டெல்லி:

நாடாளுமன்ற நிதி நிலைக் குழுவுக்கு ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்திருப்பதாவது:

“கடந்த நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு முன்பே புதிய ரூ. 500, ரூ. 2000 நோட்டுக்கள் குறிப்பிட்ட அளவு இருப்பு அச்சடித்து வைக்கப்பட்டிருந்தது. பணமதிப்பு தொடர்பாக மத்திய அரசுடன் நடந்த விவாதம் குறித்த தகவல்கள் ரகசியம் என்பதால் அவை பதிவு செய்யப்படவில்லை” என்றார்.

மேலும், அவர் கூறு¬கியில், ‘‘பணமதிப்பிழப்பால் மக்களுக்கு குறைந்த அளவில் பாதிப்பு ஏற்படும் வகையிலும், இதை மக்கள் எதிர்கொள்வதற்கு ஏதுவான அனைத்து பணிகளையும் ஆர்பிஐ செய்தது. ரூபாய் நோட்டு அச்சடிப்பது, அதற்கான தாள்கள், இங்க் உள்ளிட்ட கச்சா பொருட்களின் தேவை குறித்து மத்திய அரசுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’’ என்று எழுத்துப்பூர்வ பதிலில் படேல் தெரிவித்துள்ளார்.

‘‘அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே புதிய ரூ. 500,ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட தேதி அன்று குறிப்பிட்ட அளவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து இருப்பு வைக்கப்பட்டிருந்தது’’ என்று படேல் தெரிவித்துள்ளார்.

கருப்பு பணம் ஒழிப்பு, தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துதல், கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கத்தோடு கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுக்கள் திரும்பபெறப்பட்டது. இதனால் பெரிய அளவில் பண பற்றாகுறை ஏற்பட்டது.

கடந்த நவம்பர் 8ம் தேதி வரை 17,165 மில்லியன் எண்ணிக்கையிலான ரூ. 500 நோட்டுக்களும், 6,858 எண்ணிக்கையிலான 1000 ரூபாய் நோட்டுக்களும் என மொத்தம் ரூ. 15.44 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்ததாக ஆர்பிஐ நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

‘‘ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் இருந்த போதே 2016ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு தொடர்பான ஆலோசனைகள் மத்திய அரசுடன் தொடங்கியது. ரகுராம் ராஜனோடு பணமதிப்பிழப்பு தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை கொண்டதற்கான ஆதாரமாக ஒரு பதிவுகள் கூட ஆர்பிஐ வசம் இல்லை’’ என்று படேல் தெரிவித்துள்ளார்.