கொல்கத்தா
மேற்கு மாநில வங்க பாஜக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திலிப் கோஷ் மீது பாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகாரை ஒரு மாணவி அளித்துள்ளார்
நாடெங்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அதற்கு எதிராக பாஜகவினர் குடியுரிமை சட்ட ஆதரவு பேரணிகளை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட ஆதரவுப் பேரணி ஒன்றை பாஜக நடத்தியது. அந்தப் பேரணி மேற்கு வங்க பாஜக தலைவரும் மெதினிப்பூர் மக்களவை உறுப்பினருமான திலிப் கோஷ் தலைமையில் நடந்தது.
அந்த பேரணியின் உள்ளே சமஸ்கிருத பலகலைக்கழக மாணவி ஒருவர் நுழைந்தார். அந்த மாணவி தனது கையில் “குடியுரிமை சட்டத் திருத்தம் தேவை இல்லை, குடிமக்கள் பட்டியல் தேவை இல்லை” என எழுதப்பட்ட விளம்பரத்தை வைத்திருந்தார். அவரை சூழ்ந்துக் கொண்ட பாஜகவினர் அவரை தாறுமாறாக திட்டி அவர் வைத்திருந்த விளம்பரத்தைக் கிழித்து அங்கிருந்து துரத்தினார்கள்.
இது குறித்து பாஜக தலைவர் திலீப் கோஷ. “அந்த பெண்ணின் ஜாதகம் நன்றாக இருந்ததால் அவர் வைத்திருந்த விளம்பரம் மட்டும் கிழிக்கப்பட்டது. அவருக்கு ஒன்றும் நடக்காதது குறித்து அவர் நன்றி சொல்ல வேண்டும்.
எங்கள் தொண்டர்கள் செய்தது சரியே. குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஏன் எப்போதும் எங்கள் பேரணிகளில் வந்து போராடுகிறார்கள்? நாங்களும் இதுவரை பொறுமையாக இருந்தோம்”எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த மாணவி காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர், “பாஜக உறுப்பினர்கள் என்னை தாறுமாறாக திட்டினார்கள். அத்துடன் திலீப் கோஷ் என்னைப் பற்றி தவறாகப் பேசியதாக கேள்விப்பட்டேன்.
அவர் என்னைப் பற்றி பாலியல் விமர்சனம் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரது இந்த விமர்சனம் பெண்களுக்கு எஇந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதைத் தெரியப்படுத்தி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஷமிக் லகிரி, “அவருடைய விமர்சனம் அவருடைய மற்றும் அவர் கட்சியின் வக்கிர மற்றும் தவறான மனப்போக்கைக் காட்டுகிறது” எனக் கூறி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மனோஜ் சக்ரவர்த்தி தனது கருத்துக்கு திலீப் கோஷ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி உள்ளார்