சென்னை: நகர்ப்பகுதிகளின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மாநில அரசே மேற்கொள்ளும் வகையில், அவைகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசினார். அப்போது, அணைக்கட்டு தொகுதி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், விரிஞ்சிபுரத்தில் பழுதடைந்த பாலாறு தரைப் பாலத்துக்கு மாற்றாக புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை 2022-23ஆம் ஆண்டில் மேற்கொள்ள கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், முன்னுரிமை அடிப்படையில் விரைந்து பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதில் கூறியவர், சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகொண்டாவில் 7 கி.மீ., தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், நில எடுப்புப் பணிகளுக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்தவர், விக்கிரவாண்டி – தஞ்சாவூர் சாலை மோசமான சூழலில் இருப்பதால், அதை சீரமைக்கும் பணிகள், 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வட மாநிலத்தைச் சேர்ந்த படேல் Infrastructure நிறுவனம் தான் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி NHAI-க்கு கடிதம் எழுதப்பட்டள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டு இப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசியவர், “இனி நகர்ப்பகுதிகளின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மாநில அரசே மேற் கொள்ள வேண்டி, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று மாநில அரசே நகர்ப்பகுதிகளில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.