மத்திய மியான்மரில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் (10 மைல்) தொலைவில் உள்ளூர் நேரப்படி மதியம் 12:50 மணியளவில் (0620 GMT) 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக USGS தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் நேபிடாவில் சாலைகள் வளைந்தும், உருகுலைந்தும் போயுள்ளது.
இந்த நிலநடுக்கம் சீனா மற்றும் தாய்லாந்திலும் உணரப்பட்டது, பாங்காக்கில் சில மெட்ரோ மற்றும் லைட் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
வடக்கு தாய்லாந்து வழியாகவும் தலைநகர் பாங்காக்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, அங்கு கட்டிடங்கள் குலுங்கியதால் குடியிருப்பாளர்கள் தெருக்களுக்குள் ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து தெற்கு தீவான ஃபூகெட்டுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு நிலநடுக்கம் தொடர்பாக அவசர கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார்.
சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பெய்ஜிங்கின் நிலநடுக்க நிறுவனம் தெரிவித்துள்ளது, இது 7.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
மியான்மரில் நிலநடுக்கங்கள் பொதுவானவை, அங்கு 1930 மற்றும் 1956 க்கு இடையே நாட்டின் மையப்பகுதி வழியாக வடக்கிலிருந்து தெற்கே ஓடும் சாகைங் ஃபால்ட் அருகே 7.0 ரிக்டர் அளவு அல்லது அதற்கு மேற்பட்ட ஆறு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்று USGS தெரிவித்துள்ளது.