ஈரோடு:

போலீஸ் துணையுடன் என் கணவரை ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்  கடத்தி உள்ளனர் என்று முகிலன் மனைவி பூங்கொடி குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

பூங்கொடி – முகிலன்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். சமூக ஆர்வலர் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலரும்கூட. இவர் கடந்த மாதம் ( பிப்ரவரி)  15-ந் தேதி ஸ்டெர்லைட் போராட்டம், காவல்துறையினர் துப்பாக்கி சூடு குறித்து முக்கிய தகவல்களை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார். பின்னர் மதுரைக்கு ரெயில் புறப்பட்ட முகிலன் திடீரென காணாமல் மறைந்த விட்டார். இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது. முகிலன் குறித்து தகவல்  தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறையினரும் போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், முகிலனின் மனைவி பூங்கொடி, அவர்களது சொந்த ஊரான சென்னிமலையில் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,

2010-ம் ஆண்டு முதல் முகிலன் தமிழக அளவிலான பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டதாகவும்,  2013-ம் ஆண்டில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதங்கள் சிறையில் இருந்தார் என்றும் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தியதுடன் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் தொடங்கி போராட்டங்கள் நடத்தி வந்ததாகவும் கூறினார்.

முகிலன் மீது  பலமுறை அவர் சிறைக்கு சென்றுள்ளார்… 2018ம் ஆண்டு  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது. அதில் கலந்துகொண்டு மக்களுக்காக போராடினார். கடந்த   பிப்ரவரி மாதம் 13-ந் தேதி சென்னிமலைக்கு வந்த முகிலன் 2 மணி நேரம் மட்டுமே வீட்டில் இருந்தார். அதன்பிறகு தூத்துக்குடி கலவரம் குறித்த போலீசாருக்கு எதிரான சி.டி.யை பிப்ரவரி 15-ந் தேதி சென்னையில் முகிலன் வெளியிட்டார்.

இவருடைய போராட்டத்தில் பல  பெண்களும் கலந்துகொள்வது உண்டு. ஆனால், அதை சம்பந்தப்படுத்தி சிலர் பொய்யான செய்திகளை வெளியிட்டு, அவர்மீது களங்கத்தை உருவாக்கி வருகிறார்கள் என்று கூறியவர்,  நடைபெற உள்ள  பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்கு எதிராக முகிலன் செயல்படுவார் என நினைத்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களே போலீஸ் துணையுடன் சேர்ந்து என் கணவரை கடத்தி வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த  2013-ம் ஆண்டு முகிலனை  யாருக்கும் சொல்லாமல் சில நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தனர். அதுபோல் இப்போதும் கடத்தி சென்றுள்ளனர் என்று குற்றம் சாட்டியவர், பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கடத்தி சென்றவர்களே முகிலனை விட்டுவிடுவார்கள் என நம்புகிறேன் என்று நம்பிக்கையுடன் கூறினார்.