டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்யலாம் என்பதால், தமிழக அரசு, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மக்கள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்நேற்று (ஆகஸ்டு 18) சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று கூறி உள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தூத்துக்கு மாவட்ட மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது. மேலும், அரசியல் கட்சி தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தல் இன்று தமிழகஅரசு சார்பிலும, , மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.