டில்லி
கட்டுமான கூடுதல் வரி நிதியில் இருந்து மாநில அரசுகள் சுமார் 3.5 கோடி தொழிலாளர்களுக்கு ரு.4315 கோடி அளித்துள்ளன.
கட்டுமான கூடுதல் வரி என்பது கட்டுமான செலவுக்கான வரியின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியாகும். இந்த தொகையை மாநில அரசுகள் வசூல் செய்து ஒரு நிதியாக வைத்திருக்கும். இது கட்டுமான செலவு ரூ. 10 லட்சத்தைத் தாண்டும் போது 1% வசூலிக்கப்படும். ஒரு சில மாநிலங்களில் இது 2% வரியாக உள்ளது இது கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக வசூலிக்கப்படும் வரி ஆகும்.
இந்த நிதியில் இருந்து கட்டுமான தொழிலாளர்களின் நலத் திட்டங்கள் அமைத்து நிதி ஒதுக்கப்படும். இது வரை இந்த நிதியில் சுமார் ரூ.31000 கோடி செலவிடப்படாமல் உள்ளது. தற்போது கொரோனா பரவலால் பணி இழந்து வாடும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இந்த நிதியில் இருந்து ஒவ்வொரு மாநிலமும் உதவி செய்ய மத்திய அரசு கடந்த மார்ச் 26 ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையொட்டி மொத்தம் செலவிடப்படாமல் உள்ள ரூ.31000 கோடியில் இருந்து ஜூன் 2 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் ரூ.4313 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தத் தொகையில் 14% ஆகும். இந்த தொகை மொத்தம் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் சுமார் 3.5 கோடி தொழிலாளர்களுக்கு நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக டில்லியில் ஒருவருக்கு ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாகப் பஞ்சாப் மற்றும் கேரளாவில் ஒவ்வொருவருக்கும் ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது. இமாசலப் பிரதேசம், மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.2000 மற்றும் ஒடிசாவில் ரூ.1500 வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 21 மாநிலங்களிலும் ஒவ்வொருவருக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த மூன்று மாதங்களாகக் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்
இந்த நிதி உதவியின் மூலம் உதவிப் பெற்றுள்ள பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களில் பெரும்பாலானோர் புலம் பெயர் தொழிலாளர்கள் ஆவார்கள்.