தூத்துக்குடி: மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் தேவைக்காக திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் கூறிய நிலையில், இன்று காலை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெரும்பாலோர் ஆலையை திறக்கக்கூடாது என வலியுறுத்தினர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக, சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைப்போக்கும் வகையில், ஆலைகளை அதிக அளவில் ஆக்சிஜன் தயாரிக்க மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி, மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம், உச்சநீதி மன்றத்தில், நாங்கள் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக தர தயாராக இருக்கிறோம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கொடுமுங்கள் மனு செய்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, மத்தியஅரசும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே, திறக்கலாம் என கூறியது.
இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது. முன்னதாக, ஆலை திறப்பது குறித்து,அந்த பகுதிமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
‘தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதராவளர்கள், எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினரும், பங்கேற்றனர். அப்போது, அங்கு ஆலையை திறக்க வேண்டும் ஒன்று தரப்பினரும், திறக்கக்கூடாது என மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வோக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமதானம் செய்ய முயற்சித்தனர். வாக்குவாதம் முற்றியதால் போலீசார் இருதரப்பினரையும் விரட்டியடித்தனர்.\
இந்நிலையில், சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் பெரும்பாலான மக்கள் வலியுறுத்தினர். முடிவாக ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள்தெரிவித்துள்ள நிலையில் கூட்டம் நிறைவடைந்தது. பெரும்பாலான மக்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக காலை 11 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டியது உள்ளதால் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.