அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் லாரியில் ஏற்றிச் சென்ற சுமார் 14 மில்லியன் தேனீக்கள் தப்பியதால் அந்தப் பகுதி முழுவதும் தேனீக்களின் இரைச்சலால் சலசலப்பு ஏற்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டுக்கு சற்று தெற்கே, லிண்டன், வாஷிங்டன் அருகே, கனடிய எல்லைக்கு அருகில், அதிகாலை 4 மணியளவில், சுமார் 70,000 பவுண்டுகள் (31,751 கிலோகிராம்) தேனீக் கூட்டங்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததாக வாட்காம் கவுண்டி ஷெரிப் அலுவலகம் சமூக ஊடகப் பதிவுகளில் தெரிவித்துள்ளது.

அபாயகரமான ஒரு வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டிரெய்லர் ஒரு பள்ளத்தில் உருண்டதாகவும் அதில் ஓட்டுனர் எந்தவித காயமுமின்றி தப்பியதாக மாவட்ட அவசரநிலை மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் லாரி கவிழ்ந்ததை அடுத்து அதிலிருந்த தேனீ வளர்க்கும் பெட்டிகள் சரிந்து விழுந்ததில் அதிலிருந்த தேனீக்கள் வெளியேறின.
இதனையடுத்து மாவட்ட பொதுப்பணி ஊழியர்கள் மற்றும் தேனீ நிபுணர்கள் தவிர தேனீ வளர்ப்பாளர்கள் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் அந்த தேனீக்களை மீண்டும் அந்த பெட்டிக்குள் மீட்டமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முதலில் ராணித் தேனீயைக் கண்டுபிடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவர்கள் அதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் மற்ற தேனீக்கள் அனைத்தையும் அதன் கூடுகளுக்கு திரும்ப தேவையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
முடிந்த வரை எத்தனை அதிகம் தேனீக்களை காப்பாற்ற முடியுமோ அத்தனை அதிக தேனீக்களை காப்பாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் போது அந்தப் பகுதியில் போவோர் வருவோரை தேனீக்கள் கொட்ட வாய்ப்புள்ளதை அடுத்து பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்ட அதேவேளையில், உள்ளூர் ஊழியர்கள் சிலர் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க ஷெரிப் அலுவலக கார்களில் ஏறிப் பறந்தனர்.
தேனீக்கள் உணவு விநியோகத்திற்கு மிக முக்கியமானவை, கொட்டைகள், காய்கறிகள், பெர்ரி, சிட்ரஸ் மற்றும் முலாம்பழம் உட்பட 100 க்கும் மேற்பட்ட பயிர்களில் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன.
தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கையாளர்கள் பல ஆண்டுகளாக குறைந்து வருகின்றனர், மேலும் நிபுணர்கள் பூச்சிக்கொல்லிகள், ஒட்டுண்ணிகள், நோய்கள், காலநிலை மாற்றம் மற்றும் பல்வேறு உணவு விநியோகம் இல்லாததைக் குற்றம் சாட்டுகின்றனர்.