சென்னை; கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏழை நெசவு தொழிலாளர்களை ஏமாற்றி அதிக அளவில் பணம் கொடுப்பதாக கூறி கிட்னி திருட்டு அரங்கேறி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் திமுக எம்எல்ஏவின் தனலட்சுமி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவமனையில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட இரண்டு திமுக நபர்களின் மருத்துவமனையை முழுமையாக மூடி சீல் வைக்க வேண்டும் என்றும், கிட்னி திருட்டுக்கு காரணமான வர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக, பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2019 -ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியவர், தற்போது கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. கிட்னி திருட்டு தொடர்பாக மற்ற மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய வினித் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த குழு முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வந்து விடும். அதைத்தொடர்ந்து, கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிட்னி திருட்டு விவகாரத்தை கிட்னி முறைகேடு என்று பேசியதற்கு அண்ணாமலை கடுமையான எதிர்வினையாற்றி உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்றது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தது கிட்னி திருட்டு இல்லை முறைகேடு என்று தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா?.
இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. ஒருவேளை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சொல்லும் இந்த முறைகேட்டில் இடைத்தர கராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தனை ஏன் இன்று வரை கைது செய்யவில்லை.
மேலும், கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண் துடைப்புக்காக நடவடிக்கை எடுத்துவிட்டால் மட்டும் போதுமா?.
இது தான் திமுக ஆட்சியின் லட்சணமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவை சேர்ந்த ஆனந்தன் என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் வறுமை நிலையில் உள்ள விசைத்தறி தொழில் செய்து வரும் இரு பெண்களிடம் ரூபாய் 2 லட்சம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்களால் வட்டியும் அசலையும் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் திணறி வந்தனர். இந்த நிலையில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு ஆனந்தன் வற்புறுத்தி வந்தார். இதனிடையே, அந்த பெண்களை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கிட்னியை திருடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தான் தற்போது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள மக்களிடம் கிட்னியை திருடி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
மேலும், கிட்னி திருட்டு விவகாரத்தில் போலி சான்றிதழ் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அந்த மருத்துவமனையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல திருச்சி சிதார் மருத்துவமனையிலும் விசாரணை நடத்தப்பட்டு, அங்கு அறுவை சிகிச்சை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வறுமையை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி கிட்னியை திருடி லட்ச கணக்கில் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் இன்று தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.