ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா இப்போது அதிலிருந்து கௌரவமாக வெளியேறுவது எப்படி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஹார்முஸ் கடல்சந்தி முழுமையாக திறக்கப்படாவிட்டாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை முடிக்கத் தயாராக இருப்பதாக தனது ஆலோசகர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையிலேயே இருந்தாலும், போரை நீட்டிக்காமல் முடிக்க வேண்டும் என்பதே ட்ரம்பின் நிலைப்பாடு என கூறப்படுகிறது. இதனால் அந்த முக்கிய கடல் பாதையில் ஈரானின் கட்டுப்பாடு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

கடந்த சில நாட்களில், இந்த கடல்சந்தியை மீண்டும் திறக்க முயற்சித்தால், போர் 4 முதல் 6 வாரங்கள் என்ற காலவரம்பை மீறி நீளும் என்று ட்ரம்பும் அவரது குழுவும் மதிப்பீடு செய்துள்ளனர்.

இதனால், ஈரானின் கடற்படை மற்றும் ஏவுகணை திறனை பலவீனப்படுத்துவது போன்ற முக்கிய இலக்குகளை அடைந்து, தற்போதைய மோதலை குறைக்க வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.

அதே நேரத்தில், வர்த்தகப் போக்குவரத்து சீராகத் திரும்ப வேண்டும் என்பதற்காக ஈரான் மீது தூதரக அழுத்தமும் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அது பலிக்காவிட்டால், ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகள் இணைந்து அந்த கடல்சந்தியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவ நடவடிக்கைகள் இன்னும் ஒரு விருப்பமாக இருந்தாலும், அது உடனடி முன்னுரிமை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா-இஸ்ரேல் நடவடிக்கையில் இணைந்து செயல்படாததை விமர்சித்தார்.

“தாமதமாக இருந்தாலும் தைரியம் காட்டுங்கள். அந்த கடல்சந்தியை நேரடியாகக் கைப்பற்றுங்கள். இனிமேல் உங்களுக்காக நீங்கள் போராட கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்கா எப்போதும் உதவாது.

ஈரான் பெரும்பாலும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. கடினமான பகுதி முடிந்துவிட்டது. உங்களுக்கான எண்ணெயை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள், முடியாவிட்டால் அமெரிக்காவிடம் இருந்து வாங்குங்கள், எங்களிடம் ஏராளமாக இருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]