சென்னை: “இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்” ! சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு – ஐந்தாண்டு கால விளையாட்டுச் சாதனை விழாவில், கலந்துகொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 18.2.2026 அன்று சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்றவிளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 62 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 178 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், 1,172 விளையாட்டு வீரர்களுக்கு 33.50 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளையும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நிதியுதவிகளையும் வழங்கி, சென்னையில் முதற்கட்டமாக 261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டு நகரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை இவ்வரசு எடுத்து வருகிறது.

சர்வதேச போட்டிகளான ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமன்வெல்த், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு போட்டிகள், பாராலிம்பிக், ஆசிய பாரா போட்டிகள், (மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட) தேசியளவிலான போட்டிகள், ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமென்வெல்த் போட்டிகளின் பட்டியலில் உள்ள விளையாட்டுகளில் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் மாநில சீனியர் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 2024-25ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், துணை முதலமைச்சர் அவர்கள் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்களில் அவர்களது சாதனைகள் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை, தொழில் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற 14 அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர், இளநிலை வரைவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை 23.12.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் இதுவரை 5 மாற்றுத்திறனாளி (பாரா) விளையாட்டு வீரர்கள் உட்பட 116 விளையாட்டு வீரர்/வீராங்கனைகளுக்கு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 62 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 178 விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 178 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் – ஆயிரத்து 172 விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல் – சென்னையில், உலக தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா என, முப்பெரும் விழாவாக இதை ஏற்பாடு செய்திருக்கிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள்!
பன்னாட்டு, ஆசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைக ளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் இதுவரை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 5,406 விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு 177.80 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, தமிழ்நாட்டில் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் இதுவரை 241 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 29.67 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு புரிவது மாதிரி சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு ‘Triple Jump’ Event! உதயநிதி இந்தத் துறைக்கு கிடைத்தது, உங்களுக்குப் பல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கும்! துடிப்பாக செயல்பட்டு, தமிழ்நாட்டு இளைஞர்களையும், விளையாட்டுத் துறையையும் அதிவேகமாக வளர்த்திருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள். இங்கே இருக்கின்ற பல்வேறு சாம்பியன்களை உருவாக்கும் திறமையான கேப்டனாக அவர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கும், அவரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து செயல்படும் துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
விளையாட்டு வீரர்கள் இன்றைக்கு இவ்வளவு பேர் சாதிக்க உதவியது நம்முடைய அரசின் திட்டங்கள் – அதில், முக்கியமான சில திட்டங்களை மட்டும் சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்!
முதலில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த நான்கரை ஆண்டுகளில் National மற்றும் Inter-National அளவில் Medals வென்ற 5 ஆயிரத்து 406 விளையாட்டு வீரர்களுக்கு 177 கோடியே 80 இலட்சம் ரூபாய் ‘உயரிய ஊக்கத்தொகை’ வழங்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன Special என்றால், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இந்த தொகையை நாம் வழங்கிக் கொண்டு வருகிறோம். இதிலும் நாம்தான் இந்தியாவிற்கே முன்னோடி! இதுவரை 241 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 29 கோடியே 67 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, இந்த நிகழ்ச்சியில், பன்னாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கக்கூடிய ஆயிரத்து 172 வீரர், வீராங்கனைகளுக்கு 33 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தம் 6 ஆயிரத்து 578 வீரர்களுக்கு 211 கோடியே 39 இலட்சம் ரூபாய்க்கு ஊக்கத் தொகை வழங்கியிருக்கிறோம்! இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு ஊக்கத்தொகையை வழங்கியிருக்க மாட்டார்கள்!
2023-ஆம் ஆண்டு நான் தொடங்கி வைத்த ‘Tamil Nadu Champions Foundation’ மூலமாக, விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும், அவர்கள் Inter-National விளையாட்டில் பங்கேற்கவும், இது தொடர்பான இதர செலவுகளுக்கும், இதுவரை 4 ஆயிரத்து 231 பேருக்கு, 30 கோடியே 21 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
விளையாட்டு வீரர்களுக்கு ‘Coach’ எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்! கடந்த ஆட்சியில், சுமார் 10 ஆண்டுகளாக Coach யாரும் நியமிக்கப்படவே இல்லை. அதைத்தான் தம்பி உதயநிதி பேசுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார், நாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதை மாற்றி, 2023-ஆம் ஆண்டு 76 பயிற்றுநர்களை பணியில் அமர்த்தியிருக்கிறோம். மேலும், 4 மாற்றுத்திறனாளி பயிற்றுநர் உட்பட 34 பயிற்றுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை, சென்ற மாதம் வெளியிட்டோம்.

ஆண்டுதோறும் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று, சிறந்து விளங்குகின்ற 2 பெண் மற்றும் 2 ஆண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதும் ஒரு இலட்சம் ரூபாய் பரிசும் வழங்கிக் கொண்டு வருகிறோம். இதுவரை 22 பேர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.
அதேபோல், அடுத்து முக்கியமான ஒரு திட்டம் – அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 3 சதவிகிதம் Sports Quota -வில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒரு சிறிய Comparison மட்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்! 2021-ஆம் ஆண்டுக்கு முன், இந்த விளையாட்டு Quota-வில் வெறும் 5 பேர்தான் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்து 5 மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட, மொத்தம் 116 பேரை பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளில் பணியமர்த்தி இருக்கிறோம்.
ஏன், இவ்வளவும் குறிப்பிட்டு இதை நான் சொல்கிறேன் தெரியுமா? இதனால் Motivate ஆகி இன்னும் நிறைய பேர் விளையாட்டை Career –ஆக எடுக்க வேண்டும்! அதற்காகதான் சொல்கிறேன்.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]