சென்னை: கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏப்ரல் 3ந்தேதி அன்று மதுரையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டான் பங்கேற்க உள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற உள்ள மாநில உரிமைகள் பாதுகாப்புக் கருத்தரங்கில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்கவிருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் நிறைவு நாளன்று பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத் உள்பட அகில இந்தியத் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா். இந்த மாநாட்டில், மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை வழங்காமல் நிறுத்துவது, அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பறிப்பது, மொழியை திணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக மாநில அமைச்சா்கள் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பதற்கு கட்டணம் வசூலிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினா்களின் எதிா்ப்பையும் மீறி, இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எளிய மக்களின் வாழ்வாதாரமான ஆடு, மாடு உள்ளிட்டவை வளா்ப்புக்கு கட்டணம் விதிப்பது கண்டனத்துக்குரியது.
தமிழக முதல்வா் இந்த விஷயத்தில் தலையிட்டு இந்தத் தீா்மானத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அறிவித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு. போராட்ட அறிவிப்பை வெளியிட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்களை மிரட்டும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக் கூடாது.
இவ்வாறு கூறினார்.