2019 இறுதியில் தொடங்கி, கொரோனா தொற்று பரவிய காலம் வரையில். இந்தியா முழுவதும் போர்க்குணத்தோடு நடந்த போராட்டம் சி ஏ ஏ எதிர்ப்புப் போராட்டம். அசாம், தில்லியில் நடைபெற்ற அளவிற்கு இல்லையென்றாலும், தமிழகத்திலும் அப்போராட்டத்தின் வீச்சு இருந்தது.

சி ஏ ஏ எதிர்ப்புப் போராட்டம் என்று சுருக்கமாக அறியப்பட்டாலும், சி ஏ ஏ., என். பி.ஆர்., என்.ஆர்.சி., ஆகிய மூன்று சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டம் அது! 2019 டிசம்பர் 4 ஆம் தேதி, அம்மூன்று சட்ட முன்வடிவங்களும், நாடாளுமன்றத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவினால் அறிமுகம் செய்யப்பட்டன. இரு அவைகளிலும் அச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, அவை 2019 டிசம்பர் 12 அன்று சட்டங்களாயின. 2020 ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வந்தன.

இவை என்ன சட்டங்கள்? இவற்றிற்கு ஏன் நாடு தழுவிய எதிர்ப்பு எழுந்தது?

இம்மூன்று சட்டங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. முதல் சட்டம் – குடியுரிமை (திருத்த) சட்டம் -Citizenship (Amendment) Act . இரண்டாவது சட்டம் – மக்கள்தொகை தேசியப் பதிவேடு சட்டம் – National People Registration Act. மூன்றாவது, குடிமக்கள் தேசியப் பதிவேடு சட்டம் – National Registration of Citizhenship.. சட்டங்களின் பெயர்களை பார்க்கும்போதே இவை எப்படி ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்துப் பார்ப்பதே கடினமாக உள்ளது என்றும் கூறலாம்.

1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் திருத்தம்தான் முதல் சட்டம். அந்தச் சட்டம், சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் குடியேறியவர்கள் குடியுரிமையை மறுக்கிறது. எனினும், எந்தக் குற்றச்சாற்றும் இல்லாமல் 11 ஆண்டுகள் இத்தியாவில் தங்கியிருப்பின், அவர்களுக்குக் குடியுரிமை வழங்க முன்வருகிறது. அவ்வுரிமையை வழங்குவதற்கு, நாடு, மொழி, மதம் எதுவும் தடையில்லை.

புதிய திருத்தச் சட்டம், 2014 ஆம் ஆண்டிற்கு முன், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மட்டும் சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினர் 5 ஆண்டுகள் இங்கு வாழ்ந்திருப்பார்களேயானால், அவர்களுக்குக் குடியுரிமை வழங்க முன்வருகிறது. அதாவது, இலங்கை, மியான்மர், நேபாளம், சீனம் உள்ளிட்ட எந்த நாட்டிலிருந்து இங்கு வந்திருந்தாலும் அவர்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட மாட்டாது.

இரண்டாவது நிபந்தனை, அந்த மூன்று நாடுகளிலிருந்து வந்திருந்தாலும், அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பின், அவர்கள் குடியுரிமை பெற வாய்ப்பில்லை.

மூன்றாவது, அவர்கள் மதத் துன்புறுத்தலுக்கு (Religious Persecutions) ஆளானவர்களாக இருந்தால் மட்டுமே இந்தச் சட்டம் ஏற்கும். இன, மொழி அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு இதில் இடமில்லை.

எனவே இச்சட்டங்கள் இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. எனினும் சிறுபான்மையினருக்கு எதிரானவை என்பதை மறைப்பதற்காக, சீக்கிய, கிறித்துவ, பௌத்த, சமண சமயங்களை சேர்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் உள்ளிட்ட மூன்று நாடுகளிலும், கிறித்துவர்கள் உள்ளிட்டோர் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே. இஸ்லாமியர்கள்தான் கூடுதல். அதனால்தான் அச்சட்டம் கவனமாக இஸ்லாமியர்களை மட்டும் விட்டுவிட்டுப் பேசுகிறது.

எனினும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பாதிப்பு என்று எண்ணிவிடக் கூடாது. ஈழத்திலிருந்து வந்துள்ள தமிழர்களுக்கோ, மியான்மரிலிருந்து வந்துள்ள ரோஹிங்கா முஸ்லிம்களுக்கோ இச்சட்டங்கள் உதவ வாய்ப்பில்லை. இஸ்லாமியர்கள் கூடுதலாக வாழும் நாட்டில், அங்கிருந்து வரக்கூடிய அவர்களை இச்சட்டங்கள் விலக்குகின்றன .மியான்மரிலிருந்து அவர்கள் மட்டுமே வருவார்கள் என்பதால், அந்நாட்டையே பட்டியலிலிருந்து விலக்குகின்றது.

உலக வரலாற்றில், இத்தகைய குடியுரிமைச் சட்டங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் அறிவோம். தென் ஆப்பிரிக்காவில் இப்படிப்பட்ட குடியுரிமைச் சட்டம் இந்தியர்களுக்கு ஏதிராகக் கொண்டுவரப்பட்டபோதுதான், 1907 ஆம் ஆண்டு அதனை எதிர்த்துக் காந்தியார் அங்கு போராடினார். இப்போதிருக்கும் மத்திய அரசு காந்தியாரையே கொண்டாடுவதில்லை, பிறகல்லவா அவர் முன்னெடுத்த போராட்டத்தைக் கொண்டாடுவது!

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன், 1935 இல் இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்துதான், யூதர்களை வேட்டையாடினர். உலக அழிவுக்கே வழிவகுத்த சட்டமாக அது மாறியது. ஹிட்லரைப் போற்றும் அவருடைய வாரிசுகள், நம் நாட்டிலும் அப்படியொரு சட்டத்தைக் கொண்டுவருவது இயற்கைதானே!

1948 இல் இலங்கையிலும், 1982 இல் மியான்மரிலும் கொண்டுவரப்பட்ட இது போன்ற சட்டங்களே, ஈழத் தமிழர்களையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் நாடற்றவர்களாக ஆக்கின. இப்போது இந்தியா, இஸ்லாமியர்கள் மீது தொடுக்கும் போராகவே புதிய சட்டங்கள் அமைந்துள்ளன.

இவையெல்லாம், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள்தானே என்று சிலர் கேட்கின்றனர். ஆம், 1955 ஆம் ஆண்டு, அசாமியர்களுக்காக அப்படி ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அப்போது அதில் மத அடிப்படையிலான எந்த வேறுபாடும் இல்லை. அது மட்டுமின்றி, அச்சட்டத்தின் 6 ஏ (4) பிரிவின்படி, குடியேறிய அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டன.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்படி, சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை விலக்கியபிறகு, மக்கள்தொகை தேசியப் பதிவேடு (என் பி ஆர்) கணக்கெடுப்பு தொடங்கும். அப்போது சந்தேகத்திற்குரியவர்கள் என்று கருதப்படுவோர், குடிமக்கள் தேசியப் பதிவேடு சட்டத்தின்படி, தங்களை இந்தியர்கள்தான் என்று மெய்ப்பித்துக் கொள்ள வேண்டும். மெய்ப்பிக்க இயலாதவர்கள், நாடற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டு, முகாம்களுக்கு அனுப்பப்படுவர்.

தங்களை இந்தியர் என்று மெய்பிப்பதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம். அங்குதான், மொத்தத் சிக்கலும் தலையெடுக்கிறது. தன்னை ஒருவர் இந்தியர் என்று நிறுவுவதற்கு, அவரிடம் உள்ள ரேஷன் அட்டை, கடவுச் சீட்டு (பாஸ் போர்ட்), ஆதார் அட்டை, பான் அட்டை (PAN Card) என எதனையும் ஏற்க மாட்டார்களாம்.

அவரின் பிறப்புச் சான்றிதழ், அவர் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் எல்லாம் வேண்டுமாம். 50 வயதைக் கடந்தவர்களிடமே பிறப்புச் சான்றிதழ் இருப்பது கடினம். பிறகு, அவர்களின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழை எங்கு போய்க் கண்டுபிடிப்பது? இப்போதிருக்கும் தாசில்தார் எப்படி, அவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நம் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழுக்கு உறுதி அளிக்க முடியும்?

எனவே இச்சட்டங்கள், மக்களுக்கும், சட்டத்திற்கும் எதிரான, நயவஞ்சகம் நிறைந்தவையாக உள்ளன. அதனால்தான், இவற்றிற்கான எதிர்ப்பு, இவை நடைமுறைக்கு வருவதற்கு முன்பே – ஏன் சட்டமாவதற்கு முன்பே தொடங்கிவிட்டது.

நாடாளுமன்றத்தில், 311 வாக்குகளை ஆதரவாகப் பெற்று எளிதில் நிறைவேறிவிட்ட இச்சட்டங்கள், மாநிலங்களவையில் தட்டுத் தடுமாறியே நிறைவேறின. அங்கு சட்டங்களுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. அதிமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் எதிர்த்து வாக்களித்திருந்தால், சட்டம் நிறைவேறியே இருக்காது.

எதிர்ப்புப் போராட்டம் முதலில் அசாமில்தான் தொடங்கியது. தொடங்கிய டிசம்பர் 4 ஆம் தேதியே கலவரம் வெடித்தது. பத்து நாள்களுக்குள், முதல் பலியான ஈஸ்வர் நாயக் உள்பட 6 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனார்கள். 98 பேர் படுகாயமுற்றார்கள்.

டிசம்பர் 14 அன்று போராட்டம் தில்லியைத் தொட்டது. ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டம் வன்முறையை நோக்கித் திரும்பியது. சில அரசு பேரூந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டது. தில்லியிலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்று, பேராசிரியர் அப்துல் ஆலிம் உள்ளிட்ட சிலர் உயிரிழந்தனர்.

அன்று மதியம் 2 மணியளவில், 15 பெண்கள், தில்லி, ஷாஹீன் பாக் என்னுமிடத்தில் கூடி அமர்ந்து, தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்தனர். இரவுக்குள் அந்த எண்ணிக்கை நூற்றுக்கும் மேலாக ஆகிவிட்டது. நாளுக்கு நாள் அந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஆயிரம், லட்சம் என்றாகி, டிசம்பர் 31 ஆம் தேதி, பனிகொட்டும் நள்ளிரவில், லட்சக்கணக்கானோர் அங்கு கூடியிருந்தனர். ஷாஹீன் பாக் என்பது போராட்டத்தின் ஓர் அடையாளமாக ஆகிவிட்டது.

மறுநாள், மிகப் பெரிய கொடூரம் ஒன்று நடந்தேறியது.தில்லி ஜமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்குள், சில கூலிகள் உள்நுழைந்து, அதிகாலைப் பொழுதில் மாணவர்களை இரும்புத் தடிகளால் தாக்கினர். காவல்துறை வேடிக்கை பார்த்தது. ஒரு மாணவி கடும் காயத்திற்கு உள்ளானார். அன்று நடந்த தாக்குதல் காணொளியாக வெளிவந்து நாடு முழுவதும் பரவியது. போராட்டமும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் உரியதாக ஆனது.

தமிழகத்தில் முதல் எதிர்ப்புப் போராட்டம், திருப்பத்தூர் மாவட்டத்தில், டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கியது. காட்பாடி, திருவண்ணாமலை கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். அதன்பிறகு, தமிழ்நாட்டின் பல பகுதிகள் ஷாஹீன் பாக் ஆயின. பெண்களும், சிறுவர்களுமாகச் சாலைகளில் அமர்ந்து தொடர்ந்து போராடினர்.

நடிகர் சித்தார்த், இசைக் கலைஞர் டி. எம். கிருஷ்ணா

டிசம்பர் 20 ஆம் நாள், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, நடிகர் சித்தார்த், இசைக் கலைஞர் டி. எம்.கிருஷ்ணா உட்பட 600 பேர் கைதானார்கள். இஸ்லாமியர்களைத் தாண்டி, இந்தியா முழுவதும் வெகு மக்களின் போராட்டமாக அது வலுப்பெற்றது.

23.12.2020 அன்று, சென்னையில், திமுக வும் அதன் தோழமைக் கட்சிகளும், போராட்டத்திற்கு ஆதரவாக, மிகப் பெரிய பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

பஞ்சாப் . மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கேரளா, பாண்டிசேரி அரசுகள், இச்சட்டங்களைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது என்று சட்டமன்றங்களில் தீர்மானங்களை நிறைவேற்றினர்.

எனினும் அரசு மக்களின் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை. மாறாக, வேறுவிதமான வன்முறை வழிகளில் இறங்கிற்று. ஜனவரி 5 ஆம் தேதி, மாணவர்கள் என்ற முறையில், பாஜக வின் மாணவர் பிரிவைச் சேர்ந்த ஏ பி வி பி மாணவர்கள் தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து இரும்புத் தடிகளால் போராடிய மாணவர்களைத் தாக்கினர். அந்த வளாகமே ரத்தக்களரி ஆயிற்று.

குடியரசு நாளான ஜனவரி 26 அன்று நாட்டின் பல பகுதிகளில், சி ஏ ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடைபெற்றன. கேரளாவில் காசர்கோடு தொடங்கி, கலியக்காவிளை வரையில், லட்சக்கணக்கானோர் மனிதத் சங்கிலிப் போராட்டம் நடத்தினர். அதே நாள், தில்லியில் இன்னொரு சம்பவமும் நடந்தது. ஜமியா மிலியா பல்கலை மாணவர்கள் நடத்திய பேரணியில், ஓர் இந்து தீவிரவாதி, மாணவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். அவரைக் காவல்துறை கைது செய்து, பிறகு விடுதலை செய்துவிட்டது.

மாதக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், மார்ச் மாதத்திற்குப் பிறகு, பெருந்தொற்று காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. அது மீண்டும் தொடருமா, முடியுமா என்பது அரசின் எதிர்கால நடவடிக்கைகளைப் பொறுத்தது!

இப்போது விவசாயிகள் போராட்டம் தில்லியில் மையம் கொண்டுள்ளது.

போராட்டங்கள் ஓய்வதில்லை. மக்கள் கவிஞர் இன்குலாபின் வரிகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்…….

“போராட்டம் நம் பிறப்பின் நியதி

போராட்டம் நம் வாழ்வின் நியதி!”

பயன்பட்ட நூல்கள்

====================

1. மிஹிர் தேசாய் / தமிழில் – பேரா. தா. சந்திர குரு = “தேசிய மக்கள்தொகை பதிவேடு ஏன் நிராகரிக்கப்பட வேண்டும்” – பாரதி புத்தகாலயம், சென்னை-18

2. லெனின், த. – “அரசியலமைப்புச் சட்டமும் குடியுரிமை திருத்தச் சட்டமும்” – NCBH, அம்பத்தூர், சென்னை-50

3. 2019 நவம்பர் முதல் 2020 மார்ச் வரையிலான நாளேடுகள்

(ஒரு நூற்றாண்டுப் போராட்டக் களங்கள் நிறைவடைந்தன)

-சுப. வீரபாண்டியன்

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.