சென்னை: மக்கள் மன்ற உறுப்பினர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு எந்தவொரு  அரசியல் கட்சியிலும் சேரலாம் என ரஜினி மக்கள் மன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

அரசியலுக்கு வருவதாக பல ஆண்டுகளாக கூறிவந்த ரஜினி, திடீரென உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால், அவருக்காக பல ஆண்டுகாலம் ஊழைத்த அவரது ரசிகர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள் கடுமையாக அதிர்ச்சி அடைந்த நிலையில், மாற்றுக்கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

நேற்று (18/01/2021) திமு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலாளர் திரு. ஆர்.கணேசன் மற்றும் தலைமைக்குழு தொழில்நுட்ப அணி தலைவர் திரு. கே.சரவணன் இராமநாதபுரம் மாவட்ட இணைச்செயலாளர் திரு. ஏ.செந்தில்வேல் இராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் திரு. எஸ்.முருகானந்தம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இது ரஜினி மக்கள் மன்றத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினார், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத்தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது. என கூறப்பட்டு உள்ளது.