சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளில் எழுந்த குளறுபடி மற்றும் கருணை மதிப்பெண் சர்ச்சைகளால் கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கலந்தாய்வு நடத்தி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனையடுத்து, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் ஆகஸ்டு 8 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவ துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாணவர்கள் www.tnmedicalselection.net, tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
MBBS மற்றும் BDS படிப்புகளில் சேர இன்று காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 8ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 710 மருத்துவக் கல்லூரிகளில், 1.10 லட்சம் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. மேலும், பல் மருத்துவப் படிப்புகளுக்கான 21,000 இடங்களும், ஆயுஷ் மற்றும் செவிலியர் படிப்புகளுக்கான இடங்களும் கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. இந்த தகவலை தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலர் டாக்டர் பி. ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அனைத்திந்திய இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள 15 சதவிகித இடங்களும், எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மெர், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
ஏற்கனவே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்,, பி.பிடி., பி.ஏ.எஸ்.எல்.பி., என்ற செவித்திறன், பேச்சு, மொழி நோய் குறியியல் உள்ளிட்ட, 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கு இந்த படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதமே இணையதங்கள் மூலம் பெறப்பட்டன. அவ்வாறு இணையம் வழியாக அணுக முடியாதவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களுடன், அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி உதவி மையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 15,000த்துக்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., முதல் சுற்று கவுன்சிலிங் முடிந்த பின் தொடங்கப்பட உள்ளது.