டில்லி:
25 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டில்லி அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘டில்லி கலால் வரி சட்டப்படி 25 வயதுக்கு குறைவானர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வது குற்றமாகும். இதை டில்லி அரசு கடுமையான முறையில் நடைமுறைபடுத்தி வருகிறது. மதுபானம் வாங்க அல்லது குடிக்க வரும் வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் எழுந்தால் வயதுக்கான ஆதாரத்தை கேட்டு பெற வேண்டும்.
இதையும் மீறி வயது குறைந்தவர்களுக்கு மதுபான விற்கும் ஓட்டல், ரெஸ்டாரென்ட், பார், கிளப், பப் ஆகியவற்றின் உரிமம் ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் டில்லி ஹவுஸ் காஸ் பகுதியில் வயது குறைந்தவர்களுக்கு மதுபானம் வழங்கி பிரபலமான பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்த மதுபான விற்பனை கூடங்களின் திடீர் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த வயது வரம்பை 21 ஆக குறைக்க வலியுறுத்தி 2015ம் ஆண்டு டில்லி அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து பழைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.