ராஜிவ் கொலைக்குப் பிறகு, 1991 ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியே  சட்டமன்றத்தில் இல்லை என்று சொல்லத்  தக்க அளவிற்கு அந்த வெற்றி அமைந்தது. அப்படி ஓரு  வெற்றியைப் பெற்று எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும், அது சர்வாதிகாரத்தை நோக்கியே செல்லும் என்பது இயற்கை.
ஆனால் முதல்வராகப் பொறுப்பேற்பதற்குச் சில நாள்களுக்கு முன்பு,  ஜெயலலிதா ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணல் ஒன்று, நெஞ்சுக்கு ஆறுதலாக இருந்தது.  “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அதிகமில்லை என்று கருத வேண்டாம். பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் சட்டமன்றத்திற்கு வெளியில் இருந்தே எதிர்க்கட்சியினரின் பணியை ஆற்றலாம்”  என்று அவர் சொல்லியிருந்தார்.
ஆனாலும் அவை வெற்றுச் சொற்களே என்பது சில நாள்களில்   தெரிந்துவிட்டது. ஆட்சிக்கு வந்த ஜூன் மாதமே முதல்வர் ஜெயலலிதா ‘தடா’ சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார்.  23.6.1991 முதல் தடா என்னும் அடக்குமுறைச் சட்டத்தைத் தமிழ்நாடு கண்டது.
அது மத்திய அரசு கொண்டுவந்த சட்டம்தான். ஆனாலும் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே இருந்தது.  எஸ்மா(ESMA),  தேசப் பாதுகாப்புச் சட்டம் (N S A ) போன்றவை, மத்திய அரசு அறிவித்தவுடன் நேரடியாக எல்லா மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துவிடும். ஆனால் தடா அப்படி இல்லை. தமிழக அரசு இசைவு தெரிவிக்கவில்லை என்றால் இங்கே வந்திருக்காது. ஆனால் ஜெயலலிதா அதனை விரும்பி ஏற்றதோடு, அது இன்னமும் கடுமையாகக் கூட இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார்.
தடா என்று சுருக்கமாக அறியப்படும் “பயங்கரவாத-சீர்குலைவு (தடுப்பு) சட்டம்” (TADA)  1985 ஆம் ஆண்டே இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதனைத் தமிழ்நாட்டிற்கு 1991 இல் அழைத்து வந்தவர் ஜெயலலிதாதான். அதனை ஓர் அடக்குமுறைச் சட்டம் என்றே கூற வேண்டும்.  அதாவது, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூட்டும் உரிமை, அமைப்புக் கட்டும் உரிமை, எல்லாவற்றிற்கும் மேலாக, உயிர் வாழும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளைக் கூட மறுக்கும் சட்டங்களையே நாம் அடக்குமுறைச் சட்டங்கள் என்கிறோம்! அப்படிப்பட்ட சட்டங்களில் ஒன்றுதான் தடா என்று சொல்லலாம்.
எனினும் இதுபோன்ற பல சட்டங்களை,  ஆங்கிலேயர் காலம் தொடங்கி நாடு பார்த்துள்ளது. 20ஆம்  நூற்றாண்டு என்று எடுத்துக்கொண்டால், 1911 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘அரசு விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ என்பதைக் குறிப்பிடலாம். காங்கிரஸ் கட்சியில் ‘தீவிரவாதிகள்’ உருவாகிவிட்டனர்  என்று ஆங்கில அரசு கருதிய காலத்தில் அவர்களை ஒடுக்குவதற்காக அன்று அச்சட்டம் கொண்டுவரப்பட்டது.  மேடைகளில் பேசுவதற்கான தடையும் அச்சட்டத்தில் அடங்கும். அதனையும் ஜெயலலிதா அரசு தூசு  தட்டி எடுத்துக் கொண்டுவந்து பயன்படுத்தியது.
அதற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த அடக்குமுறைச் சட்டம்தான் ரௌலட் சட்டம் என்று சுருக்கமாக அறியப்படும், ‘ரௌலட்-சாஸ்திரி சட்டம்’. அதனை எதிர்த்துத்தான் நாடு முழுவதும் மக்கள் போராடினர். ஜாலியன் வாலா பாக் படுகொலைகள் அப்போதுதான் நடந்தன.
இவை போன்ற இன்னும் பல சட்டங்கள் விடுதலை பெற்ற பின்னும்  இங்கே இருந்துள்ளன. 1948 ஆம் ஆண்டு ‘ஆந்திர மாநில சுசீர்குலைவு ஒழிப்புச் சட்டம்’ (APS (D) Act 1948), 1965 இல்  கலைஞர், முரசொலி மாறன், பேராசிரியர் சி.இலக்குவனார் உள்ளிட்டோரைச் சிறைக் கைதிகளாக்கிய ‘தேசப்  பாதுகாப்பு விதிச் சட்டம்’  (DIR) , 1975 இல்  நாட்டையே ஆட்டிப்படைத்த மிசா (MISA)  மற்றும் டெஸ்மா (TESMA),  எஸ்மா எனப் பலவற்றைக் குறிப்பிடலாம்.
தேசப் பாதுகாப்பிற்காகவும், பொது அமைதியைக் காப்பதற்காகவும், பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காகவும் இவை போன்ற சட்டங்களைக் கொண்டு வருவதாக எப்போதும் அரசுகள் சொல்கின்றன. பயங்கரவாதச் செயல்கள் நாட்டில் நடைபெறும் வேளையில், அவற்றை எதிர்த்து மக்கள் வெளிப்படையாகச் சாட்சி சொல்ல வரமாட்டார்கள் என்பதால்தான், வழக்கமான நடைமுறைகளை மாற்றி, மூடப்பட்ட நீதிமன்றங்களுக்குள் விசாரணைகள் நடக்கின்றன என்றும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்தக் காரணங்கள் நியாயமானவை போலத் தோன்றினாலும், உண்மை நிலை பல்வேறு காலகட்டங்களிலும் வேறு மாதிரியாகத்தான் இருந்துள்ளன. பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவே இவை போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை வரலாறு நமக்கு எடுத்துரைக்கின்றது.
உண்மையான பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றபோது இத்தகைய சட்டங்கள் பயன்படுத்தப்படவில்லை. எடுத்துக்காட்டாக, காந்தியார் கொலை வழக்கு, சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ்தான் நடத்தப்பட்டது.   அப்போது நாடு முழுவதும் அச்ச உணர்வு நிலவியது. மக்கள் பாதுகாப்பற்று  வாழ்வதாக எண்ணினர்.  ஆனால் எந்தச் சிறப்புச் சட்டமும் அன்று கொண்டுவரப்படவில்லை.
ஆட்டோ சங்கர் வழக்கு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு எல்லாம் சாதாரணச் சட்டங்களின் அடிப்படையில்தான் நடந்தன.  எனவே இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்கள் அரசியல் நோக்கமுடையனவாகவே இருந்துள்ளன. 1991 ஆம் ஆண்டு ராஜிவ் கொலையை அடிப்படையாகக் கொண்டு, ஒட்டுமொத்தமாகத் தமிழீழ ஆதரவாளர்களை ஒடுக்கவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடக்கூடிய அமைப்புகளை அடக்கவும் மட்டுமே அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை அன்று நடந்த நிகழ்வுகளைக் கொண்டு நாம் அறிய முடியும். அந்தச் சட்டத்தை எதிர்த்து, ஜனநாயக அடிப்படையிலும், சட்ட அடிப்படையிலும் பல போராட்டங்கள் நடந்தன.
எடுத்த எடுப்பிலேயே, ராஜிவ் காந்தி கொலை வழக்கு, தடா சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. (இறுதியில் அவ்வழக்கை, தடாவின் கீழ் கொண்டுவந்ததை உச்சநீதி மன்றம் ஏற்கவில்லை என்பது வேறு). அதில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தவிர மேலும் 74 பேர் உடனடியாகத் தடாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களெல்லாம் யார்? ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள். தமிழீழப் போராட்டத்தை ஆதரித்தவர்கள். தமிழீழத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள். மருந்து வாங்கிக்  கொடுத்தவர்கள்.
இது மிகையான கூற்று என எண்ண  வேண்டாம். கைது செய்யப்பட்டவர்களில் பலர், திராவிடர் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், முற்போக்கு இளைஞர் அணி, புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற அரசியல், கலை, இலக்கிய அமைப்புகளைச்  சேர்ந்தவர்கள்.  தமிழீழத்திற்கு உடைகள் தைத்து அனுப்பிய சுப்புலட்சுமி ஜெகதீசன், அவர்களுக்கு உதவிய வை.ரவிச்சந்திரன்,  ஓ. சுந்தரம் போன்றவர்களும் தடா கைதிகள் ஆனார்கள். இன்னொரு வேடிக்கை என்னவென்றால், குற்றம்சாற்றப்பெற்றவர்களுக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்கள் வீரசேகரன், மருதநாயகம் போன்றோரும் தடாவில் கைதானார்கள். எல்லாவற்றிற்கும் உச்சமாக, முன்னாள் உள்துறைச்  செயலாளர் நாகராஜனும் தடாவின் கீழ்ச்  சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலைமையை .எதிர்த்து, ஜனநாயக அமைப்புகள் நாடு முழுவதும் போராடின. உடனே  கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் அனைத்துக்கும் அரசு தடை விதித்தது.  ஈழத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் மீது,14.07.1991 அன்று தடியடி நடத்தப்பட்டது. ‘ஈழ அகதிகளை வெளியேற்றாதே’ என்று சுவர்களில்  எழுதிய ‘மாபெரும்’ குற்றத்திற்காக, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத் தோழர்கள், 16.8.91 அன்று ஜோலார்ப்பேட்டையிலும், சென்னையிலும் கைது செய்யப்பட்டனர். அகதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது கூட, பயங்கரவாதச் செயல் ஆகிவிட்டது.
தோழர் பொழிலனை அமைப்பாளராகக் கொண்ட, ‘தமிழ்நாடு இளைஞர் பேரவை’ 1.9.91 அன்று வேலூரில் நடத்த முற்பட்ட, ‘ஈழ விடுதலை அங்கீகரிப்பு மாநாடு’ தடை செய்யப்பட்டு, 73 பேர் கைது செய்யப்பட்டனர்.
பத்திரிக்கை அலுவலகங்களும் தாக்குதலுக்கு ஆளாயின. 2.9.91 அன்று, ஒரே நாளில், அலை ஓசை, சிவப்பு நாடா, நக்கீரன் ஆகிய மூன்று இதழ்களின் அலுவலகங்களும் காவல்துறையினரால் அமர்க்களப்பட்டன. நக்கீரன் வார இதழின் ஆசிரியர், பொறுப்பாசிரிபியர், நிருபர் முவரும் கைது செய்யப்பட்டனர்.  குமுதம் இதழ் கூட அரசின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. தமிழக முதல்வரைச்  சற்று விமர்சனம் செய்து எழுதிய காரணத்திற்காக, 5.8.91 அன்று அப்பத்திரிகை அலுவலகம்  “மக்களால்” தாக்கப்பட்டது. ஆனால் அந்த ஊமை அடியைப் பொறுத்துக்கொண்டு, குமுதம் அந்தச் செய்தியைக் கூட வெளியிடவில்லை. சண்டே மெயில் ஏட்டில், ஒரு வாரத்திற்குப் பின், கே.என். அருண், சான்றுகளோடு எழுதிய பிறகே உலகிற்குத் தெரிந்தது.
‘தமிழக அரசே,ஈழப் போராளிகளை இழிவு படுத்திடாதே’ என்னும் முழக்கத்தை முன்வைத்து, மக்கள் உரிமைக் கழகம் 8.9.91 அன்று, சென்னை, அம்பத்தூரில் நடத்தவிருந்த மாநாடு தடை செய்யப்பட்டு, 62 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதே நாளில், தலைநகர் தமிழ்ச் சங்கம் நடத்திய ‘தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்’உரையாற்றிய தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் தடாவில் கைது செய்யப்பட்டார்.
இந்த அடக்குமுறைகளைப் பற்றிச் சொல்வதற்காக, மக்கள் உரிமைக் கழகத்தின் தலைவர் பி.வி. பக்தவத்சலம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அதற்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.  அப்படி ஏற்பாடு செய்தமைக்காக, அக்கழகத்தின் செயலாளர் பி.வி. ராமானுஜம் உள்ளிட்ட ஆறு பேர் தேசப்  பாதுகாப்புச் சட்டத்தின்படி கைதுசெய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தனர்.
கோவை ராமகிருஷ்ணன்
ஈழப் போராட்டத்தை ஆதரித்தற்காக, தோழர்கள் கோவை ராமகிருஷ்ணன், ஆறுச்சாமி ஆகியோர் தடாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டது. ஆண்டுக்கணக்கில் அவர்கள் சிறையில் இருந்தனர். கோவை ராமகிருஷ்ணனின் தாயார் இறந்த நிகழ்வில் பங்கேற்பதற்குக்  கூட அவர் அனுமதிக்கப்படவில்லை.
(இப்போது புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் “தமிழர்கள்” சிலர், ராமகிருஷ்ணன் தெலுங்கர் என்று கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமில்லை, ஈழத்திற்கு எதிராக இவ்வளவு  கொடுமைகள் செய்த ஜெயலலிதாவை, ‘ஈழத்தாய்’ என்று போற்றி, ‘ இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று வேறு பரப்புரை செய்தார்கள்).
தடா எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்ற, சிறைசென்ற அனுபவம் எனக்கும் தனிப்பட்ட முறையில்  உள்ளது. தடாவை எதிர்த்து உருவாக்கப்பட்ட “அடக்குமுறைச் சட்ட எதிர்ப்புக் கூட்டியக்கத்தில்” நான் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய விடுதலைக் குயில்கள் அமைப்பும் இடம் பெற்றிருந்தது.
விடுதலைக் குயில்கள் சார்பில், 1992 மார்ச் 8 ஞாயிறு அன்று, சென்னை, பெரியார் திடலில், “தமிழர் ஒற்றுமை மாநாடு” என ஒன்றை நடத்தத்  திட்டமிட்டோம். அதற்காக, 5 ஆம் தேதி நள்ளிரவில் நான் கைது செய்யப்பட்டேன். மாநாடும் தடை செய்யப்பட்டது. ஈழத்தமிழர் ஒற்றுமை மாநாடு  கூட இல்லை, தமிழர் ஒற்றுமை மாநாடு என்றுதான் பெயரிட்டிருந்தோம். ஆனாலும், தினமலர் நாளேடு, ‘குயில் பாட்டு கேட்க, புலிக்கூட்டம் வருமா?’ என்று ஒரு செய்தி வெளியிட்டு, இந்த மாநாடு புலிகளின் ஆதரவு மாநாடுதான் என்று எழுதியிருந்தது. அதன் அடிப்படையில்தான் அந்த மாநாடு தடை செய்யப்பட்டது.
பிறகு, ஜெயலலிதாவின் முன்னெடுப்பில். 1992 மே மாதம் புலிகள் அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. அதன்பின் புலிகளைப்  பற்றி யார் பேசினாலும் உடனே தடா பாய்ந்துவிடும். ஏழாண்டுகள் சிறை என்று வேறு அச்சுறுத்தினார்கள். அப்போது, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ஓர் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.’ஏழாண்டு என்ன, எழுபது ஆண்டுகள் சிறை என்றாலும், கவலையில்லை, புலிகளை ஆதரிப்போம்’ என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.  செப்டம்பரில், சென்னை, கடற்கரையில்  ஒரு மாநாடும் நடத்தினார்.
பா.ம.க. நடத்திய அந்தத்  தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக, மருத்துவர் ராமதாஸ், அய்யா நெடுமாறன், பண்ருட்டி ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தீரன், தோழர்கள் மணியரசன், தியாகு, நான் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் சென்னைச் சிறையில் இருந்தோம்.
1993 ஜனவரியில், விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு  நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைக் கண்டித்து இயக்கம் நடத்துவதற்காக, நெடுமாறன் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் நெடுமாறன், புலவர் புலமைப்பித்தன், பேராசிரியர் சரஸ்வதி, நான் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டோம்.  சரஸ்வதிக்கு மட்டும் பிணை வழங்கிய நீதிமன்றம் எங்கள் மூவரையும் சிறையில் அடைத்தது. அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருந்த நேரு ஸ்டேடியத்திற்கு  வெடிகுண்டு வைக்கச் சதித்திட்டம் தீட்டியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் சிறையில் இருந்துதான் அந்த ஸ்டேடியத்தையே முதன்முதலில் பார்த்தோம். இடையில் ஒருநாள் இரவு, புலவர் புலமைப்பித்தனுக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அந்த நிலையிலும் மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.
இன்னொரு பக்கத்தில் சட்டவழியிலான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  சட்டப்படி எந்தக் குற்றமும் மெய்ப்பிக்கப்படாமல் பெருஞ்சித்திரனார் வெளியில் வந்தார். நெடுமாறன் வழக்கில் ஒரு விந்தையான பிழையினை அரசு செய்தது. ஒரு குறிப்பிட்ட நாளில், ஓர் அறையில் அமர்ந்து சிலருடன் பேசி அவர் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்பது புனையப்பட்ட வழக்கு. ஆனால், காவல்துறை குறித்திருந்த அந்த  நாளில், நெடுமாறன்,இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்திருக்கிறார். அப்பட்டமான பொய் வழக்கு என்பது மெய்ப்பிக்கப்பட்டவுடன் அவரும் விடுதலை ஆனார்.
வழக்கறிஞர் வீரசேகரன் வழக்கும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக, தடாவில் கைதானவரின் வழக்கைத் தனிநீதிமன்றம்தான்  விசாரிக்கும். அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டுமெனில், உச்சநீதிமன்றம்தான் செல்ல வேண்டும். உயர்நீதி மன்றத்திற்குத் தடா வழக்குகளை விசாரிக்கும் உரிமையில்லை. இப்படி ஒரு நிலை ஆங்கிலேயர் காலத்தில் கூட இருந்ததில்லை. ஆனால் வழக்கறிஞர் வீர சேகரன் உயர்நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றமும் அவர் வழக்கை எடுத்துக் கொண்டதோடு, அவருக்குப் பிணையும் வழங்கியது.
அவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம், தன் தீர்ப்பில் இது தொடர்பாகப்  பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை உன்னிப்பாகவும், ஆழமாகவும் பரிசீலித்தபோது, உயர்நீதி மன்றத்திற்கு அந்த உரிமை உண்டு என்பது தெரிந்தது. அரசியல் சட்டத்தின் 227 ஆம் பிரிவு இந்தப் பிரச்சனையில் உயர்நீதி மன்றத்தின் உரிமையைப் பறித்துவிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’ என்று கூறினார்.
இவ்வாறு மக்களின் கருத்துரிமை உள்பட, நீதிமன்றம் செல்லும் உரிமை வரை அனைத்துக்கும் போராட வேண்டியிருந்தது. மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒரே வரிசையில் நின்று உரிமைகளைத் தம் காலில் போட்டு மிதித்த காலம் என்று தடா காலத்தைச் சொல்லலாம். சென்னையில் ஒரு கருத்தரங்கில் பேசிய வரலாற்றாசிரியர் சர்வபள்ளி கோபால், “தமிழ்நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைகள் கூடிக்கொண்டே போவதாகவே நாங்கள் உணர்கிறோம். விடுதலைப் புலிகளின் ஆயுத நடவடிக்கைகளைத் தடுப்பது சரிதான். அதனை எம் போன்றவர்கள் எதிர்க்கவில்லை.  ஆனால் அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பதே தவறு என்று கூற முடியாது. ஆதரித்துப் பேசுவதற்கெல்லாம் தடா சட்டம் பயப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள இயலாதது” என்று பேசினார்.
இவ்வாறு கூட்டங்களில் பேசுவதைக் கூடப் பயங்கரவாதச் செயல் என்று கூறி, தடா சட்டம் இங்கு தவறாகப்  பயன்படுத்தப்பட்டது. தமிழக அரசின் இப்போக்கை நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த மத்திய  அரசும் ஆதரித்தது. ஆனால் அதே மத்திய அரசு, அதே கால கட்டத்தில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பைத் தடுத்துக் கூட நிறுத்தவில்லை. காலையில் தொடங்கி மாலை வரையில் நின்று நிதானமாக மசூதி இடிக்கக்கப்பட்ட  போது, மத்திய அரசு அமைதி காத்தது.
இந்த நிலை, 1995 ஆம் ஆண்டு வரையில், அதாவது ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம்  முடியும் வரையில் நீடித்தது. இவை அனைத்தும்  அவர் மீதான ஒரு வெறுப்பை மக்களிடம்  வளர்த்தன. அவர் ஆட்சிக்காலத்தின்  இறுதியில் நடைபெற்ற அவரது வளர்ப்பு மகனின்  ஆடம்பரத் திருமணம் மக்களிடம் பேரதிர்ச்சியையும், பெரும் வெறுப்பையும் ஏற்படுத்தியது.
அதன் பயனை 1996 தேர்தலில் அவர் சந்தித்தார். 1991 ஆம் ஆண்டு தேர்தலில், 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்ற அவர் கட்சி,  1996 ஆம் ஆண்டு தேர்தலில்  வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அவரே பர்கூர் என்னும் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
அடக்குமுறைகள் வென்றதாகச் சரித்திரம் இல்லை.
(களங்கள் தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================
1. தியாகு மற்றும் இருவர் – “தடா தடா தடா” – அடக்குமுறைச் சட்ட எதிர்ப்புக் கூட்டியக்க வெளியீடு, சென்னை-18.
2. வீரபாண்டியன், சுப. – “காலில் மிதிபடும் கருத்துரிமை”  – விடுதலைக் குயில்கள் வெளியீடு, சென்னை-87
3. அருணன் – “காலந்தோறும் பிராமணியம் – பாகம் எட்டு” – வசந்தம் வெளியீட்டகம்,மதுரை-1
4. சிவஞானம், கா. –  “அரசியலமைப்புச் சட்டம்” – பாக்யா பயிற்சிப் பட்டறை, சென்னை-2.

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.