2001-03 காலகட்டத்தில் தமிழக அரசு,  தொழிலாளர்கள், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினரையும் கடுமையாக ஒடுக்கியது. பொடா சட்டத்தின் கீழ் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதும் தொடர்ந்தது.

பாதிக்கப்பட்டவர்களிலேயே மிக எளியவர்களும்,  ஏழைகளும் யார் என்று பார்த்தால், சாலைப்  பணியாளர்களும், மக்கள் நலப் பணியாளர்களும்தான்! அவர்களின் துயரம், எவ்வளவு சுருக்கமாகச் சொல்லப்பட்டாலும், விரிந்துகொண்டே போகும்.

989 கலைஞர் ஆட்சியில்தான் அப்படி இரண்டு வகைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1991 இல் ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் 1996 கலைஞர் ஆட்சியில் நியமிக்கப்பட்டனர். 2001 இல் அப்படி ஒரு வகைப் பணியே தேவையில்லை என்று ஜெயலலிதா அறிவித்துவிட்டார்.

2001 ஆம் ஆண்டு, வேலை போனபின்பு, அப்பணியாளர்களில் சிலர், வறுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டனர். அதன் விளைவாக, எங்கும் போராட்டங்கள் வெடித்தன. அப்போராட்டங்கள் குறித்துப் பல செய்திகள் பதிவு செய்யப்பட வேண்டியனவாக உள்ளன. ஜெயலலிதா 2001 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சில நாள்களிலேயே 13,500 மக்கள் நலப்பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். அரசின் நிதிநிலையே இதற்குக்  காரணம் என்று கூறினார். அடுத்த ஆண்டு, அதாவது, 07.09.2002 அன்று, 9725 சாலைப்  பணியாளார்களைப்  பணியிலிருந்து விலக்கி விட்டார்.

அதற்கும் நிதிநிலைதான் காரணம் என்றார். ஓராண்டில் நிதிநிலையைச் சரி செய்வதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லையா  என்று ஊடகங்கள் கேட்டு எழுதியபோது, சரி செய்யவே முடியாத அளவிற்குத் தமிழகத்தின் நிதிநிலையைக் கருணாநிதி ஆக்கி விட்டார் என்று கூறினார். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும், நிதிநிலை எவ்வாறு இருந்தது  என்று கலைஞர் புள்ளி விவரங்களுடன் முரசொலியில் எழுதினார். அதற்கு அரசு தரப்பில் எந்த விடையும் வரவில்லை.

2001 ஆம் ஆண்டு மக்கள் நலப்பணியாளர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடங்கியபோது, சிக்கல் பெரிதானது. 11.06.2001 அன்று, முதன்முதலில், நாகை மாவட்டம், கீழையூர் அருகில் காமேஸ்வரம் என்னும் சிற்றூரைச் சேர்ந்த வீரப்பன் என்னும் மக்கள் நலப்பணியாளர் தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

செப்டெம்பர் 10 ஆம் தேதி, 5000 மக்கள் நலப்பணியாளர்கள் சென்னை, சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இறந்துபோன ஒவ்வொரு பணியாளர் குடும்பத்திற்கும் திமுக சார்பில் 25,000 ரூ நிதி உதவி வழங்கப்பட்டது.  அரசு அசைந்து கொடுக்கவில்லை.  அடுத்த கட்டமாக, அதே மாதம் 29 ஆம் தேதி, அவர்கள் குடும்பத்தாருடன் உண்ணாவிரதப் போரில் இறங்கினர். அவர்களில் 5000 பேரை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

அடுத்த ஆண்டு சாலைப்பணியாளர்கள் போராடியபோதும், அதே மாதிரித்தான் அரசு நடந்துகொண்டது. ஆள், அம்பு, எடுபிடி, சேனை எல்லாவற்றையும் கைகளில் வைத்துள்ள ஓர் அரசை எதிர்த்து அந்த ஏழைத் தொழிலாளர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. திமுக,  பொதுவுடைமைக் கட்சிகள், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் என்று பல்வேறு கட்சிகள்  போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றனர். பாமக புதுமையாக, தூக்கில் தொங்கும் போராட்டம் என்று கூட ஒரு போராட்டத்தை அறிவித்தது. எது குறித்தும் அரசு கவலை கொள்ளவில்லை.  ஏறத்தாழ 15000 ஏழைத் தொழிலாளர்களின்  குடும்பங்கள் நசிந்து போயின.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இன்னொரு பெரிய தொழிலாளர் போராட்டம், போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்.  சென்னை மாநகரம்  உள்ளிட்ட பல  ஊர்களில், போக்குவரத்து நிலைகுத்திப்  போய்  நிற்க, மக்கள் சாரை  சாரையாய் நடந்துபோன காட்சியை நாடு பார்த்தது. 17 நாள்கள் நடைபெற்ற அப்போராட்டத்தில், தொழிலாளர்கள் பலர் சிறைப்பட்டனர். அரிபாபு என்னும் பேருந்து ஓட்டுநர் ஒருவர் சிறையில் உயிரிழந்தார். எதற்காக அந்தப் போராட்டம் நடந்தது?

தி மு கழக ஆட்சியின் தொடக்கத்தில், பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது,  அத்துறை முழுமையாக நலிந்து போகும் என்றே பலரும் கூறினர். ஆனால் அத்துறைதான்  அரசுக்குப் பெரும் லாபத்தைத் திரட்டித் தரும் துறையாகப் பிற்காலத்தில் வளர்ந்தது. வெறும் 100 கோடிக்கும் குறைவான முதலீட்டில் அரசுத்துறையாகத் தொடங்கப்பட்ட போக்குவரத்துத் துறை 1997இல் 1125 கோடி ருபாய் கொண்ட துறையாக உருவெடுத்தது. அதே போல 2100 பேருந்துகள் 17500 பேருந்துகளாகவும், 40 பணிமனைகள் 320 பணிமனைகளாகவும் பெருகி இருந்தன. அதனால், 1997 இல் கலைஞர் அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊக்க ஊதியத்தை (போனஸ்) 20% ஆக உயர்த்தியது. அனைத்துத் தொழிலாளர்களும் அதனை வரவேற்றனர். ஆனால் அண்ணா  போக்குவரத்துத் தொழிலாளர்கள் (அதிமுக கட்சியினர்) மட்டும்  25% போனஸ் வேண்டும் என்று கேட்டனர்.அது ஏற்கப்படவில்லை. இறுதியில்,  அந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் 20% ஊக்கத்தொகையை அவர்கள் பெற்று வந்தனர்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், அதனை 8.33% ஆகக் குறைக்க ஆணையிட்டார். தொழிலாளர்கள் அனைவரும் எதிர்த்தனர். அன்று 25% ஊக்கத் தொகை கேட்ட அதிமுக ஊழியர்கள் மட்டும் 8.33% தொகையை ஏற்றுப் பணிக்குத் திரும்பினர்.  பிற தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் களத்தில்  இறங்கியதால், போராட்டம் வெடித்தது.

10.11.2001 அன்று தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் கடும் தடியடி நடத்தினர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதற்கு அடுத்த நாள்தான் அரிபாபு சிறையில் மரணமடைந்தார். அடித்தே கொன்றுவிட்டார்கள் என்றனர் தொழிலாளிகள். மாரடைப்பால் மரணம் என்றது அரசு. எந்தத்  தீபாவளிக்கு ஊக்க ஊதியம் கேட்டுப்  போராடினார்களோ அந்தத் தீபாவளியன்று அவர்கள் சிறையில் இருந்தனர்.

அதற்குப் பிறகும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.  அதன் விளைவாகச் சில மோசமான  காட்சிகளும் நடைமுறைக்கு வந்தன. தொழிலாளர்கள் பலர் வேலையை விட்டு நிரந்தரமாக நீக்கப்பட்டனர். பேருந்து ஒட்டத் தெரியும் என்று சொல்லிவிட்டால் போதும், அவர்களுக்கெல்லாம் உடனடியாக ஓட்டுநர் வேலை கொடுக்கப்பட்டது. பேருந்தில் ஏறவோ, பேருந்துகள் வரும்போது சாலைகளில் நடக்கவோ மக்கள் அஞ்சிய காலமாக அது இருந்தது.

இத்தனைக்குப் பிறகும், அரசின் பிடிவாதம் இறுதியில் வென்றது.  அரசு சொன்ன அதே தொகையை ஏற்றுக்கொண்டு, 17 நாள்களுக்கான ஊதியத்தையும் இழந்து தொழிலாளர்கள் இறுதியில் வேலைக்குத் திரும்பினர். இவற்றிற்குப் பிறகு 2002 இல் வந்தது பொடா சட்டம்.

1990 களில்  தாண்டவமாடிய தடா சட்டம், 1995  மே 24 ஆம் தேதியோடு இந்தியாவை விட்டு போய்விட்டது. அன்று காலாவதியான அந்தச் சட்டத்தை மீண்டும் புதுப்பிக்க அன்றைய காங்கிரஸ் அரசு முயற்சித்தபோதும்,  கடும் எதிர்ப்புகளால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

எனினும், எந்த பாஜக தடாவை எதிர்த்ததோ  அதே கட்சி ஆளும்கட்சியான பிறகு அதே மாதிரி ஒரு சட்டத்தைப்  ‘பொடா ‘ என்னும் பெயரில் 2002 ஆம் ஆண்டு மார்ச் 18 இல் கொண்டுவந்தது. அப்போது காங்கிரஸ் அதனை எதிர்த்தது. வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 261 வாக்குகள் புதிய சட்ட முன்வடிவிற்க்கு ஆதரவாகவும், 137 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.

மக்களவையில் வெற்றி பெற்ற பின்னாலும் அச்சட்டம் மாநிலங்களவையில் தோற்றுப்  போனது. பிறகு மார்ச் 26 ஆம் தேதி கூட்டுக்  கூட்டம் நடத்தியே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. கூட்டுக்   கூட்டத்தில் 425 வாக்குகள் ஆதரவாகவும், 296 வாக்குகள் எதிராகவும் விழுந்தன.

பொடா சட்டத்தை பாஜக மட்டுமின்றித் தமிழகத்தின் திமுக, மதிமுக, பாமக என எல்லாக் கூட்டணிக் கட்சிகளும் ஆதரித்தன (‘கூட்டணி தர்மம்’)!  காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சிகள்.  முஸ்லீம் லீக், சமாஜ்வாதி கட்சி  ஆகியன எதிர்த்தன. திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியன நடுநிலை வகித்தன.

பொடா  சட்டத்தை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில், ஜெயபால் ரெட்டியாற்றிய உரை அன்று  குறிப்பிடத்தக்கதாக இருந்தது. சோம்நாத் சாட்டர்ஜி, அஜய் சக்ரபோர்த்தி, பனத்வாலா  ஆகியோரும் கடுமையாக அதனை எதிர்த்துப் பேசினர். இறுதியில் அச்சட்டம் நிறைவேறி விட்டது.

அதனை உடனடியாகவும் கடுமையாகவும் பயன்படுத்தியவர்கள் தமிழ்நாடு, குஜராத்  முதலமைச்சர்களே . அவர்கள் ஜெயலலிதாவும், மோடியும் என்பதை அனைவரும் அறிவோம்.  குஜராத்தில் முதல்வர் மோடி அச்சட்டத்தைச் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா அதனைத் தமிழ் உணர்வாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தினர்.  குறிப்பாக, ஈழ விடுதலை ஆதரவாளர்கள், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்கு எதிராகவே இங்கு பொடா  சட்டம் பயன்பட்டது என்று சொல்லலாம்.

வெளிநாட்டிலிருந்து வந்த வைகோ, 2002 ஜூலை 9 அன்று விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருக்கு முன்பாகவே புதுக்கோட்டை பாவாணனும்,  வைகோவுடன் சேர்ந்து அவருடைய கட்சியினர், கணேசமூர்த்தி, செவந்தியப்பன், அழகுசுந்தரம்  உள்ளிட்ட  எட்டுப் பேரும்  கைதானார்கள். அடுத்த மாதம் முதல் தேதி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், 16 ஆம் தேதி அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப. வீரபாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் பரந்தாமன், மருத்துவர்  தாயப்பன், சாகுல் அமீது என மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலும் பொடாவில் கைதானவர்களில் ஒருவர்!

2002 ஆகஸ்ட் 13 அன்று தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டு, அலுவலகத்திற்குச் சீல்  வைக்கப்பட்டது.  ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் வரையில் சென்றே எல்லோரும் பிணை பெற நேர்ந்தது. அதுவும் திமுக மத்திய அரசிடம் இருந்த  தன் செல்வாக்கைப் பயன்படுத்தவில்லையென்றால், அனைவரும் பத்தாண்டுகள் சிறையில் இருக்க நேர்ந்திருக்கும்.

2001-03 இல் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் நியாயமானவை.எனினும், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன. எனினும், பொடா  வழக்குகள் உள்படச் சில வழக்குகள்,  2006 இல் திமுக ஆட்சிக்கு  வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டன.

(களங்கள் தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================
  1. ராஜேந்திரன்,விடுதலை, க.  – “பொடா”- மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, அயனாவரம், சென்னை
  2. பிரபாகரன்,ம. – “இரண்டாண்டுகளில் இருண்ட  தமிழகம்”- தமிழ்க்குரல், மங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்
  3. வீரபாண்டியன்,சுப. – “அது ஒரு பொடா காலம்”-வானவில் பதிப்பகம், தியாகராயர் நகர், சென்னை-17

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.