ராஜாஜி, முதலமைச்சர் பதவியிலிருந்து விலக முடிவெடுத்தார். 1954ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி அவர் தன் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார்.
அடுத்த முதலமைச்சர் யார் என்னும் போட்டி காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்தது. தந்தை பெரியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க காமராஜர், கட்சித் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, ராஜாஜியின் ஆதரவாளரான சி.சுப்பிரமணியம் வேட்பாளரானார். வாக்குகள் எண்ணப்பட்டபோது, காமராஜருக்கு ஆதரவாக 93 வாக்குகளும், சி.சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக 41 வாக்குகளும் கிடைத்திருந்தன.
1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சி.சுப்பிரமணியத்தையே தன் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இணைத்துக் கொண்டார். ராஜாஜியின் கல்விக் கொள்கைக்காகப் பலமுறை சட்டமன்றத்தில் வாதாடிய சி.சுப்பிரமணியமே, அத்திட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்து, காரைக்குடி அழகப்பர் கல்லூரியின் நிறுவனர் ஆர்.எம்.அழகப்பர்(செட்டியார்) தலைமையில் ஒரு குழு அமைத்து ஆராய இருப்பதாக அறிவித்தார். பிறகு, அந்தக் குழுவின் அறிக்கையின்படி, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டம் தொடங்கப்படாமலேயே முடிவடைந்து போயிற்று.
1954ஆம் ஆண்டுடன், குலக்கல்வித் திட்டம் நாட்டைவிட்டுப் போய்விட்டது என்று நாம் நிறைவு கொள்ள இயலவில்லை. இதோ இப்போது 2020-ல் அதே கல்விக்கொள்கை மறுபடியும் தலை காட்டுகிறது.
(களங்கள் தொடரும்)
அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================
1. கருமலையப்பன், கா., பிரகாசு, ந., மனோகரன், இரா. – ‘குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம், போராட்ட வரலாறு”(2 தொகுதிகள்) – தந்தை பெரியார் திராவிடர் கழகம், கோவை-44
2. தந்தை பெரியார் – ‘ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்” – திராவிடர் கழக வெளியீடு, சென்னை-7
3. சிவஞானம், ம.பொ. – ‘எனது வாழ்க்கைப் போராட்டம்” – பூங்கொடி பதிப்பகம், சென்னை-4
4. ராவ் – ‘காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை” – அந்திமழை, சென்னை-117
5. Veerragavan, D. – “Half a day for caste” – left word, New Delhi-8
Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.