1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாத மத்தியில், சென்னையிலிருந்து தெற்கே சென்ற பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. சாலைகள் நெடுக, மரங்கள் வெட்டிப் போடப்பட்டிருந்தன. ஏறத்தாழ ஒரு வாரம், போக்குவரத்தே நிலைகுத்தி நின்றது. சாலைகள் எங்கும் மக்கள், அங்கங்கு நின்று கொண்டிருந்தார்கள். தமிழகத்திற்கு அது ஒரு புதுவகைப் போராட்டமாக இருந்தது.

எம்.ஜி.ஆர். ஆட்சியின் இறுதிகாலத்தில் நடைபெற்ற அந்தச் சாலைமறியல் போராட்டத்தை, தங்களுக்கென்று தனி இடஒதுக்கீடுக் கோரி வன்னியர் சங்கம் நடத்தியது. எனினும், அவர்களின் கோரிக்கை அப்போது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1989ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.கழக ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்ட பிறகு வன்னியர் உள்ளிட்ட 108 சீர் மரபினருக்குமாகச் சேர்த்து, 20சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அந்தப் போராட்டத்தின் அடுத்த நகர்வாகத்தான், வன்னியர் சங்கத்தின் அரசியல் கட்சியாகப் பாட்டாளி மக்கள் கட்சி உருவெடுத்தது.

அப்போராட்டம்தான், இடஒதுக்கீட்டிற்காகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் போராட்டம் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. ஒரு நூற்றாண்டையும் கடந்து நடந்து கொண்டிருக்கிற போராட்டங்களில் இடஒதுக்கீட்டுப் போராட்டமும் ஒன்று. அப்போராட்டம் படிப்படியாகப் பல நிலைகளை எட்டியுள்ளது. இடஒதுக்கீட்டில், முன்னும் பின்னுமாகப் பல நிலைகளைத் தமிழகம் கண்டிருக்கிறது. இந்தியா முழுவதிலும் இந்த இடஒதுக்கீட்டுக் கோரிக்கை இருக்கிறது என்ற போதிலும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே முன் வைத்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லலாம்.

சமூகநீதி என்னும் கோட்பாட்டினையே, இடஒதுக்கீடாக குறுக்கிப் பார்க்கும் ஒரு பார்வை இங்கு உள்ளது. அவ்வாறு அன்று. சமூகநீதிக் கோட்பாட்டின் ஒருபகுதியே இடஒதுக்கீட்டுக் கோரிக்கை என்று சொல்லலாம். இன்னும் துல்லியமாகச் சொல்வதெனில், இடஒதுக்கீடு என்பதைவிட, ‘பிரதிநிதித்துவ விகிதாச்சார வகுப்புவாரி உரிமை’ (Proportional representative communal right of reservation) என்பதே சரியானதாகும்.

இடஒதுக்கீட்டுக் கோரிக்கையானது, காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருந்திருக்கிறது. 1885ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட போதே, அதனுடைய 4 ஆவது தீர்மானம், அரசு அதிகாரங்களில் இந்தியர்களுக்கு, உரிய இடஒதுக்கீடு தரவேண்டும் என்பதுதான். இதுவும் ஒருவிதமான இடஒதுக்கீட்டுக் கோரிக்கையே. காலப்போக்கில் அரசியல், வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய மூன்று தளங்களில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை எழுந்தது.

முதன்முதலாக இடஒதுக்கீட்டை எவரும் கோராமலேயே, தன் கோல்காப்பூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கிய பெருமை மராத்திய மன்னர் சாஹூ மகராஜ் அவர்களையே சாரும். எனினும், முதன்முதலாக ஆங்கிலேய அரசு வழங்கிய இடஒதுக்கீடு 1909ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. 1906இல், ஆஹாகான் தலைமையில் முஸ்லிம் லீக் கட்சியினர், வைஸ்ராயைச் சந்தித்து, தேர்தலில் சில தொகுதிகளை இஸ்லாமியர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மிண்டோ மார்லி சீர்திருத்தத்திற்குப் பின், அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, 1909ஆம் ஆண்டு, அக்டோபர் ஒன்றாம் தேதி, அரசியல் தளத்தில், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அருண்ஷோரி போன்றவர்கள், இவ்வாறு இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம், ஆங்கிலேயர்கள் அப்போதே, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையில் எடுத்துவிட்டனர் என்று எழுதியுள்ளனர். ஆனால், அது பிரித்தாளும் சூழ்ச்சியில்லை சமூகநீதியின் தொடக்கம் என்பதைக் காலம் உணர்த்திற்று.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நீதிக்கட்சி என அறியப்படும், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், இலண்டன் வரை சென்று, தேர்தலில் போட்டியிட பார்ப்பனர் அல்லாதவர்களுக்கான தனி இடஒதுக்கீடு உரிமை வேண்டும் எனக் கோரினர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு, 28 இடங்கள் மட்டும், தேர்தலில் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கான தனி இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டது. 1920 நவம்பரில், நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, வகுப்புவாரி உரிமைக்கான சட்டமுன்வடிவம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதற்குச் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இந்து மக்களை, பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்று கூறு போடுவதாகச் சத்தியமூர்த்தி போன்றவர்கள் சட்டமன்றத்திற்கு உள்ளும், ‘இந்து’ ஏடு போன்றவைகள் சட்டமன்றத்திற்கு வெளியிலும் குரல் எழுப்பினர்.

அன்று முதலமைச்சராக இருந்த பானகல் அரசர் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, 1922 ஆகஸ்ட் மாதம், சட்டமன்றத்தில் அதனை நிறைவேற்றிவிட்டார். ஆனாலும், பார்ப்பன எதிர்ப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்ட அன்றைய வைஸ்ராய் ரீடிங், அந்தச் சட்டத்திற்கு, ஒப்புதல் கையொப்பம் அளிக்க மறுத்துவிட்டார். அது சட்டமாகாமலேயே ஆறு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.

பிறகு, இரண்டாவது அமைச்சராகப் பொறுப்பேற்ற எஸ்.முத்தையா முதலியார், 1928ஆம் ஆண்டு அதனை நிறைவேற்றி, அரசின் ஒப்புதலையும் பெற்றுச் சட்டமாக்கினார். அதனைத்தான், ‘வகுப்புவாரி இடஒதுக்கீட்டு ஆணை’(கம்யூனல் ஜி.ஓ) என இன்றும் அழைக்கிறோம். அந்த ஆணை, இப்போது இருப்பது போல, 69சதவீதம், 50சதவீதம் என்றில்லாமல் நூறு சதவீதத்தினருக்கும் இடஒதுக்கீடு வழங்கிற்று. மொத்த மக்களை 5 பிரிவினராகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவினருக்கும், குறிப்பிட்ட அளவு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி, பார்ப்பனர்களுக்கு, 16 விழுக்காடும், பார்ப்பனரல்லதவர்களுக்கு 44 விழுக்காடும், ஆதிதிராவிடர்களுக்கு 8 விழுக்காடும், இஸ்லாமியர்களுக்கு 16 விழுக்காடும், கிறித்தவர்களுக்கு 16 விழுக்காடும் என மொத்தமுள்ள 100 விழுக்காடு மக்களுக்கும் வகுப்புவாரி உரிமை அளிக்கப்பட்டது. இந்த ஆணை 1947ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருந்தது.

இந்தியா விடுதலை பெற்றபிறகு, செண்பகம் துரைராஜன் என்பவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில், இடஒதுக்கீட்டு உரிமை பறிபோயிற்று. மீண்டும் 1951 மே மாதம், இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சில அரசமைப்புச் சட்டத் திருத்தங்களின் மூலம், மறுபடியும் இடஒதுக்கீட்டு உரிமையை நாடு பெற்றது. எனினும், இடஒதுக்கீட்டின் முறைகளும், அளவுகளும் காலந்தோறும் மாறிக் கொண்டே இருந்தன. 1954ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் முதல்வராகக் காமராசர் பொறுப்பேற்றபிறகு, பார்ப்பனரல்லாதவர்களுக்கு 25 விழுக்காடும், ஆதிதிராவிடர்களுக்கு 16 விழுக்காடும் இடஒதுக்கீடு தரப்பட்டது. மீதமிருந்த 59 விழுக்காடு இடங்கள் பொதுப்போட்டிக்கானவை என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனாலும், இந்திய அளவிலும், தமிழக அளவிலும், இடஒதுக்கீட்டின் முறை, அளவு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. குறிப்பாக, இரண்டு வினாக்கள் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டன, சமூக, கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான், இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் அந்த உரிமை கொடுக்கப்பட வேண்டுமா என்பதே முதல் கேள்வியாக இருந்தது. அடுத்ததாக எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்னும் கேள்வியும் எழுந்து கொண்டே இருந்தது. இரண்டு கேள்விகளுக்குமான விடைகளை காண மத்திய அரசு, முதலில் காகா கலேல்கர் தலைமையில் ஒரு குழுவையும், பிறகு நீதிபதி மண்டல் தலைமையில் இன்னொரு குழுவையும் அமைத்தது. இன்றும் அந்தச் சிக்கல் ஓய்ந்த பாடில்லை.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முயற்சியாலும், அறிவுத்திறனாலும் 1943 ஆகஸ்ட் 11 முதல், பட்டியலின மக்களுக்கு இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசுப்பணிகளில் மட்டுமின்றி, மாநில அரசுப்பணிகளிலும் கூட, 1977ஆம் ஆண்டு வரையில் வட மாநிலங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு கூடிக் கொண்டும், குறைந்து கொண்டும் இருந்ததே தவிர, முற்றிலுமாக இடஒதுக்கீடு இல்லாத நிலை, ஒரு நூற்றாண்டு காலத்தில் ஒருபோதும் எழவில்லை.

உரிய அளவிலான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்னும் கோரிக்கையை முன்வைத்து, அவ்வப்போது போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. பிற்படுத்தப்பட்டோருக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், உரிய இடஒதுக்கீடும் வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருந்தது. அதன் அடிப்படையில், கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, 1969ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி, சட்டநாதன் ஆணையம் என்று ஒரு குழு அமைக்கப்பட்டது. சுங்கத்துறை ஆட்சியராக இருந்து ஓய்வுபெற்ற அதிகாரி ஏ.என்.சட்டநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவில் மாவட்ட அமர்வு நீதிபதிகள் சின்னப்பன், ஜமால் உசேன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அரசு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு செய்யவும், எதிர்கால முன்னேற்றத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் பரிந்துரைப்பதற்காக அக்குழு நியமிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட, முதலாவது மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுவே ஆகும். அவ்வாணையம் 1970ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தன் அறிக்கையை அரசிடம் கொடுத்தது. ஆனால் அந்த அறிக்கையில், பொருளாதார அடிப்படையிலும் சில பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்ததால், கலைஞர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டு வருமானம், 9,000 ரூபாயைத் தாண்டும் ஊதியப் பிரிவினருக்கும், 10 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்துள்ள நிலவுடைமையாளர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினராய் இருந்தாலும், இடஒதுக்கீடு இல்லை என அறிவித்தார். இந்த அறிவிப்பு, தமிழ்நாடெங்கும் மிகப்பெரிய எதிர்ப்புக்கு வழிகோலியது. அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பெரியார் இயக்கங்களும், பல்வேறு சாதிச் சங்கங்களும் கோரிக்கை வைத்தன. ஆனால், அவற்றையெல்லாம் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் விளைவாக அவருடைய செல்வாக்கு சரிந்தது. கட்சி தொடங்கிச் சில ஆண்டுகளிலேயே ஆட்சிக்கு வரும் அளவிற்குச் செல்வாக்குப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். இந்த முடிவின் காரணமாக மக்களின் எதிர்ப்பைச் சேர்த்துக் கொண்டார். அதன் விளைவாக, 1980ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு, இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார்.

அம்பாசங்கர்

அந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அவர் தன் நிலையை முழுமையாக மாற்றிக் கொண்டார். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தினார். அதுமட்டுமல்லாமல், மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 1982ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 13ஆம் தேதி, தமிழ்நாட்டின் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும், அம்பாசங்கர் தலைமையில் நியமித்தார். ஒய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான அவர் தலைமையின் கீழ், 12 பேர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை வன்னிய சமூகத்தினரே, தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த காரணத்தினாலோ என்னவோ, அதே சமூகத்தைச் சேர்ந்த சட்டநாதன், அம்பாசங்கர் ஆகிய இருவரும் ஆணையங்களுக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அம்பாசங்கர் ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில், பலர் அரசியல்வாதிகளாக இருந்தனர். வேலூர் ஜி.விஸ்வநாதன், அன்பில் தர்மலிங்கம், வி.வி.சுவாமிநாதன், பழ.நெடுமாறன், குமரி அனந்தன், ஆண்டித்தேவர், டாக்டர் சமரசம், எஸ்.ஆர்.இராதா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக அமர்த்தப்பட்டனர். சில வாரங்களிலேயே மீண்டும் 8 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1985ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கை அரசிடம் கொடுக்கப்பட்டது. அவ்வாணையத்தின் முதன்மையான பரிந்துரைகளில் ஒன்று, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைத் தொகுப்பு முறை இடஒதுக்கீடாக மாற்ற வேண்டும் என்பதாகும். இந்த இடத்தில், தேவராஜ் அர்ஷ் கர்நாடகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, தொகுப்புமுறை இடஒதுக்கீடு வழங்கியதை நாம் நினைவு கூரலாம். அறிக்கையைப் பெற்றுக்கொண்ட தமிழக அரசு, அதன் மீதான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

அதன் விளைவாகவே, 1987 செப்டம்பர் மாதம் ஒருவார காலம் சாலைமறியல் நடைபெற்றது. வன்னியர் சங்கம் செல்வாக்கோடு இருக்கும் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் சாலைமறியல் மிகக் கடுமையாக நடைபெற்றது. அப்போது எம்.ஜி.ஆர். உடல்நலமின்றி இருந்தார். மூத்த அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோரே முடிவெடுக்கும் நிலையில் இருந்தனர். ஒரு கட்டத்தில், அரசு துப்பாக்கிச்சூட்டிற்கு ஆணையிட்டது. அதில், வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 21 பேர் இறந்து போயினர். அதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்தான் போராட்டம் நடைபெற்றது என்றாலும், தி.மு.கழகத்திற்கும் அதனால் ஒரு பெரும்பாதிப்பு ஏற்பட்டது. ஆம், அப்போதுதான் சென்னையில் ‘அறிவாலயம்’(திமுக தலைமை அலுவலகம்) கட்டிடம் திறக்கப்பட்டது. தமிழ்நாடெங்கும் இருந்து அவ்விழாவிற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான திமுகவினர் சாலைமறியல் போராட்டத்தால் பெரும்பாதிப்புக்கு உள்ளாயினர். இருப்பினும், 1989ஆம் ஆண்டு, கலைஞர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகுதான், இதற்கான ஒரு தீர்வு ஏற்பட்டது.

வன்னியர் மற்றும் 108 சீர்மரபினருக்கு, 1989 ஜூன் மாதத்தில் 20 விழுக்காடு உள்இடஒதுக்கீட்டினை முதல்வர் கலைஞர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கும் ஓர் உதவித்தொகை வழங்கியதோடு, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை அரசு உதவியாகக் கொடுக்கும் என்றும் அறிவித்தார். அனைத்து வன்னியர் சங்கங்களும், அரசின் அறிவிப்பினை வரவேற்றார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமசாமி படையாச்சி தலைமையில், ஒரு பாராட்டுக் கூட்டத்தையும் அனைத்து வன்னியர் சங்கம் நடத்திற்று. அதில் முன்னாள் அமைச்சர் ஜி.பூவராகன், வன்னிய அடிகளார், வன்னிய சங்கத் தலைவர் இராமமூர்த்தி முதலானோர் கலந்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவராக இருந்த டாக்டர் இராமதாஸ் மட்டும் அதனை வரவேற்கவில்லை. 108 சீர்மரபினரோடு, தங்களையும் சேர்த்து இடஒதுக்கீடு கொடுத்தது என்பது ஒருவிதமான ஏமாற்றுவேலை என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

“அரசு வழங்கியிருக்கும் இடஒதுக்கீட்டுக் கனியை சுவைத்துப் பாருங்கள்” என்றார் கலைஞர். “அது முழுக்க முழுக்கப் புழுக்கள் நிறைந்த அழுகிய கனி. அதில் சுவைப்பதற்கு என்ன இருக்கிறது” என்று கேட்டார் இராமதாஸ். இருப்பினும், “ஏதேனும் சிக்கல் வந்தால், நான் தீர்த்து வைக்கிறேன்” என்று கலைஞர் சமாதானம் சொன்னார். அந்தப் போராட்டம், ஓரளவு முடிவடைந்தது என்று கூறலாம். அதன்பிறகு, பல தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது. ஆனால் இப்போதும் டாக்டர் இராமதாஸ் எழுதியுள்ள ஒரு நூலில் எம்.ஜி.ஆர்., கலைஞர் இருவருமே வன்னியர் சமூகத்திற்கு, துரோகம் செய்துவிட்டனர் என்றே எழுதியுள்ளார்.

இப்போதுள்ள மத்திய அரசு, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. மாதம் 65,000 ரூபாய் வரையில் ஊதியம் பெறுகின்றவர்கள், பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள் என்று மத்திய அரசு வரையறை செய்துள்ளது. இந்த சமூக அநீதியை எதிர்த்தும் போராட வேண்டிய தேவை இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, மலைவாழ்மக்களுக்கு இருக்கவே செய்கிறது.

(களங்கள் தொடரும்…)

– சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்:

1. ராஜன், ஏ.கே, நீதியரசர் – “சமூகநீதிப் பன்முகங்கள்” – சேதுபானு வெளியீடு, சென்னை 40.

2. அன்பழகன், க, பேராசிரியர் – “வகுப்புரிமைப் போராட்டம்” – திராவிடர் கழக வெளியீடு, சென்னை – 7.

3. ஆணைமுத்து, வே. – “வகுப்புரிமைப் போராட்டம்” – மா.பெ.பொ.க. வெளியீடு, சென்னை – 5.

4. சீனிவாசன், நம். பேராசிரியர் – “தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும், பணியும்” – திராவிடர் கழக வெளியீடு, சென்னை – 7.

5. ஞானையா, டி – “சாதிமுறையைத் தகர்க்க இயலுமா?” – பெரியார் நூலக வாசகர் வட்ட வெளியீடு, சென்னை – 7.

6. இராமதாசு, ச. மருத்துவர் – “சுக்கா… மிளகா… சமூகநீதி?” – செய்திப்புனல் வெளியீடு, பெங்களுர்-506100

7. Arun Shourie – “Worshiping False Gods” – Harper Collins Publishers, NewDelhi.

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.