சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில்,  வெளியிடப்பட்ட நெடுஞ்சாலை துறையின் ரூ.160 கோடி பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில்  தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

அரசு சாலை பணிகளை மொத்தமாக பேக்கேஜ் டெண்டர் முறையில் விட்டால் சிறிய ஒப்பந்ததாரர்களின் நிலை என்ன ஆகும்?  என கேள்வி எழுப்பி உள்ளது.

திருச்சி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் புதுக்கோட்டை மாவட்ட சாலைப் பணிக்கான பேக்கேஜ்  டெண்டர் அறிவிப்பை  கடந்த மாதம் (அக்டோபர்) வெளியிட்டார். முன்னதாக இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்த நிலையில்,  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார், ராயர், ரெங்கராஜன் உள்பட ஒப்பந்ததாரர்கள்  8 பேர், அரசின் அரசாணையை எதிர்த்து மதுரை உயர்நீதிமனற் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கண்காணிப்பாளர் சார்பில் ரூ.75 கோடியில் 18 சாலைப் பணிகளுக்கும், நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் திட்டத்தில் ரூ.85 கோடியில் 31 சாலைப் பணிகளுக்கும் பேக்கேஜ் டெண்டர் முறையில் கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாவட்டத்தில் 50 முதல்நிலை ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர்.  ஆனால், அரசு வெளியிட்டுள்ள பேக்கேஜ் முறையால் டெண்டரில் 10 ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சூழல் உள்ளது. இதனால் போட்டிகள் இல்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். வேலைகள் விரைவில் முடியாது. தரமாகவும் இருக்காது.

ஏற்கனவே பொதுப் பணித்துறையில் பேக்கேஜ் டெண்டர் முறை 2021-ல் ரத்து செய்யப்பட்டது. ஆனால், திமுக அரசு, அதை மீண்டும் கொண்டு வந்துள்ளது. அதற்கான அரசாணை யும் வெளியிடப்பட்டு உள்ளது.  பேக்கேஜ் டெண்டரால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.55 ஆயிரம் கூடுதல் செலவாகும். இருப்பினும் நெடுஞ்சாலைத் துறையில் பேக்கேஜ் டெண்டர் முறை தொடர்வது துரதிர்ஷ்டவசமானது.

எனவே நெடுஞ்சாலைத்துறையில் பேக்கேஜ் டெண்டரை அனுமதிக்கும் அரசாணையை ரத்து செய்தும், அதுவரை அந்த அரசாணையை செயல்படுத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியகிளாட் அமர்வில்  விசாரணைக்கு வந்தது.  விசாரணையைத் தொடர்ந்து,  “இதுபோன்று அரசு சாலை பணிகளை மொத்தமாக பேக்கேஜ் டெண்டர் முறையில் விட்டால் சிறிய ஒப்பந்ததாரர்களின் நிலை என்ன ஆகும்?  என கேள்வி எழுப்பியதுடன், அரசு பணிகளை நம்பி உள்ள அவர்கள்  எப்படி முன்னேற முடியும்? இது போன்ற மொத்த ஒப்பந்த முறைகள்  பெரிய ஒப்பந்ததாரர்கள் மட்டும் வளர்ச்சி அடையும் வகையில் உள்ளது” என கருத்து தெரிவித்த நீதிபதிகள்  தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.