டில்லி:

வரும் 17ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று பிரதமர் மோடி பிறந்த நாளை அனைத்து தொடக்கப் பள்ளிகளில் கொண்டாட மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உ.பி. மாநிலத்தில் உத்தரவிடப்படடுள்ளது.

இது குறித்து மத்திய ஆரம்பக் கல்வி துறை இணை அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘உ.பி. மாநிலத்தில் உள்ள 1.6 லட்சம் தொடக்கப் பள்ளிகளில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. எம்எல்ஏ.க்கள் தத்தெடுத்துள்ள பள்ளிகளுக்கு அந்தந்த பகுதி எம்எல்ஏ.க்கள் சென்று பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

பிரதமரின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டம் குறித்து குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே அதை சாதிக்க முடியும். இதை பிறந்தநாள் பரிசாக பிரதமருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு அன்று இனிப்பு வழங்கப்படும்’’ என்றார்.

பிரதமரின் பிறந்தநாளான வரும் 17ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று வருகிறது. அதனால் 16 அல்லத 18ம் தேதி எம்எல்ஏ.க்கள் பள்ளிகளுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உபி பாஜக செய்தி தொடர்பாளர் சந்திரமோகன் கூறுகையில், ‘‘வாழ்நாள் முழுவதும் கஷ்டங்களை அனுபவித்தவர் மோடி என்பதால் குழந்தைகளுக்கு அவர் சிறந்த முன்னுதாரணமாக இருப்பார். மிகப்பெரிய ஜனநாயகத்தில் அவர் தற்போது மிக சக்தி வாய்ந்த நபராக இருக்கிறார்’’ என்றார்.

இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்கத்தில் இருந்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி தூய்மை இந்தியா திட்டங்களை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைகழகங்களோடு இணைந்த கல்லூரிகளில் இந்த திட்டம் செயல்படுத்துவதை துணைவேந்தர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் உ.பி மாநில கல்வி துறையும் தூய்மை இந்தியா திட்டத்தை 15 நாட்கள் கொண்டாட பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.