மாலே
மாலத்தீவுகளில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அந்நாட்டு அரசு 45 நாட்களுக்கு அவசரநிலைச் சட்டத்தை அறிவித்தது. அதை ஒட்டி முன்னாள் அதிபர், நீதிபதிகள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அது மட்டும் இன்றி முன்னாள் அதிபர் மற்றும் இரு நீதிபதிகள் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றுடன் அவசர நிலைச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதை அரசு நீட்டிக்காது என மாலத்தீவு தூதர் அறிவித்திருந்தார். இன்று மாலத்தீவின் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமின் அப்துல் கயூம் இன்று அவசரநிலைச் சட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.
மாலத்தீவுகளின் முக்கிய வருவாய்த்துறையான சுற்றுலாத் துறை அவசரநிலைச் சட்ட அறிவிப்பால் அடியோடு முடங்கிப் போனது. தற்போது அவசரநிலைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து மீண்டும் மாலத்தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரிக்கும் என கூறப்படுகிறது.