உ.பி. மாநிலம் நொய்டாவில் கூகுள் மேப் பார்த்து கொண்டு கார் ஓட்டிச் சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் 30 அடி பாதாள சாக்கடைக்குள் விழுந்ததால் பலியானார்.
டெல்லி மண்டவாளி பகுதியைச் சேர்ந்தவர் பரத் பாஹ்டி இவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மனிசாரில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று கிரேட்டர் நொய்டா, கிரிதர்பூர் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தனது காரில் சென்றுள்ளார்.
திருமணம் நடைபெறும் இடம் அதிக பரிச்சயம் இல்லாத இடம் என்பதால் கூகுள் மேப் உதவியுடன் பரத் கார் ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆனால், சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டி இருப்பதை கவனிக்காமல் வேகமாக சென்ற பரத்தின் கார் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.
மதியம் 2:30 மணிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து அந்தவழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் காரில் படுகாயத்துடன் இருந்த பரத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், பலத்த காயமடைந்த பரத் பாஹ்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த விபத்திற்கு சாலையில் பள்ளம் தோண்டி போட்டுவிட்டு தடுப்பு கூட அமைக்காத உ.பி. காவல்துறையினரை நொய்டா மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.