இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்ட காலங்கள் மூன்று! ஒன்று, அவசர நிலைக் காலம், இன்னொன்று, 1991 இல் தடா வந்த காலம், மூன்றாவது, 2001-03 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட, பொடா போன்ற சட்டங்கள் நடைமுறைக்கு வந்த காலம். அவசர நிலைக் காலம், இந்தியா முழுமைக்கும் பொதுவானது. மற்ற இரண்டும், தமிழ்நாட்டிற்கே உரியது.

2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வரானவுடன், பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எதிர்க்கட்சியின் மீது அடக்குமுறை ஏவிவிடப் பட்டது. எல்லாவற்றிற்கும் உச்சமாகப் பொடா சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இவற்றுள் பத்திரிகையாளர் மீதான ஒடுக்குமுறையும், எதிர்க்கட்சியான திமுக வின் மீதான ஒடுக்குமுறையும், அவர் பதவியேற்ற 2001 ஆம் ஆண்டே நடைபெற்றன.

2001 மே 14 ஆம் தேதி, ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அடுத்த மாதமே, ஊடகவியலாளர்களின் மீதான அடக்குமுறை தொடங்கியது. அரசுக் கிடங்குகளில், அரிசி இருப்பு பற்றிய ஒரு விவாதம் அதற்கு வழிவகுத்தது.

பதவியேற்ற நாளிலிருந்தே, “கருணாநிதி கஜானாவைக் காலி செய்துவிட்டுப் போயிருக்கிறார்” என்ற குற்றச்சாற்றை அவர் முன்வைத்தார். சில நாள்களுக்குப் பிறகு அதற்கான மறுப்பைக் கலைஞர் சான்றுகளுடன் எடுத்துரைத்தார். 1000 கோடி ரூபாய் மதிப்பிற்கு அரிசி கிடங்குகளில் இருப்பதை அவர் வெளியிட்டார். அரிசி இருப்பே இல்லை என்று சொன்ன முதல்வர், சட்டென்று தன் குரலை மாற்றினார். “அரிசி இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அத்தனையும் புளுத்த அரிசி” என்றார். ஒரு கைப்பிடி அரிசியையும் ஊடகவியலாளர்களிடம் காட்டினார். அவர் கையிலிருந்த அரிசியில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணைத்து அரிசிக் கிடங்குகளிலும் புழுக்கள் நெளிவதாகக் கூறினார். தமிழகமெங்கும் உள்ள 320 கிடங்குகளிலும் இதுதான் நிலை என்றார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியைக் குறிவைத்துச் சொல்லப்பட்ட முதல்வரின் கூற்று அது! உடனே, கலைஞரின் வழிகாட்டலின்படி, பொன்முடி, பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு, அதே நாளில் (26.06.2001) விழுப்புரம் மாவட்ட அரிசிக் கிடங்குகளுக்குச் சென்றார். அங்கே இருந்த அரிசி மூட்டைகளைக் குத்தி அரிசியை எடுத்து நிருபர்களிடம் காட்டினார். எல்லா மூட்டைகளிலும் அரிசி நல்ல நிலையிலேயே இருந்தது.

இச்செய்தியை உடனடியாக சன் தொலைகாட்சி ஒளிபரப்பியது. அதனைக் கண்டு கோபம் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அந்தச் செய்தியைத் தொலைக்காட்சிக்கு அனுப்பிவைத்த அதன் நிருபர் சுரேஷை உடனடியாகக் கைது செய்ய ஆணையிட்டார். இந்நிகழ்வு, பத்திரிகையாளர்களிடம் ஒரு கோபத்தை உருவாக்கியது. உடனே பல்வேறு பத்திரிகைகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும், முதல்வரிடம் மனு அளிப்பதற்காகக் கோட்டைக்குச் சென்றனர். அவர்கள் முதல்வர் அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. வெளியில் காத்திருந்தனர். மதிய நேரம் வெளியில் வந்த முதலமைச்சரிடம் மனுவைக் கொடுத்தனர். அதனை அவர் வாங்கிக் கொள்ளாததுடன், ஓர் ஏளனப் புன்னகையோடு அவர்களைக் கடந்து சென்றார்.

அதனால் மேலும் கோபமடைந்த பத்திரிகையாளர்கள், விரைந்து வந்து முதல்வரின் கார் முன்னால் அமர்ந்து மறியல் செய்தனர். “அவர்களை அப்புறப்படுத்திடுங்கள்” என்றார் ஜெயலலிதா. உடனே, அவர் முன்னிலையிலேயே காவல்துறை ஊடகவியலாளர்களைக் கண்மூடித்தனமாக அடித்து விரட்டியது.

நாடு முழுவதும் ஒரு பரபரப்பை இந்நிகழ்வு ஏற்படுத்தியது. ஜூன் 29 ஆம் தேதி, தமிழக அரசின் அடக்குமுறையைக் கண்டித்துப் பத்திரிகையாளர்கள் ஒரு பேரணியை நடத்தினர். அதற்குத் தமிழக அரசு தனக்கேயுரிய வழியில் ஒரு விடையைச் சொன்னது, ஆம், அந்தப் பேரணியில் கலந்துகொண்ட 150 பேரைக் கைது செய்தது.

அதே 29.06.2001 அன்று நள்ளிரவில்தான், தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கொடுமையும் நடைபெற்றது.

ஜூன் 30 அதிகாலையில், தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. ‘ஐயோ, அம்மா’ என்று ஒரு குரல் – எல்லாத் தொலைக்காட்சிகளிலும்! அது கலைஞரின் குரல். காவல்துறை அதிகாரி முகமது அலி தலைமையில்,காவலர்கள் சிலர், தலைவர் கலைஞரைப் பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு போகும் காட்சியும், கலைஞர் சத்தமிட்டு ஐயோ அம்மா என்று அலறும் காட்சியுமாக அன்றையப் பொழுது விடிந்தது. சென்னையின் முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலினையும் காவல்துறை தேடியதாக ஒரு செய்தி வெளியானது.

இருவர் மீதும் என்ன வழக்கு? அப்படி இரவோடு இரவாக, நான்குமுறை தமிழகத்தின் முதல்மைச்சராக இருந்த ஒரு தலைவரைக் கைது செய்ய வெண்டிய தேவை என்ன எழுந்தது? மறுநாள் காலை வரையில் காத்திருந்தால், நாடறிந்த அத்தத் தலைவர், நாட்டை விட்டே ஓடி விடுவாரா? இந்த வினாக்களுக்கெல்லாம் எந்த விடையும் இல்லை.

அன்று மதியம்தான், சென்னை மாநகராட்சி ஆணையரான ஆச்சார்யலு (அவர் அதற்கு ஒருவாரத்திற்கு முன்புதான் அந்தப் பதவிக்கு வந்தவர்) ஒரு புகாரைக் கொடுக்கிறார். போக்குவரத்து வளர்ச்சிக் குழுமத்தின் தலைவராகவும் இருந்த மேயர் ஸ்டாலின் சென்னையில் பல மேம்பாலங்கள் கட்டுவதற்குத் திட்டமிட்டார். (அந்த மேம்பாலங்களால்தான் இன்று சென்னையில் ஓரளவேனும் போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ளது என்பதை அனைவரும் அறிவோம்). அந்தத் திட்டத்தில் 12 கோடி ரூபாய் ஊழல் நடந்து விட்டதாம். அதற்கு அன்று முதலமைச்சராக இருந்த கலைஞரும் உடந்தையாம். இதுதான் வழக்கு!

மதியம் தயாரிக்கப்பட்ட அந்தப் புகார், முறைப்படி லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைக்குத்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆச்சார்யலு அதனை நேரடியாக சிபி சிஐடி பிரிவிற்கு அனுப்பி விட்டாராம். உடனே அவர்கள் நடவடிக்கை எடுத்தனராம்.இப்படி ஒரு கேலிக்கூத்து அதுவரையில் தமிழ்நாட்டில் நடந்ததே இல்லை.

நள்ளிரவு 1 மணிக்கு ஒரு காவல் படையே. சென்னை, ஆலிவர் தெருவில் அப்போது இருந்த கலைஞரின் இல்லத்திற்கு வருகின்றது. சி பி சிஐடி பிரிவின் டிஐஜி முகமது அலி தலைமையில் வந்த அந்தக் குழு எப்படி அந்தக் கைது நடவடிக்கையை நடத்தியது என்பதை நேரில் பார்த்த, சன் தொலைகாட்சி நிருபர் கே.கே. சுரேஷ்குமார் ஒரு புத்தகமாகவே எழுதியுள்ளார். ஒவ்வொரு நிமிடமும் என்ன நடந்தது என்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டும் நூல் என்று அதனைச் சொல்லலாம். படங்களுடன் கூடிய அந்த நூலை இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாகப் படித்து வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

அப்போது கலைஞர் வீட்டின் முன் பகுதியில் படுத்து உறங்கி கொண்டிருந்த பாதுகாவலர், கலைஞரின் கார் ஓட்டுநர் இருவரையும் எழுப்பிக் கதவைத் திறக்கச் சொல்லி முகமது அலி தலைமையிலான காவல்துறையினர் உள்ளே வருகின்றனர், கலைஞர் உறங்கும் அறையைத் திறக்கும்படி கூறுகின்றனர்.

கலைஞர் வீட்டில் காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்ட பொருள்கள்

சாவி எங்களிடம் இல்லை என்று அவர்கள் கூறியவுடன், அங்கேயே அவர்கள் தாக்கப்படுகின்றனர். பிறகு அங்கிருந்த பொருள்களையெல்லாம் உடைத்துச் சேதப்படுத்துகின்றனர். அனைத்துத் தொலைபேசி இணைப்புகளையும் அறுத்து எறிகின்றனர். அதற்கடுத்து, கலைஞர் உறங்கி கொண்டிருந்த அறையினை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கின்றனர்.

 

 

இந்த அமளி நடந்து கொண்டிருக்கும் போதே, அப்போது வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அங்கே வருகின்றார். “இந்த நள்ளிரவில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? நாளை காலையில் வந்து கைது செய்து கொள்ளுங்கள்” என்கிறார் மாறன். “இல்லை இப்போதே அழைத்துச் செல்லத்தான் வந்திருக்கிறோம். வரவில்லையென்றால், தூக்கிக்கொண்டு போவோம்” என்று ஆணவமாகப் பேசுகின்றனர். அப்போது முகமது அலிக்கு ஒரு தொலைபேசி வருகின்றது. பணிவாகப் பேசுகின்றார். ;சரி, சரி; என்கின்றார்.

அடுத்த நிமிடம், அங்கிருந்த துணை ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினர் சிலர் கலைஞரை அப்படியே தள்ளிக்கொண்டு போய் மாடிப்படிகளில் இறக்குகின்றனர். அப்போது கலைஞரின் வயது 77. அவர் வகித்த பதவி, அவருடைய வயது, அவருக்கிருக்கும் செல்வாக்கு எதனையும் கணக்கில் கொள்ளாமல், ‘தர தர’ என்று இழுத்துச் செல்கின்றனர்.

கலைஞர் கைது செய்யப்பட்ட அதே இரவில், வேளச்சேரியிலும், கோபாலபுரத்திலும் ஸ்டாலின் தேடுதல் வேட்டையும் நடந்துள்ளது. அவருடைய வேளச்சேரி வீட்டில், அது சென்னை மேயரின் வீடு என்றும் பாராமல், காவல்துறையினர் ஏறிக்குதித்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த வீட்டுப் பெண்களிடமும் முரட்டுத்தனமாக நடந்துள்ளனர். அப்போது அவர் வெளியூர்ப் பயணத்தில் இருந்ததால், அவரைக் கைது செய்ய முடியவில்லை. செய்தியறிந்து, பாதியிலேயே சென்னை திரும்பிய ஸ்டாலின், மறுநாள் காலை நீதிபதி முன் சரண் அடைந்தார். அவரை சென்னை மத்திய சிறையில் அடைக்கச் சொல்லி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாத காவல்துறையினர், அவரை மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று, அங்கு சிறையில் அடைத்தனர்.

முன்னாள் முதல்வர் கலைஞர், சென்னை மேயர் ஸ்டாலின் மட்டுமின்றி ஆலிவர் தெருவில் உள்ள கலைஞர் வீட்டுக்கு வந்த அன்றைய மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். முரசொலி மாரனைக் காவல்துறையினர், ஒருமையில் பேசிப் பந்தாடிய காட்சிகள் அடுத்தநாள் தொலைக்காட்சிகளில் வெளியாயின.

நெருக்கடி நிலைக் காலத்தை விடவும் கொடுமையான இந்நிகழ்வுகள் நடைபெற்ற ஜூன் 30 ஆம் நாளை, நாம் வேறு கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது. 1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது, மத்திய அரசே அனைத்துச் சர்வாதிகாரச் செயல்களையும் செய்தது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்பட்டது. ஆனால் 2001 இல், மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. ஆனால் தமிழக அரசோ அதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒரு கொடூர ஆட்டத்தை ஆடித் தீர்த்தது. அந்த நேரத்தில் மத்திய அரசு என்ன செய்தது?

அடுத்த நாளே (ஜூன் 30) மத்திய அரசு தன் வருத்தத்தைத் தெரிவித்தது. ஜூலை 1 ஆம் தேதி காலையில், மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸும் வேறு இருவரும் சென்னை வந்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலைஞரை நேரில் சந்தித்தனர். அவருக்குச் சிறையில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்றும், மத்திய அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். பிரதமர் வாஜ்பாய் தன் கண்டணத்தைத் தெரிவித்தார்.

நீதிபதி அசோக் குமார்

03.07.2001 அன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது ,நீதிபதி அசோக் குமார், காவல்துறையினரை மிகவும் வெளிப்படையாகக் கண்டித்தார். “நீங்கள் எல்லாம் பொறுப்புள்ள அதிகாரிகளா? உங்கள் இதயம் என்ன களிமண்ணால் ஆனதா?” என்று கேட்டார். இந்த நீதிமன்ற நிகழ்வு, நெடு நாள்களுக்குப் பேசப்பட்டது. முதல் தகவல் அறிக்கையே ஒழுங்காக இல்லை. அவ்வளவு அவசரம் அவசரமாக அதனைத் தயாரித்திருப்பதே காரணம் என்று நீதிபதி கூறினார். இது ஓர் ஊழல் வழக்கு என்றால், ஏன் இதனை லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவிற்கு அனுப்பாமல், நேரடியாக சி பி சிஐடி பிரிவுக்கு அனுப்பினீர்கள் என்று கேட்டார். எதற்கும் காவல்துறையிடம் விடையில்லை.

 

அப்போது இஸ்தான்புல்லில் இருந்த இந்தியாவின் உள்துறை அமைச்சர் அத்வானி அங்கிருந்தே ஓர் அறிக்கையினை வெளியிட்டார். “துருக்கியில் இருக்கும் என்னை, மத்திய உளவுப் பிரிவு இயக்குனர் கே.பி.சிங் தொடர்புகொண்டு, தமிழ்நாட்டில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியையும் , கைது செய்யப்பட்ட விதத்ததையும் கூறினார். இதனை மத்திய அரசு கடுமையாகக் கண்டிக்கிறது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவரின் ஆட்சியைக் கொண்டுவருவது பற்றி யோசிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இது மிகக் கடுமையான அறிக்கைதான். ஆனால் இதற்குப் பிறகும் ஜெயலலிதா விரைந்து செயல்படவில்லை என்பது ஏன் என்னும் ஒரு கேள்விக்குறி இருக்கவே செய்கிறது.

ஆனாலும் முதன்முறையாக, ஒரு மாநிலத்தில் நடைபெற்ற அடக்குமுறைக்கு எதிராக அன்று இந்தியாவே தன் கண்டனக் குரலை வெளிப்படுத்தியது. குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் தன் கவலையை நேரடியாகத் தெரிவித்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திரசேகர், குஜ்ரால், தேவகவுடா ஆகியோரும், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆகிய பலரும் தம் கண்டனங்களை வெளியிட்டனர். ஜூலை 4 ஆம் தேதி காலை, தில்லியில் பத்திரிகையாளர்கள், தமிழ்நாட்டில் நடக்கும் அடக்குமுறைகளைக் கண்டித்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் இதனைக் கண்டிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். மூப்பனார், மருத்துவர் ராமதாஸ், வைகோ,ப.சிதம்பரம், தொல்.திருமாவளவன், காதர் மொஹைதீன், ஆர்.எம். வீரப்பன். பழ. நெடுமாறன், டாக்டர் கிருஷ்ணசாமி என்று தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் செயலைக் கண்டித்தனர். அரசியல் துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், பத்திரிகைத் துறையினர் என்று அனைத்துத் தரப்பினரும் தமிழக அரசின் செயலை எதிர்த்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், பார்த்திபன் ஆகியோர் கடும் கண்டனத்தை வெளியிட்டனர். இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், குமுதம், ஆனந்த விகடன் ஆகிய ஏடுகள் இதனைக் கண்டித்துத் தலையங்கங்களை எழுதின.

இவ்வளவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருந்தார்? தன் தோழி சசிகலாவுடன் குருவாயூர் சென்று, ஒரு யானைக் குட்டியை அக்கோயிலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து வந்தார். (நேர்த்திக் கடனோ என்னவோ!)

 

இறுதியாக, ஜூலை 4 ஆம் தேதி மாலை கலைஞரும், அதற்குச் சில நாள்களுக்குப் பிறகு ஸ்டாலினும் விடுதலை செய்யப்பட்டனர். அடக்குமுறையின் மூலம் கலைஞரை இழிவுபடுத்திவிட நினைத்தார் ஜெயலலிதா. ஆனால் விளைவு எதிர்மாறாக இருந்தது. கலைஞரின் புகழ் இந்த அடக்குமுறைக்குப் பிறகு பன்மடங்கு உயர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

அதன் விளைவை ஜெயலலிதா 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்துகொண்டார். ஆனாலும் அதற்கு முன், பொடா உள்ளிட்ட மேலும் பல அடக்குமுறைகள் தமிழ்நாட்டில் அரங்கேறின. அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

(களங்கள் தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================

1. கருணாநிதி, மு. “நெஞ்சுக்கு நீதி” – திருமகள் பதிப்பகம், சென்னை-17

2. சுரேஷ்குமார், கே.கே. – “நள்ளிரவில் கலைஞர் கைது” – யாழ்கனி வெளியீடு, சென்னை

3. பிரபாகரன், ம. – “இரண்டாண்டுகளில் இருண்ட தமிழகம்” – தமிழ்க்குரல் வெளியீடு, மங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.

4. 2001 ஜூலையில் வெளிவந்த தமிழ், ஆங்கில ஏடுகள்

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.