பெங்களூர்:
கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, வரும் 28ந்தேதி மாநிலம் தழுவிய பந்த் நடைபெறும் என்று கூறினார்.
கர்நாடகாவில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி, இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் கர்நாடக சட்டமன்றம் இன்று கூடியது. மதிய இடைவேளைக்கு பிறகு முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.
அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, குமாரசாமி தலைமையிலான அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதன் காரணமாக வரும் 28ந்தேதி மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்போவதாக கூறி, சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் அவரது கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபை வளாகத்தில் பேசிய பாஜ எம்எல்ஏ அசோகா கூறும்போது, நாங்கள் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தோம். ஆனால், முதல்வர் குமாரசுவாமி விவசாயி கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. இதன் காரணமாக நாங்கள் கோபமாக இருக்கிறோம்.
குமாரசாமி அரசை எதிர்த்து, மாநில அளவிலான பந்த் மே 28 ம் தேதி நடத்தவுள்ளோம் என்று கூறினார்.