டோக்லாம்

சீன வீரர்கள்  ஆயிரத்துக்கும் மேல் இன்னும் எல்லைப் பகுதியில் உள்ளனர்.

இந்திய சீன எல்லையில் குவிக்கப்பட்ட இரு நாடுகளின் போர் வீரர்கள் திரும்பப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது தெரிந்ததே.   அதன் படி இந்திய வீரர்களை அரசு திரும்ப அழைத்து விட்டது.  இந்திய அரசைப் பொருத்தவரை இரு நாடுகளுக்கும் இடையில் எந்த ஒரு போரையும் விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.

ஆனால் சீனப்படைகள் முழுமையாக இன்னும் திரும்பப் பெறவில்லை.  சீன அரசு தனது 12000 வீரர்கள், 150 பீரங்கிகள் ஆகியவற்றை அங்கிருந்து அகற்றி விட்டதாக தெரிவித்துள்ளது.  ஆனால் எல்லையில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் சீன வீரர்கள் சுமார் 1000 பேருக்கு மேல் இன்னும் முகாமிட்டுள்ளனர்.  அது மட்டுமின்றி சீன வீரர்கள் தங்குவதற்கு அமைக்கப் பட்ட குடியிருப்புகளும்,  கூடாரங்களும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.  சீனத் தரப்பில் வழக்கமான எல்லைக் காவல் படைகள் மட்டுமே அங்குள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அருணாசல பிரதேச எல்லைப் பகுதிக்கு வரும் சனிக்கிழமை அன்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரப்போவதாக திட்டமிடப்பட்டுள்ளது.   அவருக்கு இந்தப் பகுதியில் இது முதல் பயணமாகும்.   சீனா இந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது எனவும், இந்திய அமைச்சர்கள் யாரும் இங்கு வரக்கூடாது என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.