பெங்களூர்:

வருமான வரி அதிகாரிகள் வீடுகளில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில், காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசுக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்து வரும் பாஜக, தற்போது வருமான வரித்துறையை ஏவி விட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , கர்நாடக அமைச்சர் புட்டசாமி மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில்  வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பையும் மத்திய அரசின் பழிவாக்கும் நோக்கையும் பிரதிபலிக்கிறது.

தற்போது நாடு முழுவதும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நேரத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவது முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது

இதையடுத்து, இன்று மாலை பெங்களூரிலுள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக, முதல்வர்  குமாரசாமி, காங்கிரசின் சித்தராமையா தலைமையில் இரு கட்சியினரும் கூட்டாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாநில அமைச்சர்கள் உள்பட ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் குவிந்தன்ர்.

கூட்டத்தினரிடையே பேசிய முதல்வர் குமாரசாமி, மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்து உள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் தேவலோகத்தில் இருந்து குதித்து வந்தவர்களா என்று விமர்சித்தவர்,  நீங்க ரெய்டு நடத்தவும், ரெய்டு நடத்தாமல் இருக்கவும் எப்படி டீல் பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியாது என நினைத்துக் கொண்டு உள்ளீர்களா? என்று சரமாரியாக கேள்வி விடுத்தவர்,  மாநிலத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில், மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு காவல்துறையை கொண்டு  நாங்களும் ரெய்டு நடத்த  தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறேன் என்று ஆவேசமாக எச்சரிக்கை விடுத்தார்.

தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் வீடுகளில் மட்டும் ரெய்டு நடத்தப்படுவது தவறானது என்றவர், அதைத்தான் நாங்கள்  எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

மோடி ஏதோ சாதனையை சொல்லப்போகிறார் என்று பாத்ரூமில் இருந்தவர்கள் கூட  வெளியே வந்து  டிவி முன்பு வந்து உட்கார்ந்தால், ஆனால் அவரோ, விஞ்ஞானிகள் செய்த சாதனையை தானே நிகழ்த்தியதுபோல பேசிவிட்டு சென்றுள்ளார் என்று விமர்சித்தவர்,. விஞ்ஞானிகள் சாதனை வருமான வரித்துறை சோதனை போன்ற அரசியல் மட்டுமின்றி, பலனற்று போன செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்திவிட்டோம் என்று அறிவித்து தேர்தல் லாபம் பார்க்க முயன்ற சின்னத்தனமான அரசியல் நடவடிக்கை.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.