திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாந்தங்கல் கிராமத்தில் பெருங்கற்கால இரும்பு உருக்காலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஈட்டி, கத்தி, கோடாரி, வேல் உள்ளிட்ட பொருட்களைச் செய்யக்கூடிய இரும்பு உருக்காலைக்கான அமைப்பும் அதன் கழிவு பொருட்களும் இங்கு கிடைத்திருக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்ட மரபுசார் அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த மூ.பழனி, விஜயன் ஆகியோர் வந்தவாசி வட்டத்தில் உள்ள குணகம்பூண்டி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் உள்ள வரலாற்று தடயங்களை ஆய்வு செய்தபோது இது தெரியவந்திருக்கிறது.
இரும்பு உருக்கு கழிவுகள் மற்றும் சுடுமண்ணாலான குழாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரும்பு இருக்கும் உலைகளை எரியூட்ட இந்த குழாய்கள் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பெருங்கற்கால பொருட்கள் கிடைக்கப்பெற்ற மாந்தாங்கல் கிராமத்தின் அருகில் சமண தடங்கள் அதிகம் காணப்படுகிறது. இக்கிராமத்தின் சாலையோரம் இருந்த ஒரு பெரிய கல்லை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அகற்றிய போது கிடைக்கப்பெற்ற ஈமப்பேழை திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மாந்தாங்கல் பகுதியில் தொல்லியல் துறையினர் அகழ்வாய்வு செய்தால் மேலும் தகவல்கள் கிடைக்கலாம் என்று இந்த அமைப்பினர் கருதுகின்றனர்.