சென்னை: விலையில்லா மடிக்கணினிகளில் உள்ளமுன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களை நீக்க பள்ளிக் ல்வித்துறை அண்மையில் உத்தரவிட்ட நிலையில், விலையில்லா மடிக்கணினி திட்டம் ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்து உள்ளார். இதனால் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் லேப்டாக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

2011 சட்டமன்றத் தேர்தலின் போது அஇஅதிமுக தனது  தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைந்ததது. தமிழ்நாட்டின் முதல்வராக மறைந்த ஜெயலலிதா இலவச மடிக்கணினி திட்டத்தை, கடந்த 2011-12 ஆம் கல்வியாண்டு முதல்  செயல்படுத்தினார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.  இந்த திட்டத்தின்கீழ் 2019ம் ஆண்டு வரையில்  38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயணணடைந்துள்ளதாக கூறப்படு கிறது.

இதற்கிடையே, கொரோனா  தொற்று காரணமாக பொதுமுடக்கம், கல்வி நிலையங்கள் மூடல் போன்ற காரணங்களால், இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் முடங்கியது.  நிதிப்பற்றாக்குறை உள்பட பல்வேறு சிக்கல்களால், கடந்த 3 ஆண்டுகளாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாமல் உள்ளன.

இந்த நிலையில், திமுக அரசு பதவி ஏற்றதும், விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் திட்டம் தொடருமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்கனவே மாணவர்களுக்காக வழங்கப்பட்ட, வழங்கப்படாமல் இருக்கும் லேப்டாப்பில் உள்ள  முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்களை நீக்க  உத்தரவிட்டது. இதனால், விரைவில் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், விலையில்லா மடிக்கணினி திட்டம் ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்ததுடன், மீண்டும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.